2 தெசலோனிக்கேயர் 3:8-18

2 தெசலோனிக்கேயர் 3:8-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை. இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம். ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.” உங்களில் சிலர் சோம்பேறிகளாய் இருக்கிறார்கள் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அவர்கள் எவ்வித வேலையும் செய்யாமல், பிறர் வேலையில் ஈடுபடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வேலையில் நிலைத்திருந்து, தங்களுடைய உணவுக்காகத் தாங்களே உழைக்க வேண்டும் என்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் நாங்கள் கட்டளையிட்டு வேண்டிக்கொள்கிறோம். நீங்களோ பிரியமானவர்களே, நல்லதைச் செய்வதில் மனந்தளர வேண்டாம். இந்தக் கடிதத்திலுள்ள அறிவுறுத்தலுக்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அப்படிப்பட்டவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கமடையும்படிக்கு, அவனோடு கூடிப்பழக வேண்டாம். ஆனால், அவனைப் பகைவனாக எண்ணவேண்டாம்; ஒரு சகோதரனாக எண்ணி எச்சரியுங்கள். இப்பொழுதும் சமாதானத்திலும் அமைதியிலும் கர்த்தர்தாமே, எல்லா வேளைகளிலும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பாராக. கர்த்தர் உங்கள் எல்லோருடனும் இருப்பாராக. பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை, என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். இதுவே எனது கடிதங்களுக்கெல்லாம் அடையாளமும், நான் எழுதும் முறையும் இதுவே. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை, உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. ஆமென்.

2 தெசலோனிக்கேயர் 3:8-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள். மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள். ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

2 தெசலோனிக்கேயர் 3:8-18 பரிசுத்த பைபிள் (TAERV)

அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும், மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம். உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள். இந்த நிருபத்தில் சொல்லப்பட்டவற்றிற்கு எவனொருவன் பணிய மறுக்கிறானோ அவன் யாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவனோடு சேராதீர்கள். பிறகு அதற்காக அவன் வெட்கப்படுவான். ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள். சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

2 தெசலோனிக்கேயர் 3:8-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். சமாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.