2 தெசலோனிக்கேயர் 3:6-10

2 தெசலோனிக்கேயர் 3:6-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்றுநடவாமலும், ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

2 தெசலோனிக்கேயர் 3:6-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது, சோம்பேறிகளாய் வாழும் ஒவ்வொரு சகோதரரையும்விட்டு விலகியிருங்கள். எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டதின்படி நடக்காதவர்களைவிட்டு விலகியிருங்கள். எங்களுடைய முன்மாதிரியை எவ்விதம் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. நாங்கள் உங்களுடன் இருந்தபோது சோம்பேறிகளாய் இருக்கவில்லை. யாரிடமும் உணவை இலவசமாய்ப் பெற்று, நாங்கள் சாப்பிட்டதில்லை. மாறாக, நாங்கள் இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தோம். இதனால், உங்களில் யாருக்கும் பாரமாய் இருந்ததில்லை. இவ்விதமான உதவியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எங்களுக்கு உரிமை இல்லை என்பதனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் நீங்கள் பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரியாக நாங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவே, அப்படிச் செய்தோம். ஏனெனில், நாங்கள் உங்களுடன் இருந்தபோதுங்கூட, இந்த கட்டளையை நாங்கள் உங்களுக்குக் கொடுத்தோம்: “ஒருவன் வேலைசெய்யாவிட்டால், அவன் சாப்பிடவும் கூடாது.”

2 தெசலோனிக்கேயர் 3:6-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல், ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம். ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

2 தெசலோனிக்கேயர் 3:6-10 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும், மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.