2 தெசலோனிக்கேயர் 1:3-12
2 தெசலோனிக்கேயர் 1:3-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது. ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம். இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள். இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார். துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடு, பற்றியெரியும் நெருப்பில் பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, இந்த நீதி நிகழும். அப்பொழுது அவர் இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தண்டிப்பார். நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள். இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம். நமது இறைவனிடமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து வரும் கிருபையினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்படவேண்டும். நீங்களும் அவரிலே மகிமைப்படவேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 1:3-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சகோதரர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனுக்கு நன்றிசெலுத்த கடனாளிகளாக இருக்கிறோம்; உங்களுடைய விசுவாசம் மிகவும் பெருகுகிறதினாலும், நீங்களெல்லோரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறதினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாக இருக்கிறது. நீங்கள் சகிக்கிற எல்லாத் துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினாலே உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடுகள் அநுபவிக்கிறவர்களாக இருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்கள் என்று எண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமானத் தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே ஆதாரமாக இருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடுகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாக இருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைக் கொடுக்கும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்த நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராகவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை நம்பினபடியினாலே உங்களிடத்திலும், நம்புகிறவர்களெல்லோரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராகவும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் விலகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். ஆகவே, நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்படிக்கு; நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குத் தகுதியுள்ளவர்களாக்கவும், தமது தயவுள்ள விருப்பம் முழுவதையும் விசுவாசத்தின் செயல்களையும் பலமாக உங்களிடம் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.
2 தெசலோனிக்கேயர் 1:3-12 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும், மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள். தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான். எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார். பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார். என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள். அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும், மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
2 தெசலோனிக்கேயர் 1:3-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாக்கி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக. நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.