2 சாமுவேல் 9:6-13
2 சாமுவேல் 9:6-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணக்கம் தெரிவித்தான். அப்போது தாவீது அவனிடம், “மேவிபோசேத்தே” என்றான். அதற்கு அவன், “இதோ உமது அடியேன்” என்றான். தாவீது அவனிடம், “பயப்படாதே; உன் தகப்பன் யோனத்தானின் நிமித்தம் நிச்சயம் உனக்கு தயவுகாட்டுவேன். உன் பாட்டன் சவுலுக்கு சொந்தமாயிருந்த நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும் நீ எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவாய்” என்றான். இதைக் கேட்ட மேவிபோசேத் தாவீதை வணங்கி, “செத்த நாய் போன்ற என்னை நீர் கவனத்தில்கொள்வதற்கு உமது அடியவன் எம்மாத்திரம்?” என்றான். அதன்பின் அரசன் சவுலின் பணியாளனாயிருந்த சீபாவை அழைப்பித்து அவனிடம், “சவுலுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் சொந்தமாயிருந்த யாவற்றையும் உன் எஜமானின் பேரனுக்குக் கொடுத்துள்ளேன். நீயும் உன் மகன்களும் உன் பணியாட்களும் அந்த நிலத்தை அவனுக்காகப் பயிரிடுங்கள். உன் எஜமானுடைய பேரனின் பராமரிப்புக்காக அதன் விளைச்சலைக் கொண்டுவாருங்கள். ஆனாலும் உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எப்போதும் என்னுடைய பந்தியில் சாப்பிடுவான்” என்றான். சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். அப்பொழுது சீபா அரசனிடம், “என் தலைவனாகிய அரசன் எனக்குக் கட்டளையிட்டவைகளை எல்லாம் நான் நிறைவேற்றுவேன்” என்றான். எனவே மேவிபோசேத் அரசனின் மகன்களில் ஒருவனைப்போல் தாவீதின் பந்தியில் சாப்பிட்டு வந்தான். மேவிபோசேத்துக்கு மீகா என்னும் பெயருடைய வாலிபனான ஒரு மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மேவிபோசேத்துக்கு பணியாட்களாயிருந்தார்கள். மேவிபோசேத்துக்கு இரண்டு கால்களும் முடமாயிருந்தபடியாலும், எப்பொழுதும் அரசனுடைய பந்தியில் சாப்பிட்டபடியாலும் எருசலேமிலேயே வாழ்ந்து வந்தான்.
2 சாமுவேல் 9:6-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதிடம் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான். தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன்னுடைய தகப்பனான யோனத்தானுக்காக நான் நிச்சயமாக உனக்கு தயைசெய்து, உன்னுடைய தகப்பனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என்னுடைய பந்தியில் எப்பொழுதும் அப்பம் சாப்பிடுவாய் என்றான். அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான். ராஜா சவுலின் வேலைக்காரனான சீபாவை வரவழைத்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவருடைய குடும்பத்தார்களில் எல்லோருக்கும் இருந்த யாவையும் உன்னுடைய எஜமானுடைய மகனுக்குக் கொடுத்தேன். எனவே, நீ உன்னுடைய மகன்களையும் உன்னுடைய வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, உன்னுடைய எஜமானுடைய மகன் சாப்பிட அப்பம் உண்டாயிருக்க, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன்னுடைய எஜமானுடைய மகன் மேவிபோசேத் எப்பொழுதும் என்னுடைய பந்தியிலே அப்பம் சாப்பிடுவான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து மகன்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்தார்கள். சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானான நான் செய்வேன் என்றான். ராஜாவின் மகன்களில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என்னுடைய பந்தியிலே சாப்பிடுவான் என்று ராஜா சொன்னான். மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பெயருள்ள சிறுவனான ஒரு மகன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த அனைவரும், மேவிபோசேத்திற்கு வேலைக்காரர்களாக இருந்தார்கள். மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் எப்பொழுதும் சாப்பிடுகிறவனாக இருந்தபடியால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு கால்களும் முடமாக இருந்தது.
2 சாமுவேல் 9:6-13 பரிசுத்த பைபிள் (TAERV)
யோனத்தானின் குமாரன் மேவிபோசேத் என்பவன் தாவீதிடம் வந்து முகங்குப்புற விழுந்து வணங்கினான். தாவீது, “மேவிபோசேத்?” என்றான். மேவிபோசேத், “நான் உங்கள் பணியாளாகிய மேவிபோசேத்” என்றான். தாவீது மேவிபோசேத்தை நோக்கி, “பயப்படாதே நான் உனக்கு இரக்கம் காட்டுவேன். உன் தந்தை யோனத்தானிமித்தம் இதைச் செய்வேன். உன் பாட்டனான சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் தருவேன். நீ எப்பொழுதும் எனது பந்தியில் உண்பாய்” என்றான். மேவிபோசேத் மீண்டும் தாவீதை வணங்கினான். மேவிபோசேத், “உங்கள் பணியாளாகிய என்னிடம் நீங்கள் இரக்கம் காட்டுகிறீர்கள். நான் செத்த நாயைக் காட்டிலும் மேலானவன் அல்ல” என்றான். அப்போது தாவீது ராஜா சவுலின் வேலைக்காரன் சீபாவை அழைத்தான். தாவீது சீபாவை நோக்கி, “உன் எஜமானரின் பேரனாகிய மேவிபோசேத்திற்கு சவுல் குடும்பம் மற்றும் சவுலுக்கும் சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன். நீ அந்த நிலத்தைப் பயிர் செய்வாய். உன் குமாரர்களும் வேலையாட்களும் மேவிபோசேத்திற்காக இதைச் செய்ய வேண்டும். நீ பயிர்களை அறுவடைச் செய்து விளைச்சலைச் சேர்ப்பாய். அப்போது உன் எஜமானனின் பேரனான, மேவிபோசேத் உண்பதற்குத் தேவையான உணவைப் பெறுவான். உனது எஜமானின் பேரன், எப்பொழுதும் என் பந்தியில் ஆகாரம் உண்பான்” என்றான். சீபாவிற்கு 15 குமாரர்களும் 20 வேலைக்காரரும் இருந்தனர். சீபா தாவீது ராஜாவை நோக்கி “நான் உங்கள் பணியாள், ஆண்டவனாகிய எனது ராஜா கட்டளையிடுகிற எல்லாவற்றையும் நான் செய்வேன்” என்றான். மேவிபோசேத் ராஜகுமாரனைப்போல் தாவீதின் பந்தியில் உணவுண்டான். மேவிபோசேத்திற்கு மீகா என்னும் சிறிய குமாரன் இருந்தான். சீபாவின் குடும்பத்தின் ஜனங்கள் அனைவரும் மேவிபோசேத்தின் வேலையாட்களாயினர். மேவிபோசேத் இரு கால்களும் முடமானவன். மேவிபோசேத் எருசலேமில் வாழ்ந்தான். ஒவ்வொரு நாளும் அவன் ராஜ பந்தியில் உணவுண்டான்.
2 சாமுவேல் 9:6-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான். தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பிக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான். அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான். ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன். ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்கு பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம் பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.