2 சாமுவேல் 7:8-16
2 சாமுவேல் 7:8-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டுஎடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன். உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார். உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைப்பண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன். உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன். உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
2 சாமுவேல் 7:8-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இப்பொழுதும் நீ என் அடியானாகிய தாவீதிடம் சென்று, ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: என் மக்களாகிய இஸ்ரயேலரின்மேல் அதிபதியாயிருக்கும்படி புல்வெளியில் மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த உன்னை தெரிந்தெடுத்தேன். நீ சென்ற இடங்களிலெல்லாம் நான் உன்னோடுகூட இருந்து உன் பகைவரையெல்லாம் உனக்கு முன்பாக அழித்தேன். இப்பொழுது பூமியிலுள்ள மேன்மையானவர்களின் பெயருக்கு ஒப்பாக உனது பெயரை மேன்மைப்படுத்துவேன். நான் எனது மக்களாகிய இஸ்ரயேலருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அங்கு அவர்களை நிலைநாட்டுவேன். அப்பொழுது அவர்களுக்கு ஒரு சொந்த இருப்பிடம் இருக்கும். அவர்களை ஒருவரும் தொல்லைப்படுத்தமாட்டார்கள். முன்பு அவர்களை கொடியவர்கள் ஒடுக்கியதுபோல் இனி ஒருபோதும் ஒருவரும் ஒடுக்கமாட்டார்கள். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு மேலாக தலைவர்களை நான் ஏற்படுத்திய காலத்திலிருந்து நடந்ததுபோல, அந்தக் கொடியவர்கள் அவர்களை இனிமேலும் ஒடுக்கமாட்டார்கள். உன்னுடைய எல்லாப் பகைவரிடமிருந்தும் நான் உனக்கு ஆறுதல் தருவேன். “ ‘மேலும் யெகோவா அறிவிக்கிறதாவது: யெகோவாவே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார். உனது வாழ்நாள் முடிவுற்று நீ உன் முற்பிதாக்களுடன் படுத்திருக்கும்போது, உனக்கு பிறக்கும் உன் சந்ததியில் ஒருவனை நான் எழுப்பி, அவனுடைய அரசை நான் நிலைநாட்டுவேன். அவனே என் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அவனுடைய அரசாட்சியின் அரியணையை நான் என்றென்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தகப்பனாயிருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் அநியாயம் செய்கிறபோது, மனிதர் பயன்படுத்தும் தடியினாலும் கசையடியினாலும் அவனை நான் தண்டிப்பேன். இருப்பினும் உனக்கு முன்னதாக நான் அகற்றிய சவுலிடமிருந்து எனது அன்பை அகற்றினதுபோல, எனது அன்பை அவனிடமிருந்து அகற்றமாட்டேன். உனது குடும்பமும், அரசும் எனக்குமுன் என்றென்றைக்கும் நிலைநிற்கும். உனது அரியணை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார்’ ” என்றான்.
2 சாமுவேல் 7:8-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து, நீ போன எந்த இடத்திலும் உன்னோடு இருந்து, உன்னுடைய எதிரிகளையெல்லாம் உனக்கு முன்பாக அழித்து, பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயர்களுக்கு இணையான பெரிய பெயரை உனக்கு உண்டாக்கினேன். நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்களுடைய இடத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்புபோலவும், நான் என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலவும், துன்மார்க்கமான மக்களால் இனி சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நியமித்தேன். உன்னுடைய எல்லா எதிரிகளுக்கும் உன்னை விலக்கி, இளைப்பாறவும் செய்தேன்; இப்போதும் யெகோவா உனக்கு வீட்டை உண்டாக்குவார் என்பதைக் யெகோவா உனக்கு அறிவிக்கிறார். உன்னுடைய நாட்கள் நிறைவேறி, நீ உன்னுடைய பிதாக்களோடு படுத்திருக்கும்போது, நான் உனக்குப்பின்பு உனக்கு பிறக்கும் உன்னுடைய சந்ததியை எழும்பச்செய்து, அவன் ராஜ்ஜியத்தை நிலைப்படுத்துவேன். அவன் என்னுடைய நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவனுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கச்செய்வேன். நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனிதர்கள் பயன்படுத்தும் பிரம்பினாலும் மனிதர்களுடைய கசையடிகளினாலும் தண்டிப்பேன். உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடமிருந்து என்னுடைய கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன். உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.
2 சாமுவேல் 7:8-16 பரிசுத்த பைபிள் (TAERV)
“நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். நீ சென்ற எல்லா இடங்களிலும் நான் உன்னோடு இருந்தேன். உனக்காக உன் பகைவர்களை நான் முறியடித்தேன். உலகிலுள்ள மேன்மையான ஜனங்களைப்போல் உன்னையும் புகழ்பெறச் செய்வேன். இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு, நான் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன். நான் இஸ்ரவேலரை நிலை நிறுத்தினேன். அவர்கள் வாழ்வதற்குரிய சொந்த இடத்தைக் கொடுத்தேன். ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு அவர்கள் அலைந்து கொண்டிராதபடிக்கு நான் இதைச் செய்தேன். முன்பு இஸ்ரவேலரை வழிநடத்த நியாயாதிபதிகளை அனுப்பினேன். ஆனால் தீயோர் அவர்களுக்குத் தொல்லைகள் விளைவித்தனர். அத்தொல்லைகள் இப்போது வராது. உனது எல்லாப் பகைவர்களிடமிருந்தும் உனக்கு அமைதியளிக்கிறேன். உனது குடும்பத்தாரை ராஜாக்களாக்குவேன் என உனக்கு வாக்குறுதி அளிக்கின்றேன். “‘உனது முதிர்வயதில், நீ மரித்து உனது முற்பிதாக்களோடு சேர்த்து புதைக்கப்படுவாய். அப்போது உனது சொந்த குமாரனை ராஜாவாக்குவேன். அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு குமாரனாக இருப்பான். அவன் பாவம் செய்கையில், பிறரால் அவனுக்குத் தண்டனை அளிப்பேன். அவர்கள் எனது சாட்டையாக இருப்பார்கள். ஆனால் நான் அவனை என்றும் நேசியாமல் விட்டு விடமாட்டேன். அவனுக்கு உண்மையானவனாக என்றும் இருப்பேன். சவுலிடமிருந்து எனது அன்பையும் இரக்கத்தையும் நீக்கினேன். நான் உன்னிடம் திரும்பியபோது சவுலைத் தள்ளிவிட்டேன். ஆனால் உனது குடும்பத்தாருக்கு அவ்வாறு செய்யமாட்டேன். உனது குடும்பத்தினர் ராஜாக்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.