2 சாமுவேல் 6:12-23

2 சாமுவேல் 6:12-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து, இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள். தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான். அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

2 சாமுவேல் 6:12-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான். அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான். தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள். அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான். பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள். அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன். நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான். சவுலின் மகள் மீகாள் சாகும் நாள்வரை பிள்ளையற்றவளாய் இருந்தாள்.

2 சாமுவேல் 6:12-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள். அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் யெகோவாவுடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து, இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான். அதினால் சவுலின் மகளான மீகாளுக்கு மரணமடையும் நாள்வரைக்கும் பிள்ளை இல்லாமலிருந்தது.

2 சாமுவேல் 6:12-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான். பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான். தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள். சவுலின் குமாரத்தி மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள். தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான். தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் ராஜா தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள். அதற்கு தாவீது மீகாளை நோக்கி, “உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்! இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!” என்றான். சவுலின் குமாரத்தியான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.