2 சாமுவேல் 6:1-22

2 சாமுவேல் 6:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது இஸ்ரயேல் மக்களனைவருக்குள்ளும் தெரிந்தெடுக்கப்பட்ட முப்பதாயிரம்பேரை மறுபடியும் ஒன்று சேர்த்தான். கேருபீன்களுக்கு நடுவில் வீற்றிருக்கும் சேனைகளின் யெகோவாவின் பெயரால் அழைக்கப்பட்ட இறைவனின் பெட்டியைக் கொண்டுவரும்படி, யூதாவிலுள்ள பாலை என்னும் இடத்திற்கு, தாவீதும் அவன் மனிதர் அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த இறைவனின் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றி மலையில் இருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள். அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புதிய வண்டியை நடத்தினார்கள். இறைவனின் பெட்டி அதில் இருந்தது. அதற்கு முன்னால் அகியோ போய்க்கொண்டிருந்தான். தாவீதும் இஸ்ரயேலின் குடும்பத்தார் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட யாழோடும், வீணை, தம்புரா, மேளம், தாளம் ஆகியவற்றோடும் யெகோவாவுக்கு முன்பாக தங்கள் முழு பலத்தோடும் ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். அவர்கள் நாகோனின் சூடடிக்கும் களத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டதினால் ஊசா கையை நீட்டி இறைவனின் பெட்டியை எட்டிப்பிடித்தான். ஊசாவின் பயபக்தியற்ற இச்செயலினால் ஊசாவுக்கு விரோதமாக யெகோவாவின் கோபம் மூண்டது. எனவே அவர் அந்த இடத்திலேயே ஊசாவை அடித்தார். அவன் இறைவனின் பெட்டிக்கு அருகே விழுந்து செத்தான். யெகோவாவின் கோபம் ஊசாவுக்கு விரோதமாய் மூண்டதினால், தாவீது கோபமடைந்தான். அதனால் இந்நாள்வரை அந்த இடம், பேரேஸ் ஊசா என அழைக்கப்படுகிறது. தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, “யெகோவாவின் பெட்டி எப்படி என்னிடம் வரமுடியும்?” என்று கூறினான். எனவே யெகோவாவின் பெட்டியை தன்னுடன் தாவீதின் நகரத்தில் இருக்கும்படி, அதை அங்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை. அதனால், அவன் அதைப் புறம்பே கொண்டுபோய் கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டிலே வைத்தான். யெகோவாவின் பெட்டி கித்தியனான ஓபேத் ஏதோமின் வீட்டில் மூன்று மாதங்கள் இருந்தது. யெகோவா ஓபேத் ஏதோமையும் அவன் குடும்பம் முழுவதையும் ஆசீர்வதித்தார். அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான். அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான். தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். யெகோவாவின் பெட்டி தாவீதின் நகரத்திற்குள்ளே வருகின்றபோது, சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அரசன் தாவீது யெகோவாவுக்கு முன்பாகத் துள்ளிக் குதித்து ஆடுவதைக் கண்டதும் அவள் தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள். அவர்கள் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்து தாவீது அதற்காக அமைத்திருந்த கூடாரத்திற்குள் அதற்குரிய இடத்தில் அதை வைத்தார்கள். அப்பொழுது தாவீது யெகோவாவுக்கு முன்பாக தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினான். தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தியபின் சேனைகளின் யெகோவாவின் பெயராலே மக்களை ஆசீர்வதித்தான். பின்பு அவன் அங்கேயிருந்த இஸ்ரயேலின் திரள்கூட்டமான ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான். பின்பு எல்லா மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி வீட்டிற்குத் திரும்பியபோது, சவுலின் மகள் மீகாள் தாவீதைச் சந்திக்கும்படி அவனிடம் வந்தாள். அவள், “இஸ்ரயேலின் அரசன் தன் பணியாட்களான அடிமைப் பெண்கள் முன்னிலையில் இழிவான ஒருவன் செய்வதுபோல, தன் உடைகளைக் கழற்றியதினால் தன்னை எவ்வளவாய் மேன்மைப்படுத்திக் கொண்டார்!” என்று சொன்னாள். அதற்குத் தாவீது மீகாளிடம், “நான் யெகோவாவுக்கு முன்பாகவே ஆடினேன். அவர் யெகோவாவின் மக்களான இஸ்ரயேலரின்மேல் என்னை ஆளுநனாக நியமித்தபோது, உன்னுடைய தகப்பனையோ அல்லது அவருடைய வீட்டாரில் ஒருவனையோவிட, என்னையே தெரிந்துகொண்டார். நான் யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடுவேன். நான் அதைப் பார்க்கிலும் இன்னும் அதிகமாய் மதிப்பற்றவனாவேன்; எனது பார்வையிலுங்கூட நான் தாழ்மைப்படுவேன். ஆனால் நீ சொல்லிக் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண்களால் நான் கனம்செய்யப்படுவேன்” என்றான்.

2 சாமுவேல் 6:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தாவீது இஸ்ரவேலர்கள் எல்லோருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட 30,000 பேரைக் கூட்டி, கேருபீன்களின் நடுவே அமர்ந்திருக்கிற சேனைகளுடைய யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியை யூதாவிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடு இருந்த அந்த இடத்தைச்சேர்ந்தவர்களும் எழுந்து போய், தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் மகன்களான ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள். அவர்கள் நாகோனின் போரடிக்கும் களம் இருக்கிற இடத்திற்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா தேவனுடைய பெட்டிக்கு நேராகத் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது யெகோவாவுக்கு ஊசாவின்மேல் கோபம் வந்தது; அவனுடைய துணிவினால் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியின் அருகில் இறந்தான். அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததினால் தாவீது துயரமடைந்து, அந்த இடத்திற்கு இந்தநாள்வரை அழைக்கப்படுகிற பேரேஸ்ஊசா என்னும் பெயரிட்டான். தாவீது அன்றையதினம் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவுடைய பெட்டி என்னிடம் வருவது எப்படியென்று சொல்லி, அதைத் தன்னுடைய தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். யெகோவாவுடைய பெட்டி கித்தியனான ஓபேத்ஏதோமின் வீட்டிலே 3 மாதங்கள் இருக்கும்போது யெகோவா ஓபேத்ஏதோமையும் அவனுடைய வீட்டார்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். தேவனுடைய பெட்டியினாலே யெகோவா ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்திற்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். யெகோவாவுடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு காலடி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். தாவீது சணல்நூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, தன்னுடைய முழு பெலத்தோடும் யெகோவாவுக்கு முன்பாக நடனம்செய்தான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் யெகோவாவுடைய பெட்டியை ஆரவார சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். யெகோவாவுடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் நுழைகிறபோது, சவுலின் மகளான மீகாள் ஜன்னல் வழியாகப் பார்த்து, தாவீது ராஜா யெகோவாவுக்கு முன்பாகக் குதித்து நடனம் செய்கிறதைக் கண்டு, தன்னுடைய இருதயத்திலே அவனை அவமதித்தாள். அவர்கள் யெகோவாவுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் இடத்திலே அதை வைத்தபோது, தாவீது யெகோவாவுக்கு முன்பாக சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தியபின்பு, சேனைகளின் யெகோவாவுடைய நாமத்தினாலே மக்களை ஆசீர்வதித்து, இஸ்ரவேலின் திரள்கூட்டமான பெண்கள் ஆண்களான அனைத்து மக்களுக்கும், அவரவர்களுக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சைரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்; பிறகு மக்கள் எல்லோரும் தங்களுடைய வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். தாவீது தன்னுடைய வீட்டார்களை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் மகளான மீகாள் தாவீதுக்கு நேரேவந்து, அற்பமனிதர்களில் ஒருவன் தன்னுடைய ஆடைகளைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய வேலைக்காரர்களுடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய ஆடைகளைக் கழற்றிப்போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எவ்வளவு மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அதற்கு தாவீது மீகாளைப் பார்த்து: உன்னுடைய தகப்பனைவிட, அவருடைய எல்லா வீட்டார்களையும்விட, என்னை இஸ்ரவேலான யெகோவாவுடைய மக்களின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படித் தெரிந்துகொண்ட யெகோவாவுடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைவிட இன்னும் நான் இழிவானவனும் என்னுடைய பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்கும்கூட மகிமையாக விளங்குவேன் என்றான்.

2 சாமுவேல் 6:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் குமாரர்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர். நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான். ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான். கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை “பேரேஸ் ஊசா” என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது. தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான். ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான். ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான். பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான். தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள். சவுலின் குமாரத்தி மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள். தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான். தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் ராஜா தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள். அதற்கு தாவீது மீகாளை நோக்கி, “உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்! இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!” என்றான்.

2 சாமுவேல் 6:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி, கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய், தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள். அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான். தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி, அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான். கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான். அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான். தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து, இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள். தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.