2 சாமுவேல் 23:5-39

2 சாமுவேல் 23:5-39 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“எனது குடும்பம் இறைவனுக்கு உகந்ததாய் இருக்கவில்லையா? அவர் என்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையை செய்யவில்லையா? அதை ஒழுங்குபடுத்தியும், எல்லாப் பக்கத்திலும் பாதுகாத்துமிருந்தாரே. அவர் எனது இரட்சிப்பை முழுமையாக்க மாட்டாரோ. அவர் எனது எல்லா விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டாரோ. கையால் சேர்க்கப்படாத முட்களைப்போல் தீய மனிதர்கள் வெளியே வீசப்பட வேண்டும். ஆனால் முட்களைத் தொடுகிற எவனும் இரும்பு ஆயுதத்தையோ அல்லது ஈட்டியையோ பயன்படுத்துகிறான். அவை கிடக்கும் இடத்திலேயே எரித்துப் போடப்படும்.” தாவீதின் வலிமைவாய்ந்த வீரர்களின் பெயர்கள்: தக்கெமோனியனான யோசேப்பாசெபெத் அந்த மூவரில் முக்கியமானவன். இவன் ஒரு போர்முனையில் எண்ணூறு பேரைக் குத்திக் கொன்றான். அவனுக்கு அடுத்தாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன். இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்து பெலிஸ்தியரை நிந்தித்த வலிமைமிக்க மூவரில் ஒருவன். அவ்வேளையில் இஸ்ரயேலர் பின்வாங்கி ஓடினார்கள். ஆனாலும் இவனே நிலைநின்று தன் கை சோர்ந்து, வாளோடு விறைத்துப் போகும்வரை பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தியவன். அன்றையதினம் யெகோவா பெரும் வெற்றியைக் கொடுத்தார். போர்வீரர் எலெயாசாரிடம் திரும்பினார்கள். இறந்தவர்களிடம் கொள்ளையிட மட்டுமே அவனிடம் திரும்பி வந்தார்கள். அடுத்தவன் ஆகேயின் மகன் சம்மா என்னும் ஆராரியன். ஒருமுறை பெலிஸ்தியர் சிறுபயறு நிறைந்து விளைந்திருந்த இடத்திலே ஒன்றாகத் திரண்டிருந்தபோது இஸ்ரயேலர் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். ஆனால் சம்மாவோ வயல் நடுவில் நின்று தனியாக பெலிஸ்தியரை எதிர்த்து, அவர்களைக் கொன்று அதைக் காத்துக்கொண்டான். யெகோவா பெரும் வெற்றியைக் கொண்டுவந்தார். அறுவடை காலத்தில் முப்பது படைத்தலைவர்களில் மூன்றுபேர் தாவீதைச் சந்திக்க அதுல்லாம் குகைக்கு வந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தது. அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான். பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. தாவீது தாகமாயிருந்தபடியால், “யாராவது பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டுவருவீர்களா?” என்று கேட்டான். எனவே அந்த மூன்று வீரரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேம் வாசலருகேயுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்துத் தாவீதிடம் கொண்டுவந்தார்கள். ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். அதற்குப் பதிலாக யெகோவாவுக்குமுன் அதை ஊற்றினான். “யெகோவாவே, நான் இதைக் குடிப்பதை எண்ணிப்பார்க்கவும் கூடாது. இது தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற வீரர்களின் இரத்தமல்லவா?” என்று சொல்லி தாவீது அதைக் குடிக்க மறுத்தான். இப்படிப்பட்ட செயல்களை இந்த மூன்று வீரர்களும் செய்தார்கள். யோவாபின் சகோதரனும், செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன் அந்த மூன்றுபேரில் முதல்வனாயிருந்தான். இவனே ஈட்டியால் முந்நூறுபேரைக் கொலைசெய்து அந்த மூன்றுபேரைப்போல் பேர்பெற்றவனானான். அவன் அந்த மூன்று தலைவர்களில் அதிகமாய் மதிக்கப்படவில்லையோ? அவன் அவர்களுடன் சேர்க்கப்படாத போதிலும் அவர்களுக்குத் தளபதியானான். கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். அவன் ஒரு உடல் பருத்த எகிப்தியனை அடித்து வீழ்த்தினான். எகிப்தியன் தனது கையில் ஈட்டியை வைத்திருந்தும் பெனாயா ஒரு தடியுடன் எதிர்த்துப் போனான். அவன் ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். இவ்விதமாக யோய்தாவின் மகன் பெனாயா பல வீரச்செயல்களைச் செய்தான். அவனும் மற்ற மூன்று தலைவர்களைப்போல் பிரபலமானவனாக இருந்தான். அந்த முப்பது தலைவர்களில் எவரையும்விட இவனே மதிப்புக்குரியவனாயிருந்தான். ஆனாலும் அந்த மூன்றுபேருள் இவன் சேர்க்கப்படவில்லை. தாவீது அவனைத் தன் மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான். அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா, பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா, ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி, அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி, நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி, அர்பாத்தியனான அபிஅல்போன், பர்குமியனான அஸ்மாவேத், சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான், ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம், மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம், கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி, சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி, அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய், இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப், ஏத்தியனான உரியா என்பவர்களே.

2 சாமுவேல் 23:5-39 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ? தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள். அவைகளை ஒருவன் தொடப்போனால், இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான். தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன். இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான். இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள். இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது, இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார். முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது, தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது. தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு: யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள். யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான். இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல. பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான். இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான். 30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான். யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான், ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா, பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன். ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி, பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி, பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி, அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத், சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன். ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன், மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன். கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி, சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி, அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய், இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப், ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர்.

2 சாமுவேல் 23:5-39 பரிசுத்த பைபிள் (TAERV)

“கர்த்தர் என் குடும்பத்தை பலமுள்ளதாகவும் பாதுகாப்புள்ளதாகவும் மாற்றினார். தேவன் என்னோடு ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்தார்! எல்லா வழிகளிலும் இந்த உடன்படிக்கை நல்லதே என்று தேவன் உறுதி செய்தார். உறுதியாக அவர் எனக்கு எல்லா வெற்றியையும் தருவார். எனக்கு வேண்டிய எல்லாவற்றையும் அவர் தருவார். “ஆனால் தீயோர் முட்களைப் போன்றவர்கள். ஜனங்கள் முட்களை வைத்திருப்பதில்லை. அவர்கள் அவற்றை வீசிவிடுவார்கள். ஒருவன் அவற்றைத் தொட்டால் அவை மரத்தாலும் வெண்கலத்தாலுமான ஈட்டியால் குத்துவது போலிருக்கும். ஆம், அம்மக்கள் முட்களைப் போன்றவர்கள். அவர்கள் தீயில் வீசப்படுவார்கள். அவர்கள் முற்றிலும் எரிக்கப்படுவார்கள்!” இவை தாவீதின் பலம்பொருந்திய வீரர்களின் பெயர்கள்: தேர்ப்படை அதிகாரிகளின் தலைவன் தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத். அவன் அதீனோஏஸ்னி எனவும் அழைக்கப்பட்டான். யோசேப்பாசெபெத் 800 பேரை ஒரே நேரத்தில் கொன்றவன். இவனுக்குப் பின் அகோயின் குமாரனாகிய தோதோவின் குமாரன் எலெயாசார் குறிப்பிடத்தக்கவன். பெலிஸ்தரை எதிர்த்தபோது தாவீதோடிருந்த மூன்று பெரும் வீரர்களில் எலெயாசாரும் ஒருவன். அவர்கள் போருக்கு ஓரிடத்தில் குழுமியிருந்தனர். ஆனால் இஸ்ரவேல் வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். மிகவும் சோர்ந்துபோகும்வரைக்கும் எலெயாசார் பெலிஸ்தரோடு போரிட்டான். ஆனால் அவன் வாளை இறுகப் பிடித்துக்கொண்டு போர் செய்வதைத் தொடர்ந்தான். கர்த்தர் அன்று இஸ்ரவேலருக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். எலெயாசார் போரில் வென்ற பிறகு பிற வீரர்கள் திரும்பி வந்தனர். மரித்த பகைவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட அவர்கள் வந்தனர். இவனுக்குப் பிறகு சொல்லத்தக்கவன் ஆராரிலுள்ள ஆகேயின் குமாரன் சம்மா. பெலிஸ்தர் போரிட ஒன்றாகத் திரண்டு வந்தனர். சிறு பயிறு நிரம்பிய களத்தில் அவர்கள் போர் செய்தனர். பெலிஸ்தரிடமிருந்து வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். ஆனால் சம்மா போர்களத்தின் நடுவில் நின்று தாங்கிக்கொண்டான். அவன் பெலிஸ்தரை வென்றான். அன்று கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தார். ஒரு முறை, தாவீது அதுல்லாம் குகையில் இருந்தான். பெலிஸ்தரின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இருந்தது. முப்பது பெரும் வீரர்களில் மூன்று பேர் நிலத்தில் தவழ்ந்தவாறே சென்று தாவீது இருக்குமிடத்தை அடைந்தனர். மற்றொரு முறை தாவீது அரணுக்குள் பாதுகாப்பான இடத்தில் இருந்தான். பெலிஸ்திய வீரர்களின் ஒரு கூட்டத்தினர் பெத்லேகேமில் இருந்தனர். தாவீது தனது சொந்த ஊரின் தண்ணீரைப் பருகும் தாகங்கொண்டிருந்தான். தாவீது, “பெத்லகேமின் நகர வாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து யாரேனும் எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தருவார்களா என்று விரும்புகிறேன்!” என்றான். தாவீதுக்கு உண்மையில் அது தேவைப்படவில்லை. வெறுமனே அவன் சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அந்த மூன்று பெரும் வீரர்களும் பெலிஸ்தரின் படைக்குள் புகுந்து சென்றனர். பெத்லகேமின் நகரவாயிலுக்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தனர். அம்முப்பெரும் வீரர்களும் அந்த தண்ணீரை தாவீதிடம் கொண்டு வந்தனர். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்தான். கர்த்தருக்குக் காணிக்கையாக அதை நிலத்தில் ஊற்றிவிட்டான். தாவீது, “கர்த்தாவே, நான் இந்த தண்ணீரைப் பருகமுடியாது. எனக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்ற மனிதரின் இரத்தத்தைக் குடிப்பதற்கு அது சமமாகும்” என்றான். இதனாலேயே தாவீது தண்ணீரைப் பருகவில்லை. இதைப்போன்ற பல துணிவான காரியங்களை முப்பெரும் வீரர்களும் செய்தார்கள். அபிசாயி யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனும் ஆவான். முப்பெரும் வீரர்களின் தலைவன், 300 வீரர்களைத் தனது ஈட்டியால் கொன்றவன் இந்த அபிசாயி. இவன் முப்பெரும் வீரர்களைப் போன்ற புகழ் பெற்றவன். அவன் அவர்களில் ஒருவனாக இல்லாதிருந்தும், அவர்களுக்குத் தலைவனாக இருந்தான். பின்பு யோய்தாவின் குமாரன் பெனாயா இருந்தான். இவன் வலிமைக்கொண்ட ஒருவனின் குமாரன். அவன் கப்செயேல் ஊரான். பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். மோவாபிலுள்ள ஏரியேலின் இரண்டு குமாரர்களை பெனாயா கொன்றான். ஒரு நாள் பனிபெய்துக்கொண்டிருக்கையில் பெனாயா நிலத்திலிருந்த ஒரு குழியில் இறங்கிச் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான். பெனாயா ஒரு மிகப் பெரிய எகிப்திய வீரனையும் கொன்றான். எகிப்தியனின் கையில் ஒரு ஈட்டி இருந்தது. பெனாயா கையில் ஒரு தடி மட்டுமே இருந்தது. ஆனால் பெனாயா எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து எடுத்தான். எகிப்தியனின் ஈட்டியாலேயே பெனாயா அவனைக் கொன்றான். யோய்தாவின் குமாரன் பெனாயா அத்தகைய பல துணிவான செயல்களைச் செய்தான். முப்பெரும் வீரர்களைப் போன்று பெனாயா புகழ் பெற்றவன். பெனாயா முப்பெரும் வீரர்களைக் காட்டிலும் மிகவும் புகழ் பெற்றவன். ஆனால் அவன் முப்பெரும் வீரர்களின் குழுவைச் சார்ந்தவன் அல்லன். தாவீது தனது மெய்க்காப்பாளர்களின் தலைவனாக பெனாயாவை நியமித்தான். முப்பது வீரர்களின் பெயர்ப் பட்டியல்: யோவாபின் சகோதரனாகிய ஆசகேல்; பெத்லகேமின் தோதோவின் குமாரன் எல்க்கானான்; ஆரோதியனாகிய சம்மா; ஆரோதியனாகிய எலிக்கா; பல்தியனாகிய ஏலெஸ்; தெக்கோவின் இக்கேசின் குமாரன் ஈரா; ஆனதோத் தியனாகிய அபியேசர்; ஊசாத்தியனாகிய மெபுன்னாயி; அகோகியனாகிய சல்மோன்; தெந்தோபாத் தியனாகிய மகராயி; பானாவின் குமாரன் ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன்; பென்யமீனியரின் கிபியா ஊரைச் சார்ந்தரிபாயின் குமாரன் இத்தாயி; பிரத்தோனியனாகிய பெனாயா; காகாஸ் நீரோடைகளின் நாட்டிலுள்ள ஈத்தாயி; அர்பாத்தியன் ஆகிய அபி அல்பொன்; பருமியன் ஆகிய அஸ்மாவேத்; சால்போனியன் ஆகிய எலி யூபா; யாசேனின் குமாரனாகிய யோனத்தான்; ஆராரியனாகிய சம்மா; ஆராரியனாகிய சாராரின் குமாரனாகிய அகியாம்; மாகாத்தியன் ஆகிய அகஸ்பாயிம் குமாரன் எலிப்பெலேத்; கீலோனியன் ஆகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம்; கர்மேலியன் ஆகிய எஸ்ராயி; அர்பியனாகிய பாராயி; சோபாவில் உள்ள நாத்தானின் குமாரன் ஈகால்; காதியனாகிய பானி; அம்மோனியனாகிய சேலேக் பெரோத்தியனாகிய நகராய், (செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுதங்களை நகராய் சுமந்துச் சென்றான்) இத்ரியனாகிய ஈரா; இத்ரியனாகிய காரேப்; ஏத்தியனாகிய உரியா.

2 சாமுவேல் 23:5-39 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ? பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்து போடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள். அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான். தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிட மாத்திரம் அவனைப் பின்சென்றார்கள். இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது, இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய இரட்சிப்பை நடப்பித்தார். முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேரும் அறுப்பு நாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது, தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லகேமிலே இருந்தது. தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின் மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள். யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்ததினால், இந்த மூன்று பேர்களில் பேர்பெற்றவனானான். இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல. பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழை காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடத்தில், போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான். இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான். முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான். யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான். ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா, பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன். ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி, பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி, அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன். ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன், மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன். கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி, சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி, அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய், இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப், ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.