2 சாமுவேல் 22:1-7
2 சாமுவேல் 22:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான். அவன் சொன்னது: “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, என் கேடயம், என் மீட்பின் கொம்பு. என் அரண், என் அடைக்கலம், நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர். “துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன, அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன. “என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன். அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார். என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது.
2 சாமுவேல் 22:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா தாவீதை அவனுடைய எல்லா எதிரிகளின் கைக்கும், சவுலின் கைக்கும், விலக்கி விடுவித்தபோது, அவன் யெகோவாவுக்கு முன்பாகப் பாடின பாட்டு: “யெகோவா என்னுடைய கன்மலையும், என்னுடைய கோட்டையும், என்னுடைய இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையும், என்னுடைய கேடகமும், என்னுடைய பாதுகாப்பின் கொம்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னுடைய இருப்பிடமும், என்னுடைய இரட்சகருமானவர்; என்னைத் துன்பத்திற்கு விலக்கி இரட்சிக்கிறவர் அவரே. துதிக்குக் காரணரான யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு விலக்கி இரட்சிக்கப்படுவேன். மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, என்னுடைய தேவனை நோக்கிக் கூப்பிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார்; என்னுடைய கூப்பிடுதல் அவர் செவிகளில் விழுந்தது.
2 சாமுவேல் 22:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் தாவீதை சவுல் மற்றும் பகைவர்களிடமிருந்து பாதுகாத்த போது, தாவீது கர்த்தரைப் புகழ்ந்து பாடிய பாட்டு. கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம். அவர் எனது தேவன். நான் பாதுகாப்பைத் தேடி ஓடும் கன்மலை. தேவன் எனது கேடயம். அவரது ஆற்றல் என்னைக் காக்கிறது. மலைகளின் உச்சியில் நான் மறைந்துக் கொள்ள ஏதுவான என் பாதுகாப்பிடம் கர்த்தர் ஆவார். கொடிய பகைவரிடமிருந்து அவர் என்னைக் காக்கிறார். அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர். ஆனால் நான் கர்த்தரை உதவிக்கு அழைத்தேன். என் பகைவரிடமிருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்! என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்! மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன. மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன். மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின. மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது. மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன். ஆம், எனது தேவனை அழைத்தேன். தேவன் தமது ஆலயத்தில் இருந்து என் குரலைக் கேட்டார். அவர் என் அழுகையைக் கேட்டார்.
2 சாமுவேல் 22:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் இரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் இரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் அவரே. ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன். மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.