2 சாமுவேல் 2:6-32
2 சாமுவேல் 2:6-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மேலும் யெகோவா உங்களுக்கு தயவையும் தமது உண்மையையும் காட்டுவாராக. நீங்கள் இதைச் செய்ததால் நானும் உங்களுக்கு அதே தயவைக் காட்டுவேன். இப்பொழுது நீங்கள் உங்களைப் பெலமும் தைரியமும் உள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அரசன் சவுல் இறந்துவிட்டதினால், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசனாக அபிஷேகம் செய்துள்ளார்கள்” என்று அவர்களுக்கு சொல்லச் சொன்னான். அவ்வேளையில் சவுலின் படைத்தளபதி நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்போசேத்தைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமுக்குப் போனான். அவன் இஸ்போசேத்தை கீலேயாத், அசூரியா, யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அரசனாக்கினான். சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரயேலுக்கு அரசனானபோது அவனுக்கு நாற்பது வயது; அவன் இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். ஆயினும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள். தாவீது எப்ரோனிலே ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் யூதா குடும்பத்தாருக்கு அரசனாயிருந்தான். பின்பு நேரின் மகன் அப்னேர் சவுலின் மகன் இஸ்போசேத்தின் ஆட்களைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமிலிருந்து புறப்பட்டு கிபியோனுக்குப் போனான். அதேவேளை செருயாவின் மகன் யோவாபும், தாவீதின் ஆட்களுடன் போய் கிபியோனின் குளத்தின் அருகில் அவர்களைச் சந்தித்தான். ஒரு கூட்டம் குளத்தின் ஒரு பக்கத்திலும், மற்றொரு கூட்டம் குளத்தின் மறுபக்கத்திலும் இருந்தது. அப்பொழுது அப்னேர் யோவாபிடம், “எங்கள் முன்னிலையில் வாலிபர் சிலர் வந்து நேருக்குநேர் நின்று போட்டியிடட்டும்” என்றான். அதற்கு யோவாப், “அப்படியே செய்யட்டும்” என்றான். எனவே சவுலின் மகன் இஸ்போசேத்தின் பக்கத்தில் பென்யமீன் கோத்திரத்தாரில் பன்னிரண்டு பேரும், தாவீதின் பக்கத்தில் அவனுடைய மனிதரில் பன்னிரண்டு பேரும் எண்ணி விடப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எதிர்ப்பக்கத்திலுள்ள ஒவ்வொருவருடைய தலையையும் பிடித்து வாளால் குத்தியதால், எல்லோரும் ஒருமித்து விழுந்து இறந்தார்கள். எனவே கிபியோனில் இருந்த அந்த இடம் எல்காத் அசூரிம் என்று அழைக்கப்பட்டது. அன்றையதினம் யுத்தம் மிகவும் கடுமையாய் இருந்தது. அப்னேரும், இஸ்ரயேல் மக்களும் தாவீதின் மனிதரால் தோற்கடிக்கப்பட்டார்கள். அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாப், அபிசாய், ஆசகேல் என்பவர்கள் இருந்தார்கள். ஆசகேல் ஒரு காட்டுக் கலைமானைப்போல் வேகமாக ஓடும் ஆற்றலுடையவன். அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பாமல் அவனைத் துரத்திச்சென்றான். அப்பொழுது அப்னேர் ஆசகேலைத் திரும்பிப்பார்த்து அவனிடம், “நீ ஆசகேல் அல்லவா?” என்று கேட்டான். அதற்கு அவன், “நானேதான்” என்றான். எனவே அப்னேர் அவனிடம், “நீ என்னைப் பின்தொடராமல் வலதுபுறமோ இடதுபுறமோ திரும்பி வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனிடமிருந்து ஆயுதங்களை எடுத்துக்கொள்” என்றான். ஆனால் ஆசகேல் அவனைத் துரத்துவதை நிறுத்தவில்லை. மறுபடியும் அப்னேர் ஆசகேலை எச்சரித்தான். அப்னேர் அவனிடம், “என்னைத் துரத்துவதை நிறுத்து. நான் உன்னை ஏன் கொல்லவேண்டும். உன்னைக் கொலை செய்தால் உன் சகோதரன் யோவாபின் முகத்தில் எப்படி விழிப்பேன்?” என்றான். ஆனாலும் ஆசகேலோ துரத்துவதை நிறுத்த மறுத்துவிட்டதால், உடனே அப்னேர் திரும்பி தன் ஈட்டியின் பின்பகுதியினால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி அவன் உடலில் ஊடுருவி முதுகு வழியே வந்தது. அவன் அவ்விடத்திலேயே விழுந்து இறந்தான். அவனுக்குப் பின்னால் வந்த ஒவ்வொருவரும் ஆசகேல் இறந்து கிடந்த இடத்திற்கு வந்தபோது அங்கேயே தரித்து நின்றுவிட்டார்கள். ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் துரத்திச் சென்றார்கள். அவர்கள் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கிபியோன் பாலைவனத்திற்கு போகும் வழியில் கீயாவுக்கு அருகேயுள்ள அம்மா என்னும் குன்றுவரை வந்தார்கள். அப்பொழுது பென்யமீன் கோத்திரத்து மக்கள் அப்னேருக்கு பின்னாக ஒன்றுதிரண்டு கூட்டமாக ஒரு மலை உச்சியில் சண்டைக்கு ஆயத்தமாக நின்றார்கள். அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு அவனிடம், “வாள் ஓய்வின்றி எப்பொழுதும் வெட்டி வீழ்த்த வேண்டுமா? அதன் முடிவு கசப்பானதாய் இருக்கும் என்று நீ உணரவில்லையா? தங்கள் சகோதரரைத் துரத்துவதை நிறுத்தும்படி உன் மனிதருக்கு எப்போது கட்டளையிடப் போகிறாய்?” எனக் கேட்டான். அதற்கு யோவாப், “நீ இப்படிச் சொல்லியிராவிட்டால் இறைவன் வாழ்வது நிச்சயம்போல, எனது படைவீரர் தங்கள் சகோதரரை விடியும்வரை துரத்தியிருப்பார்கள் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே யோவாப் எக்காளம் ஊதியவுடன் படைவீரர் துரத்துவதை நிறுத்திவிட்டார்கள். அதன்பின் அவர்கள் இஸ்ரயேலரைத் துரத்தவுமில்லை, யுத்தம் செய்யவுமில்லை. அன்றிரவு முழுவதும் அப்னேரும் அவன் ஆட்களும் அரபா வழியாக அணிவகுத்து நடந்தார்கள். அவர்கள் யோர்தானைக் கடந்து, பித்ரோன் முழுவதும் நடந்து மக்னாயீமுக்கு வந்து சேர்ந்தார்கள். யோவாப் அப்னேரைத் துரத்திச் செல்வதைவிட்டுத் தன் மக்களனைவரையும் ஒன்றுகூட்டினான். தாவீதின் ஆட்களில் ஆசகேலுடன் சேர்த்து இன்னும் பத்தொன்பதுபேர் குறைவாக இருந்தார்கள். ஆனால் தாவீதின் ஆட்கள் அப்னேரிடமிருந்த பென்யமீன் கோத்திரத்தாரில் முந்நூற்று அறுபதுபேரைக் கொலைசெய்திருந்தார்கள். அவர்கள் ஆசகேலின் உடலை எடுத்துக்கொண்டுபோய் பெத்லெகேமிலுள்ள அவன் தகப்பன் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அதன்பின் யோவாபும் அவன் ஆட்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச்சென்று, பொழுது விடியும்போது எப்ரோனை வந்தடைந்தார்கள்.
2 சாமுவேல் 2:6-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன். இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான். சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான். சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, 40 வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள். தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஏழு வருடங்களும் ஆறு மாதங்களும் ஆகும். நேரின் மகனான அப்னேர் சவுலின் மகனான இஸ்போசேத்தின் வீரர்களைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப் போனான். அப்பொழுது செருயாளின் மகனான யோவாபும் தாவீதின் வீரர்களும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தின் அருகில் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள். அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர்கள் எழுந்து, நமக்கு முன்பாகச் சண்டையிடட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான். அப்பொழுது சவுலின் மகனான இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனிதர்களில் பன்னிரெண்டுபேர்களும், தாவீதுடைய வீரர்களிலே பன்னிரெண்டுபேர்களும், எழுந்து ஒரு பக்கமாகப் போய், ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒன்றாக விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த இடம் எல்காத் அசூரிம் எனப்பட்டது. அந்த நாளில் மிகவும் கடுமையான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனிதர்களும் தாவீதின் வீரர்களால் முறியடிக்கப்பட்டார்கள். அங்கே செருயாவின் மூன்று மகன்களான யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் காட்டுமான்களில் ஒன்றைப்போல வேகமாக ஓடுகிறவனாக இருந்தான். அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறமாவது இடதுபுறமாவது, அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான். அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான். அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திலோ இடதுபக்கத்திலோ விலகி, வாலிபர்களில் ஒருவனைப் பிடித்து அவனுடைய ஆயுதங்களை எடுத்துக்கொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான். பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னை ஏன் தரையில் விழ வெட்டவேண்டும்? பின்பு உன்னுடைய சகோதரனான யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான். ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற மழுங்கிய முனையால் அவனுடைய வயிற்றிலே குத்தினான்; ஈட்டி மறுபக்கத்தில் வந்தது; அவன் அங்கேயே விழுந்து இறந்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அங்கேயே நின்றார்கள். யோவாபும் அபிசாயும் சூரியன் மறையும்வரை அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்திர வழிக்கு அருகில் இருக்கிற கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுவரை வந்தார்கள். அப்பொழுது அப்னேருக்குப் பின்சென்ற பென்யமீன் மனிதர்கள் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள். அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் அழித்துக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று தெரியாதோ, தங்களுடைய சகோதரர்களைவிட்டுப் பின்வாங்கும்படி எதுவரைக்கும் மக்களுக்குச் சொல்லாமல் இருப்பீர் என்றான். அதற்கு யோவாப்: இன்று காலையில் நீர் பேசாமல் இருந்திருந்தால் மக்கள் அவரவர்கள் தங்களுடைய சகோதரர்களைப் பின்தொடராமல், அப்போதே திரும்பியிருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது மக்கள் அனைவரும் இஸ்ரவேலைப் பின்தொடராமலும், யுத்தம்செய்யாமலும் நின்றுவிட்டார்கள். அன்று இரவு முழுவதும் அப்னேரும் அவனுடைய மனிதர்களும் பாலைவனம் வழியாகப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோன் வழியே சென்று அதைக் கடந்து, மகனாயீமுக்குப் போனார்கள். யோவாப் அப்னேரைப் பின்தொடராமல் மக்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் வீரர்களில் 19 பேர்களும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள். தாவீதின் வீரர்களோ பென்யமீனியர்களிலும், அப்னேரின் மனிதர்களிலும், 360 பேரைக் கொன்றிருந்தார்கள். அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்; யோவாபும் அவனுடைய மனிதர்களும் இரவு முழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிற்கு வந்துசேர்ந்தார்கள்.
2 சாமுவேல் 2:6-32 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய ராஜாவாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான். சவுலின் படைக்கு நேர் என்பவனின் குமாரனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் ராஜாவாக்கினான். இஸ்போசேத் சவுலின் குமாரன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர். தாவீதும் எப்ரோனில் ராஜாவாக இருந்தான். தாவீது 7 ஆண்டுகள் 6 மாதங்கள் யூதா கோத்திரத்தை அரசாண்டான். நேரின் குமாரனாகிய அப்னேரும் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் அதிகாரிகளும் மகனாயீமைவிட்டுக் கிபியோனுக்குச் சென்றனர். செருயாவின் குமாரனாகிய யோவாபும், தாவீதின் அதிகாரிகளும் சேர்ந்து கிபியோனுக்குச் சென்றனர். கிபியோனின் குளத்தருகே அவர்கள் அப்னேரையும் இஸ்போசேத்தின் அதிகாரிகளையும் சந்தித்தனர். அப்னேரின் கூட்டத்தினர் குளத்தின் ஒரு கரையிலும், யோவாபின் கூட்டத்தார் குளத்தின் மறுகரையிலும் அமர்ந்தனர். அப்னேர் யோவாபிடம், “இளம் வீரர்கள் நமக்கு முன்பு ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளட்டும்” என்றான். யோவாபும், “சரி நாம் போட்டியிடலாம்” என்றான். எனவே இளம் வீரர்கள் எழுந்தனர். இரு குழுவினரும் போராடத் துணிந்து தங்கள் ஆட்களை எண்ணிக்கையிட்டனர். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்திற்காகச் சண்டையிட பென்யமீன் கோத்திரத்திலிருந்து 12 பேர்களையும் தாவீதின் பக்கத்திலிருந்து 12 பேர்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர். ஒவ்வொருவனும் பகைவனின் தலையைப் பிடித்து வாளால் விலாவில் குத்திக்கொண்டான். எனவே அம்மனிதர்கள் ஒருமித்து வீழ்ந்தனர். எனவே அந்த இடம், “கூரிய கத்திகளின் நிலம்” (எல்கா அருரீம்) என அழைக்கப்பட்டது. இந்த இடம் கிபியோனில் இருக்கிறது. பின் அந்தச் சண்டை பெரும் யுத்தமாக மாறிற்று. அந்த நாளில் தாவீதின் அதிகாரிகள் அப்னேரையும் இஸ்ரவேலரையும் தோற்கடித்தனர். செருயாவிற்கு மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் யோவாப், அபிசாய், ஆசகேல் ஆகியோராவார்கள். ஆசகேல் மிக வேகமாக ஓடக்கூடியவன். காட்டுமானைப் போன்ற வேகமுள்ளவன். ஆசகேல் அப்னேரிடம் ஓடி அவனைத் துரத்த ஆரம்பித்தான். அப்னேர் திரும்பி பார்த்து, “நீ ஆசகேலா?” எனக் கேட்டான். ஆசகேல், “ஆம், நானே தான்” என்றான். அப்னேர் ஆசகேலைத் தாக்க விரும்பவில்லை. எனவே அப்னேர் ஆசகேலை நோக்கி, “என்னைத் துரத்துவதைவிட்டு, இளம் வீரர்களுள் வேறு ஒருவனைத் துரத்து, நீ எளிதில் அவனை வென்று அவன் போர் அங்கிகளை எடுத்துவிடுவாய்” என்றான். ஆனால் ஆசகேல் அப்னேரைத் துரத்துவதை நிறுத்தவில்லை. அப்னேர் மீண்டும் ஆசகேலிடம், “என்னைத் துரத்துவதை விட்டுவிடு. இல்லையென்றால் நான் உன்னைக் கொல்ல வேண்டியிருக்கும். பிறகு உனது சகோதரனாகிய யோவாபின் முகத்தை மீண்டும் நான் பார்க்க முடியாது” என்றான். ஆனால் ஆசகேலோ அப்னேரை விடாமல் துரத்தினான். எனவே அப்னேர் ஈட்டியின் மறுமுனையால் ஆசகேலின் வயிற்றில் குத்தினான். ஈட்டி ஆசகேலின் வயிற்றினுள் புகுந்து முதுகில் வெளி வந்தது. ஆசகேல் அங்கேயே விழுந்து மரித்தான். ஆசகேலின் உடல் நிலத்தில் கிடந்தது. ஓடிவந்த மனிதர்கள் அவனருகே நின்றுவிட்டனர். ஆனால் யோவாபும், அபிசாயும் அப்னேரைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே ஓடினார்கள். அம்மா என்னும் மேட்டை அவர்கள் அடைந்தபோது சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. (கிபியோன் பாலைவனத்திற்குப் போகும் வழியில் கீயாவிற்கு எதிரில் அம்மா மேடு இருந்தது) பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த மனிதர்கள் அப்னேரிடம் வந்தனர். அவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அப்னேர் யோவாபை நோக்கி உரக்க, “நாம் போரிட்டு ஒருவரையொருவர் கொல்லவேண்டுமா? இது துக்கத்திலேயே முடிவுறும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். சொந்த சகோதரர்களையே துரத்திக் கொண்டு இருக்கவேண்டாம் என ஜனங்களுக்குச் சொல்” என்றான். அப்போது யோவாப், “நீ அவ்வாறு சொன்னது நல்லதாயிற்று, நீ அவ்வாறு சொல்லாவிட்டால், எல்லாரும் தங்கள் சகோதரர்களைக் காலைவரை துரத்திக்கொண்டே இருப்பார்கள் என்று தேவனுடைய ஜீவனைக் கொண்டுச் சொல்லுகிறேன்” என்றான். எனவே, யோவாப் ஒரு எக்காளத்தை ஊதி, தனது ஆட்கள் இஸ்ரவேலரைக் துரத்தாதபடி தடுத்து நிறுத்தினான். அவர்கள் இஸ்ரவேலரோடு போரிட முயலவில்லை. அப்னேரும் அவனது ஆட்களும் யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவுப் பொழுதில் அணிவகுத்து சென்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து மகனாயீமுக்கு வரும்வரை பகல் முழுவதும் அணிவகுத்து நடந்தனர். அப்னேரைத் துரத்துவதை விட்டுவிட்டு யோவாப் திரும்பிச் சென்றான். யோவாப் தன் ஆட்களை அழைத்தான். ஆசகேல் உட்பட தாவீதின் அதிகாரிகளுள் 19 பேர் அங்கு இல்லாதிருப்பதைக் கண்டான். ஆனால் தாவீதின் அதிகாரிகள் பென்யமீன் கோத்திரத்திலிருந்து அப்னேரின் ஆட்களில் 360 பேரைக் கொன்றிருந்தனர். தாவீதின் அதிகாரிகள் ஆசகேலை எடுத்துச் சென்று பெத்லகேமிலிருந்த அவனது தந்தையின் கல்லறையில் புதைத்தனர். யோவாபும், அவனது மனிதர்களும் இரவு முழுவதும் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் எப்ரோனை அடைந்தபோது சூரியன் உதித்தது.
2 சாமுவேல் 2:6-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன். இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான். சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள். தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப்போனான். அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள். அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான். அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய், ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது. அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள். அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான். அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனை விட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான். அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான். அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான். பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான். ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள். யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள். அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள். அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான். அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள். அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவநடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள். யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள். தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள். அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.