2 சாமுவேல் 2:1-10

2 சாமுவேல் 2:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சிறிது காலத்திற்குப்பின் தாவீது யெகோவாவிடம் விசாரித்து, “யூதாவின் பட்டணங்கள் ஒன்றிற்கு நான் போகலாமா?” என்று கேட்டான். அதற்கு யெகோவா, “நீ போகலாம்” என்றார். மேலும் தாவீது, “நான் எங்கே போகலாம்” என்று யெகோவாவிடம் கேட்டான். “நீ எப்ரோனுக்குப் போ” எனச் சொன்னார். எனவே தாவீது தன் இரண்டு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் எப்ரோனுக்குப் போனான். தாவீது தன்னோடுகூட இருந்த மனிதரையும் அவர்கள் ஒவ்வொருவரையும் குடும்பங்களுடன் கூட்டிக்கொண்டு போனான். அவர்கள் எப்ரோனிலும் அதனைச் சேர்ந்த பட்டணங்களிலும் குடியேறினார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர் எப்ரோனுக்கு வந்து, அங்கே தாவீதை யூதா கோத்திரத்தின்மேல் அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள். அவ்வேளை கீலேயாத் யாபேசின் மனிதரே சவுலின் உடலை அடக்கம் செய்தார்களென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. எனவே தாவீது கீலேயாத் யாபேசின் மனிதரிடம் தூதுவரை அனுப்பி அவர்களிடம், “உங்கள் அரசனான சவுலை அடக்கம் செய்து அவருக்கு இரக்கம் காட்டினபடியால் யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலும் யெகோவா உங்களுக்கு தயவையும் தமது உண்மையையும் காட்டுவாராக. நீங்கள் இதைச் செய்ததால் நானும் உங்களுக்கு அதே தயவைக் காட்டுவேன். இப்பொழுது நீங்கள் உங்களைப் பெலமும் தைரியமும் உள்ளவர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அரசன் சவுல் இறந்துவிட்டதினால், யூதா கோத்திரத்தார் என்னைத் தங்கள் அரசனாக அபிஷேகம் செய்துள்ளார்கள்” என்று அவர்களுக்கு சொல்லச் சொன்னான். அவ்வேளையில் சவுலின் படைத்தளபதி நேரின் மகன் அப்னேர், சவுலின் மகன் இஸ்போசேத்தைக் கூட்டிக்கொண்டு மக்னாயீமுக்குப் போனான். அவன் இஸ்போசேத்தை கீலேயாத், அசூரியா, யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன் ஆகிய நாடுகளுக்கும் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அரசனாக்கினான். சவுலின் மகன் இஸ்போசேத் இஸ்ரயேலுக்கு அரசனானபோது அவனுக்கு நாற்பது வயது; அவன் இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். ஆயினும் யூதா குடும்பத்தார் தாவீதைப் பின்பற்றினார்கள்.

2 சாமுவேல் 2:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு தாவீது யெகோவாவை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்களில் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் யெகோவா: போ என்றார்; எந்த இடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார். அப்படியே தாவீது தன்னுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரைச் சேர்ந்த அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச் சேர்ந்த அபிகாயிலோடும் அந்த இடத்திற்குப் போனான். மேலும், தன்னோடு இருந்த மனிதர்களையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் நகரங்களில் குடியேறினார்கள். அப்பொழுது யூதாவின் மனிதர்கள் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தார்களின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள். சவுலை அடக்கம்செய்தவர்கள் கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது. தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனிதர்களிடம் தூதுவர்களை அனுப்பி, நீங்கள் உங்களுடைய ஆண்டவனான சவுலுக்கு இந்த தயவைச் செய்து, அவரை அடக்கம்செய்ததால், யெகோவா உங்களை ஆசீர்வதிப்பாராக. யெகோவா உங்களைக் கிருபையும் உண்மையுமாக நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நானும் இந்த நன்மைக்கு ஏற்றபடி உங்களை நடத்துவேன். இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய கைகளை பெலப்படுத்திக்கொண்டு தைரியமாக இருங்கள்; உங்களுடைய ஆண்டவனான சவுல் இறந்த பின்பு, யூதா வம்சத்தார்கள் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான். சவுலின் படைத்தலைவனான நேரின் மகனான அப்னேர், சவுலின் மகனான இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்கள்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாக்கினான். சவுலின் மகனான இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, 40 வயதாக இருந்தான்; அவன் இரண்டுவருடங்கள் ஆட்சி செய்தான்; யூதா கோத்திரத்தார்கள் மட்டும் தாவீதைப் பின்பற்றினார்கள்.

2 சாமுவேல் 2:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்பு தாவீது கர்த்தருடைய அறிவுரையைக் கேட்டான். தாவீது, “நான் யூதாவின் நகரங்களுள் ஏதேனும் ஒரு நகரத்திற்குப் போகலாமா?” என்று கேட்டான். கர்த்தர் தாவீதிடம், “போகலாம்” என்றார். தாவீது, “எங்கு நான் போகட்டும்?” என்று கேட்டான். கர்த்தர், “எப்ரோனுக்கு” என்று பதிலளித்தார். எனவே, தாவீதும் அவனது இரண்டு மனைவியரும் எப்ரோனுக்குச் சென்றனர். (யெஸ்ரயேல் ஊராளான அகினோவாள் ஒரு மனைவி, மற்றொருத்தி கர்மேல் நாபாலின் விதவையாகிய அபிகாயில்) தாவீது தம் ஆட்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் தம்மோடு அழைத்துச் சென்றான். அவர்கள் எல்லோரும் எப்ரோனிலும் அருகிலுள்ள ஊர்களிலும் குடியேறினார்கள். யூதாவின் மனிதர்கள் எப்ரோனுக்கு வந்து தாவீதை யூதாவின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள். அவர்கள் தாவீதிடம், “கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்கள் சவுலைப் புதைத்தார்கள்” என்றனர். கீலேயாத்திலுள்ள யாபேசின் மனிதர்களிடம் தாவீது தூதுவர்களை அனுப்பினான். அந்த ஆட்கள் யாபேசின் மனிதர்களை நோக்கி, “சவுலின் சாம்பலைப் புதைத்து உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இரக்கம் காட்டியதால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களிடம் இரக்கமாகவும் உண்மையாகவும் இருப்பாராக, நானும் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன். இப்போது பலமும் தைரியமும் உடையவர்களாய் இருங்கள். உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்துவிட்டார். ஆனால் யூதா கோத்திரத்தினர் அவர்களுடைய ராஜாவாக என்னை அபிஷேகம் செய்திருக்கிறார்கள்” என்று தாவீது செய்தியைக் கூறியனுப்பினான். சவுலின் படைக்கு நேர் என்பவனின் குமாரனாகிய அப்னேர் தளபதியாக இருந்தான். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை அப்னேர் மகனாயீமுக்கு அழைத்துச்சென்று அவனை, கீலேயாத், அஷூரியர், யெஸ்ரயேல், எப்பிராயீம், பென்யமீன், இஸ்ரவேல் எல்லாவற்றிற்கும் ராஜாவாக்கினான். இஸ்போசேத் சவுலின் குமாரன். அவன் இஸ்ரவேலை ஆளத் தொடங்கியபோது அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். ஆனால் யூதா கோத்திரத்தார் தாவீதைப் பின் பற்றினர்.

2 சாமுவேல் 2:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார். அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் கூட அவ்விடத்திற்குப் போனான். அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள். அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது, தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன். இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான். சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான். சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்