2 சாமுவேல் 16:1-11

2 சாமுவேல் 16:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தாவீது மலையுச்சிக்கு அப்பால் சிறிது தூரம் சென்றபோது மேவிபோசேத்தின் பராமரிப்பாளனான சீபா, அவனைச் சந்திப்பதற்காக அங்கே வந்து காத்திருந்தான். அவன் இருநூறு அப்பங்களையும், நூறு முந்திரி அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும், ஒரு திராட்சை இரசக் குடுவையையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வந்திருந்தான். அப்பொழுது அரசன் சீபாவிடம், “ஏன் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய்?” என்று கேட்டான். அதற்கு சீபா, “அரச குடும்பத்தார் ஏறிச் செல்வதற்கு கழுதைகளையும், மனிதர் சாப்பிடுவதற்கு அப்பங்களையும், பழங்களையும், பாலைவனத்தில் களைப்படைந்தவர்களை உற்சாகப்படுத்த திராட்சை இரசத்தையும் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். அதைக்கேட்ட அரசன் அவனிடம், “உன் எஜமானின் பேரன் மேவிபோசேத் எங்கே” என்று கேட்டான். அதற்கு சீபா, “அவர் எருசலேமில் இருக்கிறார்; ‘இன்று இஸ்ரயேல் மக்கள் என் பாட்டனான சவுலின் அரசாட்சியை எனக்குத் திரும்பவும் கொடுப்பார்கள்’ என்று எண்ணுகிறார்” என்றான். அரசன் சீபாவிடம், “மேவிபோசேத்துக்கு உரிமையானவைகளெல்லாம் இப்பொழுது உனக்கு உரிமையானவைகளே” என்றான். அப்பொழுது சீபா, “என் தலைவனாகிய அரசனிடம் எனக்குத் தொடர்ந்து தயவு கிடைக்கட்டும். நான் தாழ்மையுடன் வணங்குகிறேன்” என்று சொன்னான். தாவீது அரசன் பகூரிமை நெருங்குகையில் அங்கேயிருந்த சவுலின் குடும்பத்தின் வம்சத்தைச் சேர்ந்த கேராவின் மகன் சீமேயி என்னும் ஒருவன் வந்தான். அவன் தாவீதை சபித்துக்கொண்டே வந்தான். தாவீதின் இடது புறமும், வலது புறமும் இராணுவவீரரும், விசேஷ காவலாட்களும் இருந்தபோதிலுங்கூட சீமேயி அரசனாகிய தாவீதுக்கும், அவனுடைய பணியாட்களுக்கும் கற்களை எறிந்தான். சீமேயி தாவீதைச் சபித்து, “இரத்த வெறியனே போய்விடு, கொலைபாதகனே தொலைந்து போ. நீ சவுலின் குடும்பத்தில் சிந்திய இரத்தத்திற்காக யெகோவா உன்னைத் தண்டித்திருக்கிறார். அவனுடைய இடத்தில்தான் நீ ஆளுகை செய்தாயே. யெகோவா அரசாட்சியை உன் மகன் அப்சலோமுக்குக் கொடுத்தார். நீ ஒரு இரத்த வெறியன். எனவேதான் உனக்கு அழிவு வந்திருக்கிறது” என்றான். அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் அரசனிடம், “இந்த செத்த நாய் என் தலைவனாகிய அரசனை சபிப்பானேன். நான் போய் அவன் தலையை வெட்டிவிட அனுமதியும்” என்றான். ஆனால் அரசனோ, “செருயாவின் மகன்களே! உங்களுக்கும் எனக்கும் இதில் பொதுவாக என்ன இருக்கிறது? யெகோவா சீமேயினிடம், ‘தாவீதைச் சபிக்கவேண்டும்’ என்று கட்டளையிட்டபடியால், அவன் சபித்திருக்க வேண்டும். எனவே அவனிடம், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என யார் கேட்கலாம்” என்றான். மேலும் தாவீது அபிசாயிடமும், அவன் பணியாட்களிடமும், “என் சொந்த மாம்சமான என் மகனே என் உயிரை எடுக்க முயலும்போது, இந்த பென்யமீனியன் எவ்வளவு அதிகமாய் செய்யக்கூடும். அவனைவிட்டுவிடுங்கள். அவன் என்னைச் சபிக்கட்டும். யெகோவா அப்படிச் சொல்லியிருக்கிறார்.

2 சாமுவேல் 16:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தாவீது மலை உச்சியிலிருந்து சற்றுதூரம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் வேலைக்காரனான சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனை சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், உலர்ந்த நூறு திராட்சைப்பழக் குலைகளும், வசந்தகாலத்து கனிகளான நூறு அத்திக் குலைகளும், ஒரு தோல்பை திராட்சைரசமும் இருந்தது. ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் எதற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் குடும்பத்தார்கள் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர்கள் சாப்பிடுவதற்கும், திராட்சைரசம் வனாந்திரத்தில் களைத்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய மகன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் குடும்பத்தார்கள் என் தகப்பனுடைய ராஜ்ஜியத்தை என் பக்கமாகத் திரும்பச்செய்வார்கள் என்றான் என்று சொன்னான். அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உரியதையெல்லாம் உனக்கு தருகிறேன் என்றான். அதற்குச் சீபா: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான். தாவீது ராஜா பகூரிம்வரை வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாக இருக்கிற கேராவின் மகனான சீமேயி என்னும் பெயருள்ள ஒரு மனிதன் அங்கேயிருந்து புறப்பட்டு, சபித்துக்கொண்டே நடந்துவந்து, எல்லா மக்களும், எல்லா பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கும்போது, தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய எல்லா அதிகாரிகளின் மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனை சபித்து: இரத்தப்பிரியனே, பாவியான மனிதனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. சவுலின் இடத்தில் ராஜாவான உன்மேல் யெகோவா சவுல் குடும்பத்தார்களின் இரத்தப்பழியைத் திரும்பச் செய்வார்; யெகோவா ராஜ்ஜியபாரத்தை உன்னுடைய மகனான அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன்னுடைய அக்கிரமத்தில் சிக்கிக்கொண்டாய்; நீ இரத்தப்பிரியனான மனிதன் என்றான். அப்பொழுது செருயாவின் மகன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவான என்னுடைய ஆண்டவனை ஏன் சபிக்கவேண்டும்? நான் போய் அவனுடைய தலையை வெட்டிப்போடட்டும் என்றான். அதற்கு ராஜா: செருயாவின் மகன்களே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னை சபிக்கட்டும்; தாவீதை சபிக்கவேண்டும் என்று யெகோவா அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்பவன் யார் என்றான். பின்னும் தாவீது அபிசாயையும் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லோரையும் பார்த்து: இதோ, என்னுடைய கர்ப்பத்தின் பிறப்பான என்னுடைய மகனே என்னுடைய உயிரை எடுக்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாகச் செய்வான், அவன் சபிக்கட்டும்; அப்படிச் செய்ய யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

2 சாமுவேல் 16:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

தாவீது ஒலிவமலை உச்சியின் மேல் கொஞ்சதூரம் நடந்துப்போனான். அங்கு மேவிபோசேத்தின் பணியாளாகிய சீபா தாவீதைச் சந்தித்தான். சீபாவிடம் சேணம் கட்டப்பட்ட இரண்டு கழுதைகள் இருந்தன. கழுதைகள் 200 ரொட்டிகளையும், 100 குலைகள் உலர்ந்த திராட்சைகளையும், 100 கோடைக்காலக் கனிகளையும் ஒரு துருத்தி திராட்சைரத்தையும் சுமந்து வந்தன. தாவீது ராஜா சீபாவைப் பார்த்து, “இவைகளெல்லாம் எதற்கு?” என்று கேட்டான். சீபா பதிலாக, “இந்தக் கழுதைகள் ராஜாவின் குடும்பத்தினர் செல்வதற்காகவும் ரொட்டியும் பழங்களும் அதிகாரிகளின் உணவிற்காகவும், திராட்சைரசம் பாலைவனத்தில் நடந்து செல்வோர் சோர்வுறும் போது குடிப்பதற்காகவும் பயன்படும்” என்றான். ராஜா, “மேவிபோசேத் எங்கே?” என்று கேட்டான். சீபா ராஜாவிடம், “மேவிபோசேத் எருசலேமில் இருக்கிறான் ஏனென்றால் அவன் ‘இன்று என் பாட்டனாரின் அரசை இஸ்ரவலர்கள் எனக்குத் திருப்பிக் கொடுப்பார்கள் என நினைக்கிறான்’” என்று கூறினான். பின்னர் ராஜா சீபாவிடம், “சரி மேவிபோசேத்திற்கு உரியவற்றையெல்லாம் இப்போது நான் உனக்குத் தருகிறேன்” என்றான். சீபா, “நான் உங்களை வணங்குகிறேன். நான் எப்போதுமே உங்கள் தயை பெறுவேன் எனக் கருதுகிறேன்” என்றான். தாவீது பகூரிமுக்கு வந்தான். சவுலின் குடும்பத்தைச் சேர்ந்த மனிதன் ஒருவன் பகூரிமுலிருந்து அங்கு வந்தான். இம்மனிதன் கேராவின் குமாரனாகிய சீமேயி. சீமேயி தாவீதிடம் தீயவற்றைப் பேசியவனாக வந்தான். அவன் மீண்டும், மீண்டும் தீயனவற்றையே பேசினான். தாவீதின் மீதும் அவனது அதிகாரிகள் மீதும் சீமேயி கற்களை வீச ஆரம்பித்தான். ஆனால் மக்களும் வீரர்களும் தாவீதைச் சூழ்ந்து நின்று அவனைக் காத்தனர். சீமேயி தாவீதை சபித்தான். அவன், “கொலைகாரனே! வெளியே போ. வெளியே போ. கர்த்தர் உன்னைத் தண்டிக்கிறார். ஏனெனில், நீ சவுலின் குடும்பத்தாரைக் கொலைச் செய்தாய். நீ சவுலின் இடத்தில் ராஜாவாக அமர்ந்தாய். ஆனால் இப்போது கர்த்தர் அரசாட்சியை உனது குமாரனான அப்சலோமுக்குக் கொடுத்துள்ளார். இப்போது அதே தீமைகள் உனக்கு நேர்கின்றன. ஏனெனில் நீ ஒரு கொலைக்காரன்” என்றான். செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவை நோக்கி, “எனது ராஜாவாகிய ஆண்டவரே, ஏன் இந்த மரித்த நாய் உம்மை சபிக்க வேண்டும்? நான் சீமேயியின் தலையை வெட்டப் போகிறேன்” என்றான். அதற்கு ராஜா, “நான் என்ன செய்ய முடியும், செருயாவின் ஜனங்களே? சீமேயி என்னை சபிக்கிறான். ஆனால் அவன் என்னை சபிக்குமாறு அவனிடம் கர்த்தர் கூறியுள்ளார்” என்றான். தாவீது அபிசாயிடமும் அவனது பணியாட்களிடமும், “இங்கே பாருங்கள், என் சொந்த குமாரனான அப்சலோம் என்னைக் கொல்ல முயல்கிறான். சீமேயி என்ற பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்தவன் என்னைக் கொல்ல அதிக உரிமையுடைவன். அவன் அதைச் செய்யட்டும். அவன் தீய வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். கர்த்தர் அவ்வாறு செய்ய அவனிடம் கூறியுள்ளார்.

2 சாமுவேல் 16:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது. ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான். அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான். தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து, சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான். சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான். அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான். அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான். பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.