2 சாமுவேல் 12:7-12

2 சாமுவேல் 12:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நாத்தான் தாவீதிடம், “நீரே அந்த மனிதன். இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் சவுலிடமிருந்து உன்னை விடுவித்து இஸ்ரயேலரின் அரசனாக உன்னை அபிஷேகம் பண்ணினேன். உன் தலைவனுடைய வீட்டையும், அவனுடைய மனைவிகளையும் உனக்குக் கொடுத்தேன். அத்துடன் இஸ்ரயேல் குடும்பத்தையும், யூதா குடும்பத்தையும் கொடுத்தேன். இவையெல்லாம் உனக்குப் போதாதிருந்தால், என்னிடம் கேட்டிருந்தால் இதைவிட அதிகமாகவும் நான் உனக்குக் கொடுத்திருப்பேன் அல்லவா? இப்படியிருக்க நீ யெகோவாவுக்கு அருவருப்பான செயலை செய்து அவருடைய வார்த்தைகளை ஏன் புறக்கணித்தாய்? ஏத்தியனான உரியாவை வாளால் வெட்டிக்கொன்று, அவன் மனைவியை உன் மனைவியாக்கினாய்; அம்மோனியரின் வாளால் நீதானே உரியாவை கொலைசெய்தாய். இப்படியாக நீ என்னை அவமதித்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்குச் சொந்தமாக எடுத்தபடியால் ஒருபோதும் உன் குடும்பத்தைவிட்டு வாள் நீங்காது.’ “மேலும், யெகோவா சொல்லுகிறதாவது: ‘உன் சொந்தக் குடும்பத்திலிருந்தே உனக்குப் பேரழிவை வரப்பண்ணுவேன், உன் கண்முன்னே உன் மனைவிகளை உனக்கு நெருங்கிய ஒருவனுக்குக் கொடுப்பேன். அவன் அவர்களுடன் பகிரங்கமாக உறவுகொள்வான். நீயோ இதை மறைவில் செய்தாய்; நானோ இஸ்ரயேலர் அனைவருக்கும் முன்பாகவும் பகிரங்கமாய் செய்விப்பேன்’ என்று சொல்கிறார்” என நாத்தான் சொன்னான்.

2 சாமுவேல் 12:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனிதன்; இஸ்ரவேலின் தேவனான யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய பெண்களையும் உன்னுடைய மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கொடுத்தேன்; இது போதாமலிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை செய்தது என்ன? ஏத்தியனான உரியாவை நீ பட்டயத்தால் இறக்கச்செய்து, அவனுடைய மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் இராணுவத்தினர்களின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். இப்போதும் நீ என்னை அசட்டைசெய்து, ஏத்தியனான உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியால், பட்டயம் எப்பொழுதும் உன்னுடைய வீட்டைவிட்டு நீங்காமலிருக்கும். யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னுடைய வீட்டிலே அழிவை உன்மேல் எழும்பச்செய்து, உன்னுடைய கண்கள் பார்க்க, உன்னுடைய மனைவிகளை எடுத்து, உன்னுடைய அயலானுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன்னுடைய மனைவிகளோடு உறவுகொள்வான். நீ மறைவில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்வேன் என்றார் என்று சொன்னான்.

2 சாமுவேல் 12:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)

அப்போது நாத்தான் தாவீதை நோக்கி, “நீயே அந்த செல்வந்தன்! இதுவே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுவது: ‘நான் உன்னை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தேன். நான் உன்னை சவுலிடமிருந்து மீட்டேன். நீ அவனது குடும்பத்தையும் அவனது மனைவியரையும் எடுத்துக்கொள்ளுமாறு நான் செய்தேன். நான் உன்னை இஸ்ரவேல், யூதா ஜனங்களுக்கு ராஜாவாக்கினேன். அது போதாதென்று உனக்கு இன்னும் அதிகமதிகமாகக் கொடுத்தேன். ஏன் நீ கர்த்தருடைய கட்டளையை அசட்டை செய்தாய்? அவர் தவறெனக் கூறிய காரியத்தை நீ ஏன் செய்தாய்? உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய். நீ, அம்மோனியரின் வாளால் ஏத்தியனாகிய உரியாவைக் கொன்றாய். இந்த விதமாக ஏத்தியானாகிய உரியாவை ஒரு வாளால் கொன்றாய். எனவே வாள் உன் குடும்பத்தை விட்டு அகலாது. நீ ஏத்தியானாகிய உரியாவின் மனைவியை எடுத்துக்கொண்டாய். இப்படி செய்ததினால் நீ என்னைப் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டினாய்.’ “கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார்” என்றான்.

2 சாமுவேல் 12:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான்.