2 பேதுரு 3:11-18
2 பேதுரு 3:11-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இவ்விதமாய் யாவும் அழிக்கப்படப் போவதினால், நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்? பரிசுத்தமும் இறை பக்தியுமுள்ள வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டுமே. இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலாய் காத்துக்கொண்டிருக்கையில், இப்படியே நீங்கள் வாழவேண்டும். அந்த நாளிலே வானங்கள் எரிந்து அழிந்துபோகும், உலகத்தின் பஞ்ச பூதங்கள் கொடிய வெப்பத்தினால் உருகிப்போகும். ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும் புதிய பூமிக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் என் அன்புக்குரியவர்களே, நீங்கள் இவைகளுக்காகக் காத்திருக்கிறபடியால், குற்றம் காணப்படாதவர்களும் மாசற்றவர்களுமாய் இறைவனுடன் சமாதானத்துடன் இருக்கும்படி, எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். கர்த்தருடைய பொறுமை, இரட்சிப்புக்கான தருணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்விதமாகவே நம்முடைய அன்புக்குரிய சகோதரனான பவுலும் இறைவன் தனக்குக் கொடுத்த ஞானத்தின்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். தன்னுடைய கடிதங்களில் எல்லாம் இந்த விஷயங்களைக் குறித்துச் சொல்லும்போது இதேவிதமாய் எழுதியிருக்கிறான். அவனுடைய கடிதங்களில் விளங்கிக்கொள்ள கஷ்டமான சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அவைகளுக்கு அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும் பொய்யான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். அப்படியே அவர்கள் மற்ற வேதவசனங்களுக்கும் தவறான விளக்கத்தையே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுக்கே அழிவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். ஆகையால் என் அன்புக்குரிய நண்பர்களே, இதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறபடியால், கவனமாயிருங்கள். அப்பொழுது சட்டத்தை மீறுகிறவர்களின் தவறுகளினால் வழிவிலகிப்போய், உங்கள் பாதுகாப்பான நிலைமையிலிருந்து விழுந்துபோகாதிருப்பீர்கள். ஆனால் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளர்ச்சியடையுங்கள்.
2 பேதுரு 3:11-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள். ஆகவே, பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் தெரிந்திருக்கிறதினால், அக்கிரமக்காரர்களுடைய வஞ்சகத்தினாலே நீங்கள் இழுக்கப்பட்டு உங்களுடைய உறுதியில் இருந்து விலகி விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாக இருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவருடைய அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
2 பேதுரு 3:11-18 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும். எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர். அன்பான நண்பர்களே, உங்களுக்கு ஏற்கெனவே இதைப் பற்றித் தெரியும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். தாங்கள் செய்கிற தவறான காரியங்களால் அத்தீய மக்கள் உங்களைத் தவறாக வழி நடத்தாதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் உறுதியான நிலையிலிருந்து விழுந்து விடாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். கிருபையிலும், நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
2 பேதுரு 3:11-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.