2 பேதுரு 3:1-16
2 பேதுரு 3:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அன்புக்குரியவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். இந்த இரண்டு கடிதங்களையும் உங்களின் நற்சிந்தனைகளைத் தூண்டிவிடும் நினைப்பூட்டுதல்களாகவே எழுதியிருக்கிறேன். பரிசுத்த இறைவாக்கினர்களால் கடந்த காலத்தில் பேசப்பட்ட வார்த்தைகளையும், நம்முடைய கர்த்தரும் இரட்சகரும் உங்களுடைய அப்போஸ்தலர்கள் மூலமாய் கொடுத்த கட்டளைகளையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். முதலாவதாக, கடைசி நாட்களில் ஏளனக்காரர்கள் வருவார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏளனம் பண்ணுகிறவர்களாயும், தங்கள் தீய ஆசையின்படி நடக்கிறவர்களாயும் இருப்பார்கள். “அவர் திரும்பிவருவதாக வாக்குத்தத்தம் செய்தாரே, அது எங்கே? நம்முடைய முற்பிதாக்கள் இறந்துபோன காலத்திலிருந்து, படைப்பின் ஆரம்பத்தில் இருந்ததுபோலவேதான் எல்லாம் நடைபெறுகிறது” என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் வெகுகாலத்திற்கு முன்பு, இறைவனுடைய வார்த்தையாலே வானங்கள் உண்டாயின என்பதையும், தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரித்து பூமி உண்டாக்கப்பட்டது என்பதையும், அவர்கள் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள். அக்காலத்து உலகமும் இந்தத் தண்ணீரினாலேயே மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதே வார்த்தையினாலே தற்காலத்திலுள்ள வானங்களும் பூமியும் நெருப்பினால் எரிக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்றன. நியாயத்தீர்ப்பின் நாள்வரைக்கும், அதாவது இறை பக்தியற்றவர்கள் அழிக்கப்படும்வரைக்கும் இவை இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றன. என் அன்புக்குரியவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலவும் இருக்கின்றன என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதில் தாமதம் செய்கிறார் என்று சிலர் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விளங்கிக்கொள்கிறவிதத்தில் கர்த்தர் காலதாமதம் செய்யவில்லை. ஆனால் அவர், உங்களைக்குறித்து பொறுமையாய் இருக்கிறார். ஏனெனில், யாரும் அழிந்துபோவதை அவர் விரும்பவில்லை. எல்லோரும் மனந்திரும்புதலை அடையவேண்டும் என்பதையே விரும்புகிறார். ஆனால், கர்த்தருடைய நாள் ஒரு திருடனைப்போல் வரும். பேரிரைச்சலுடன் வானங்கள் மறைந்தொழிந்து போகும்; பஞ்ச பூதங்கள் எல்லாம் நெருப்பினால் எரிந்து அழிந்துபோகும். பூமியும் அதில் உள்ளவைகள் யாவும் தீக்கிரையாகும். இவ்விதமாய் யாவும் அழிக்கப்படப் போவதினால், நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்? பரிசுத்தமும் இறை பக்தியுமுள்ள வாழ்க்கையை நீங்கள் வாழவேண்டுமே. இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலாய் காத்துக்கொண்டிருக்கையில், இப்படியே நீங்கள் வாழவேண்டும். அந்த நாளிலே வானங்கள் எரிந்து அழிந்துபோகும், உலகத்தின் பஞ்ச பூதங்கள் கொடிய வெப்பத்தினால் உருகிப்போகும். ஆனால் நாமோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி குடிகொண்டிருக்கும், புதிய வானங்களுக்காகவும் புதிய பூமிக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆகையால் என் அன்புக்குரியவர்களே, நீங்கள் இவைகளுக்காகக் காத்திருக்கிறபடியால், குற்றம் காணப்படாதவர்களும் மாசற்றவர்களுமாய் இறைவனுடன் சமாதானத்துடன் இருக்கும்படி, எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள். கர்த்தருடைய பொறுமை, இரட்சிப்புக்கான தருணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்விதமாகவே நம்முடைய அன்புக்குரிய சகோதரனான பவுலும் இறைவன் தனக்குக் கொடுத்த ஞானத்தின்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான். தன்னுடைய கடிதங்களில் எல்லாம் இந்த விஷயங்களைக் குறித்துச் சொல்லும்போது இதேவிதமாய் எழுதியிருக்கிறான். அவனுடைய கடிதங்களில் விளங்கிக்கொள்ள கஷ்டமான சில விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. அதனால் அவைகளுக்கு அறிவில்லாதவர்களும் உறுதியற்றவர்களும் பொய்யான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். அப்படியே அவர்கள் மற்ற வேதவசனங்களுக்கும் தவறான விளக்கத்தையே கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுக்கே அழிவை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
2 பேதுரு 3:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து, அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருடங்களைப்போலவும், ஆயிரம் வருடங்கள் ஒருநாளைப்போலவும் இருக்கிறது என்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாமல் இருக்கவேண்டாம். தாமதம் பண்ணுகிறார் என்று சிலர் நினைக்கிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதம்பண்ணாமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம்திரும்பவேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடியபொறுமை உள்ளவராக இருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறதுபோல வரும்; அப்பொழுது வானங்கள் பயங்கர சத்தத்தோடு விலகிப்போகும், பஞ்சபூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதில் உள்ள செயல்களும் எரிந்து அழிந்துபோகும். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாக இருக்கிறதினால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த வாழ்க்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாக இருக்கவேண்டும்! தேவன் வருகின்ற நாள் சீக்கிரமாக வருவதற்கு அதிக ஆவலோடு காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பஞ்சபூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி நிலைத்திருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஆகவே, பிரியமானவர்களே இவைகள் வருவதற்காகக் காத்திருக்கிற நீங்கள் கறை இல்லாதவர்களும் பிழை இல்லாதவர்களுமாகச் சமாதானத்தோடு அவர் சந்நிதியில் காணப்படுவதற்கு கவனமாக இருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் அதிகப் பொறுமையை இரட்சிப்பு என்று நினைத்துக்கொள்ளுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.
2 பேதுரு 3:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)
எனது நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் இரண்டாம் நிருபம் இது. உங்கள் நேர்மையான மனங்கள் சிலவற்றை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையில் நான் உங்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினேன். கடந்த காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் கூறிய வார்த்தைகளை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நமது கர்த்தரும் இரட்சகரும் நமக்கு அளித்த கட்டளையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போஸ்தலர்கள் மூலமாக அக்கட்டளையை அவர் நமக்கு அளித்தார். கடைசி நாட்களில் நடக்கவிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது முக்கியம். மக்கள் உங்களைப் பார்த்து நகைப்பார்கள். அவர்கள் செய்ய விரும்புகிற தீய காரியங்களைப் பின்பற்றி அம்மக்கள் வாழ்வார்கள். அம்மக்கள், “அவர், மீண்டும் வருவதாக வாக்களித்துள்ளார். அவர் எங்கே? நம் தந்தையர் மரித்திருக்கிறார்கள். ஆனால் படைப்பின் ஆரம்பத்திலிருந்து உலகம் இந்த வகையிலேயே தொடர்கிறது” என்பார்கள். ஆனால் அவர்கள் இந்த எண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்போது, நெடுங்காலத்திற்கு முன் நடந்ததை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். நெடுங்காலத்திற்கு முன்பு வானங்கள் இருந்தன. பூமி இருந்தது, தண்ணீருக்கு வெளியே, தண்ணீரின் மூலமாகவே, பூமி வெளிப்படும்படி தேவன் உருவாக்கினார். இவையாவும் தேவனுடைய வார்த்தையாலே உண்டாயின. பிற்காலத்தில் இந்த உலகம் வெள்ளத்தால் நிரப்பப்பட்டு அழிக்கப்பட்டது. ஆனால் தேவனுடைய அந்த வார்த்தையாலேயே இன்றைய வானமும் பூமியும் நெருப்பால் அழிபடும் பொருட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவனுக்கு எதிரான மக்கள் நியாயம் தீர்க்கப்பட்டு அழிக்கப்படும் நாளுக்காக அவை வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அன்பான நண்பர்களே, இந்த ஒரு காரியத்தை நீங்கள் மறவாதீர்கள். கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றது. ஆயிரம் ஆண்டுகளோ ஒரு நாளைப்போன்றவை. கர்த்தர் வாக்குறுதி அளித்ததைச் செய்வதில் சில மக்கள் நிதானத்தைப் பற்றி கருதுவதைப் போன்று உங்களோடு மிகவும் பொறுமையாக இருக்கிறார். எந்த மனிதனும் இழக்கப்படுவதை கர்த்தர் விரும்பவில்லை. ஒவ்வொருவனும் அவனது இதயத்தை மாற்றி, பாவம் செய்வதை விட்டுவிட வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். திருடன் வருவதைப் போன்று கர்த்தர் மீண்டும் வருகிற நாளும் ஆச்சரியமானதாக இருக்கும். மிகுந்த சத்தத்தோடு வானம் மறையும். வானிலுள்ள எல்லாப் பொருள்களும் நெருப்பால் அழிக்கப்படும். பூமியும் அதிலுள்ள மக்களும் அதிலுள்ள சகலமும் நெருப்பிலிடப்பட்டது போலாகும். நான் உங்களுக்குக் கூறியபடியே எல்லாப் பொருட்களும் அழியும். எனவே நீங்கள் எந்த வகையான மனிதர்களாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து, தேவனுக்கு சேவை செய்யவேண்டும். தேவனுடைய நாளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருங்கள். அந்த நாள் வருகிறபோது, வானம் நெருப்பால் அழிக்கப்படும். வானிலுள்ள பொருள்கள் அனைத்தும் வெப்பத்தால் உருகும். ஆனால் தேவன் நமக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தார். அவர் தந்த வாக்குறுதிக்காகவே காத்திருக்கிறோம். நன்மை நிலைபெற்றிருக்கும் இடமாகக் காணப்படும் ஒரு புதிய வானம், ஒரு புதிய பூமி பற்றியதே அவ்வாக்குறுதியாகும். எனவே அன்பான நண்பர்களே இவ்விஷயங்களுக்காக நீங்கள் காத்துக்கொண்டிருப்பதால், தேவனுடைய பார்வையில் கறை இல்லாமலும் குற்றம் இல்லாமலும் இருக்க உங்களால் முடிந்தவரைக்கும் உழைக்க வேண்டும். தேவனோடு சமாதானமாக இருக்க முயலுங்கள். நம் கர்த்தரின் பொறுமையை இரட்சிப்பாக எண்ணுங்கள். தேவன் அளித்த ஞானத்தினால் நமது அன்பான சகோதரர் பவுல் உங்களுக்கு எழுதியபோது இதையே உங்களுக்குக் கூறினார். பவுல் அவரது எல்லா நிருபங்களிலும் இக்காரியங்களைக் குறித்து இவ்வாறே எழுதுகிறார். புரிந்துகொள்ளக் கடினமான விஷயங்கள் சில சமயங்களில் அவருடைய நிருபங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அறியாமை உள்ளவர்களும், விசுவாசத்தில் நிரந்தரமற்றவர்களும் அவ்விஷயங்களைத் தவறான முறையில் எடுத்துரைக்கிறார்கள். இதே முறையில் மற்ற வேதவாக்கியங்களையும் அவர்கள் தவறாக எடுத்துரைக்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களையே அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
2 பேதுரு 3:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; எல்லா நிருபங்களிலும் இவைகளைக் குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.