2 பேதுரு 2:1-3
2 பேதுரு 2:1-3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முற்காலத்தில் பொய்த் தீர்க்கதரிசிகள் மக்கள் மத்தியிலே இருந்தார்கள். அதுபோலவே, பொய் வேத ஆசிரியர்கள் உங்கள் மத்தியிலே இருப்பார்கள். அவர்கள் அழிவை ஏற்படுத்தும் பொய்யான போதனைகளை இரகசியமாய் புகுத்துவார்கள். தங்களை விலைகொடுத்து மீட்ட எல்லாம் வல்ல கர்த்தரையும் அவர்கள் மறுதலிப்பார்கள். இவ்விதமாக அழிவைத் தங்கள்மேல் விரைவாய் வருவித்துக்கொள்வார்கள். பலர் அவர்களுடைய வெட்கக்கேடான வழிகளைப் பின்பற்றுவதினால் சத்திய வழிக்குக்கூட அவமானம் ஏற்படும். இந்த வேத ஆசிரியர் தங்களுடைய பேராசையில் தாங்களே இயற்றிய கட்டுக்கதைகளைச் சொல்லி, உங்களைச் சுரண்டி வாழப்பார்ப்பார்கள். அவர்களுக்குரிய தண்டனைத்தீர்ப்பு அவர்கள்மேல் விழ, இறைவனால் வெகுகாலத்திற்கு முன்னரே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்மேல் வரவிருக்கும் அழிவு உறங்காது.
2 பேதுரு 2:1-3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கள்ளத்தீர்க்கதரிசிகளும் மக்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் அழிவிற்குரிய வேதப்புரட்டுகளைத் தந்திரமாக நுழையப்பண்ணி, தங்களை விலைக்கொடுத்து வாங்கின ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்கு வேகமான அழிவை வரவழைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய தீயசெய்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்களால் சத்தியப்பாதை அவமானப்படும். பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.
2 பேதுரு 2:1-3 பரிசுத்த பைபிள் (TAERV)
கடந்த காலத்தில் தேவனுடைய மக்கள் மத்தியில் போலியான தீர்க்கதரிசிகளும் இருந்தனர். அதே வழியில், உங்கள் குழுவிலும் போலிப் போதகர்கள் கூட இருப்பார்கள். யாரும் பார்க்காத வகையில் இப்போலிப் போதகர்கள் மோசமான போதனைகளை அறிமுகப்படுத்துவார்கள். தங்களை மீட்டுக்கொண்டவரும், தங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தவருமான எஜமானரை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். எனவே அவர்கள் விரைவில் தங்களை அழித்துக்கொள்வார்கள். அவர்கள் செய்கிற தீய செயல்களில் பலரும் அவர்களைப் பின்பற்றுவார்கள். அம்மக்களினால் பிற மக்கள் உண்மை வழியைக் குறித்து தீயவற்றைப் பேசுவர். அவர்களின் பேராசையால் அந்தப் போலிப் போதகர்கள் உண்மையற்ற போலியான போதனைகள் மூலம் உங்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். வெகு காலத்திற்கு முன்பே தேவன் அவர்களுக்குத் தண்டனையை அறிவித்தார். இது வெறும் அச்சமூட்டத்தக்க பேச்சு அல்ல, அவர்களின் அழிவு தயாராகக் காத்திருக்கிறது.
2 பேதுரு 2:1-3 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.