2 பேதுரு 1:8-14

2 பேதுரு 1:8-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில் இப்பண்புகள் உங்களில் வளர்ந்து பெருகும்போது, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி உங்களிடமிருக்கும் அறிவில் நீங்கள் பயனற்றவர்களாகவோ, பலன் கொடுக்காதவர்களாகவோ இருக்காதபடி, இவை உங்களைத் தடுத்துக்கொள்ளும். ஆனால் யாராவது இந்தப் பண்புகள் அற்றவனாயிருந்தால், அவன் தூரப்பார்வையற்றவனாகவும் குருடனாகவும் இருக்கிறான்; தனது முந்திய பாவங்களிலிருந்து, தான் சுத்திகரிக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். ஆகையால் எனக்கு பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள அதிக ஆர்வம் உள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் இவற்றை செய்வீர்களானால், ஒருபோதும் விழுந்துபோகமாட்டீர்கள். நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய அரசுக்குள் ஒரு கவுரவமான வரவேற்பை பெற்றுக்கொள்வீர்கள். நான் இவற்றை உங்களுக்கு எப்பொழுதும் நினைப்பூட்டிக்கொண்டே இருப்பேன்; நீங்கள் இவற்றை அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது சத்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்டும் இருக்கிறீர்கள். ஆனால் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன்.

2 பேதுரு 1:8-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியில்லாதவர்களுமாக இருக்கமாட்டீர்கள். இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்னமே செய்த பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டது, என்பதை மறந்து தன் அருகில் உள்ளவைகளையும் காண இயலாதவனாகவும் குருடனாகவும் இருக்கிறான். ஆகவே, சகோதரர்களே, உங்களுடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்குவதற்கு எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாக, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தல் உங்களுக்குப் பரிபூரணமாக அளிக்கப்படும். இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன்.

2 பேதுரு 1:8-14 பரிசுத்த பைபிள் (TAERV)

இவையனைத்தும் உங்களைத் துடிப்பானவர்களாகவும், ஆக்கம் உள்ளவர்களாகவும் ஆக்கும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி முழுக்க அறிந்துகொள்ள இத்தகுதிகள் உங்களுக்கு உதவும். ஆனால் இவையனைத்தும் ஒருவனிடம் இல்லாதிருந்தால் அவனால் தெளிவாகப் பார்க்க இயலாது. அம்மனிதன் குருடனாக இருப்பான். தனது பழைய பாவங்களினின்று அவன் கழுவப்பட்டவன் என்பதை அவன் மறந்து போனவனாவான். எனது சகோதர சகோதரிகளே, தேவன் உங்களை அழைத்து, அவருக்குரியோராகத் தேர்ந்துகொண்டார். எனவே உங்கள் அழைப்பையும் தேர்வையும் நிரந்தரமாக்கிக்கொள்ள இன்னும் அதிக ஆவலுடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவையனைத்தையும் நீங்கள் செய்தால், நீங்கள் ஒருபோதும் வீழ்ச்சியைடைவதில்லை. நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய இராஜ்யத்தில் நீங்கள் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறுவீர்கள். நீங்கள் இக்காரியங்களை அறிவீர்கள். உங்களிடமுள்ள உண்மையில் நீங்கள் உறுதியுடன் உறுதிப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் இக்காரியங்களை நினைவூட்ட நான் எப்போதும் உதவுவேன். நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன். இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார்.

2 பேதுரு 1:8-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.