2 பேதுரு 1:13-18

2 பேதுரு 1:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இந்த உடலாகிய கூடாரத்தில் நான் வாழும் வரைக்கும், இவ்விதமாய் உங்கள் ஞாபகத்தைப் புதுப்பிப்பது சரியென்றே நான் எண்ணுகிறேன். ஏனெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்குத் தெளிவுபடுத்தியபடி, சீக்கிரமாய் நான் இந்தக் கூடாரத்தைவிட்டுப் பிரிந்துவிடுவேன் என்று அறிந்திருக்கிறேன். ஆகவே நான் இறந்துபோன பின்பும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்கதாய், என்னால் இயன்ற எல்லாவற்றையும் இப்பொழுது நான் செய்வேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம். “இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார். அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.

2 பேதுரு 1:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் மரித்துப்போவது சீக்கிரத்தில் நடக்கும் என்று அறிந்து, நான் மரிக்கும்வரைக்கும் உங்களை ஞாபகப்படுத்தி எழுப்பிவிடுவது நியாயம் என்று நினைக்கிறேன். மேலும், நான் மரித்ததற்குப்பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்வதற்குரிய காரியங்களைச் செய்வேன். நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக இல்லை, அவருடைய மகத்துவத்தைக் கண்களால் பார்த்தவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவர்மேல் பிரியமாக இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.

2 பேதுரு 1:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் இச்சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்வரை இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்வதற்கு உதவுவதை என் கடமை என்று நான் எண்ணுகிறேன். இந்த சரீரத்தினின்று விரைவில் நான் நீங்க வேண்டும் என்பதை அறிவேன். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குக் காட்டியுள்ளார். என் மறைவுக்குப் பிறகு எல்லா நேரங்களிலும் இக்காரியங்களை நீங்கள் நினைவுகூர்ந்துகொள்ளும் பொருட்டு என்னால் இயன்ற அளவு செய்வேன். இயேசு கிறிஸ்து வல்லமையோடு வருவார் என நாங்கள் உங்களிடம் சொன்னபோது புத்திசாலித்தனமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுக்கதைகளை நாங்கள் சார்ந்திருக்கவில்லை. அதற்கு மாறாக, அவருடைய மாட்சிமையை நாங்களே கண்டோம். மிகவும் மகிமை வாய்ந்தவரிடமிருந்து விசேஷ குரலானது அவரை வந்தடைந்த போது பிதாவாகிய தேவனிடமிருந்து அவர் கௌரவமும் மகிமையையும் பெற்றார். அக்குரல், “இவர் என் அருமை குமாரன். நான் இவரைக் குறித்து சந்தோஷப்படுகிறேன்” என்றது. நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.

2 பேதுரு 1:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன். மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன். நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.