2 இராஜாக்கள் 7:3-20

2 இராஜாக்கள் 7:3-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள். அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்த பிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான். அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான். அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது. அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே. அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.

2 இராஜாக்கள் 7:3-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்த வேளையில் நகரத்தின் நுழைவாசலில் நான்கு குஷ்டரோகிகள் இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணம்வரை ஏன் இங்கேயே இருக்கவேண்டும். நாங்கள் நகரத்துக்குள் போனாலும் அங்கும் பஞ்சம் இருப்பதால் அங்கேயும் சாவோம். இங்கேயிருந்தாலும் நாம் இறப்போம். ஆகவே நாம் சீரியருடைய முகாமுக்குப்போய் சரணடைவோம். அவர்கள் நம்மைத் தப்பவிட்டால் நாம் வாழ்வோம். நம்மைக் கொல்வார்களானால் நாம் சாவோம்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். அப்படியே அன்று மாலை பொழுது மறையும் நேரத்தில் எழுந்து, சீரியருடைய முகாமை நோக்கிப் போனார்கள். அவர்கள் முகாமின் எல்லையை நெருங்கியபோது ஒரு மனிதனும் அங்கு இருக்கவில்லை. ஏனென்றால் முகாமிலிருந்த சீரிய இராணுவத்தினருக்கு, யெகோவா குதிரைகள், தேர்களின் சத்தத்தையும், ஒரு பெரிய இராணுவத்தின் சத்தத்தையும் கேட்கப்பண்ணினார். அதனால் சீரிய இராணுவத்தினர் ஒருவரையொருவர் பார்த்து, “கேளுங்கள், இஸ்ரயேல் அரசன் எங்களைத் தாக்குவதற்கு எங்களுக்கு எதிராக ஏத்தியரையும், எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்தியிருக்கிறான்” என்றார்கள். எனவே பொழுது மறையும் நேரத்தில் தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், அப்படியே விட்டுவிட்டு தங்கள் உயிர்களைக் காப்பாற்ற முகாம்களைவிட்டு ஓடிவிட்டார்கள். குஷ்டரோகிகள் முகாமின் எல்லைக்கு வந்துசேர்ந்து ஒரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கே சாப்பிட்டுக் குடித்து அங்கிருந்த வெள்ளியையும், தங்கத்தையும், உடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தார்கள். பின் திரும்பிவந்து வேறொரு கூடாரத்துக்குள் போனார்கள். அங்கிருந்தும் சில பொருட்களை எடுத்துக்கொண்டுபோய் அவற்றையும் ஒளித்துவைத்தார்கள். அதன்பின்பு ஒருவரையொருவர் நோக்கி, “நாம் செய்வது பிழை. இது ஒரு நல்ல செய்திக்குரிய நாளாயிருந்தும், இதை நாம் நமக்குள்ளேயே வைத்திருக்கிறோமே. பொழுது விடியும்வரை காத்திருந்தால் நிச்சயம் தண்டனை நம்மேல் வரும். நாம் உடனேயே போய் இந்தச் செய்தியை அரண்மனைக்கு அறிவிப்போம்” என்று பேசிக்கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் போய் நகர வாசல் காவலாளரைக் கூப்பிட்டு, “நாங்கள் சீரியருடைய முகாமுக்குப் போயிருந்தோம். அங்கு ஒருவரும் இல்லை. ஒரு மனித சத்தமும் கேட்கப்படவுமில்லை. குதிரைகளும், கழுதைகளும் கட்டப்பட்டபடியே இருந்தன. கூடாரங்களும் இருந்தபடியே விடப்பட்டிருந்தன” என்றார்கள். இதைக் கேட்ட வாசல் காவலாளர்கள் இச்செய்தியை அரண்மனையில் உள்ளோரிடம் அறிவித்தார்கள். இரவிலே அரசன் எழுந்து தன் அதிகாரிகளிடம், “சீரியர் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாங்கள் பட்டினியாக இருப்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் முகாமைவிட்டு, பதுங்கித் தாக்குவதற்காக வெளியே சென்றிருக்க வேண்டும். மேலும், ‘இஸ்ரயேலர் நகரத்துக்கு வெளியே நிச்சயமாய் வருவார்கள். அப்போது அவர்களை உயிரோடு பிடித்து, நகரத்துக்குள்ளே போவோம்’ என்றும் நினைத்திருப்பார்கள்” என்று கூறினான். அரசனுடைய அதிகாரிகளில் ஒருவன் அதற்குப் பதிலாக, “நகரத்தில் மீதியாயுள்ள ஐந்து குதிரைகளையும் சிலர் எடுத்துக்கொண்டு அங்கே போகட்டும். அவர்கள் இறந்தாலும் என்ன? இங்கிருந்து மீந்திருக்கும் இஸ்ரயேலருக்கு நடப்பது தான் அவர்களுக்கும் நடக்கும். ஆகவே என்ன நடந்ததென்பதை அறிந்துவரும்படி நாம் அவர்களை அனுப்புவோம்” என்றான். அவ்வாறே அவர்கள் இரண்டு தேர்களையும், குதிரைகளையும் தெரிந்தெடுத்தார்கள். அரசன் தேரோட்டிகளிடம், “நீங்கள் போய் என்ன நடந்தது என்று பார்த்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான். அவர்களைச் சீரிய இராணுவத்தைப் பின்தொடரும்படி அனுப்பினான். அவர்கள் யோர்தான்வரை பின்தொடர்ந்து சென்றார்கள். சீரியர் பயந்து தலைதெறிக்க ஓடியபோது, அவர்களுடைய உடைகளும், மற்றும் ஆயுதங்களும், வழியெல்லாம் வீசப்பட்டுக் கிடந்ததைக் கண்டார்கள். அதைத் தூதுவர்கள் திரும்பிவந்து அரசனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது மக்கள் போய் சீரியரின் முகாமைக் கொள்ளையிட்டார்கள். அதனால் யெகோவா வாக்களித்தபடியே ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. அரசன் தன்னை தன் கைகளில் தாங்கிக்கொண்டுவந்த அதிகாரியை நகர வாசலுக்குப் பொறுப்பாக வைத்தான். உணவுக்காக ஓடிய மக்கள் கூட்டம் வாசலில் இருந்த அந்த அதிகாரியை மிதித்ததினால் அவன் இறந்துபோனான். அரசன் இறைவாக்கு உரைப்போனின் வீட்டுக்கு வந்தபோது அவன் முன்னுரைத்தபடியே நடந்தது. அத்துடன், சமாரியாவின் வாசலில் நாளைக்கு இதே நேரத்தில் ஒரு மரக்கால் கோதுமை ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்றும் அந்த இறைவாக்கினன் சொன்னபடியேயும் நடந்தது. அப்பொழுது அந்த அதிகாரி இறைவனுடைய மனிதனிடம்: “யெகோவா வானத்தில் மதகுகளை உண்டாக்கினாலும் இது உண்மையாக நடக்குமோ?” என்று எதிர்த்துக் கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “நீ உன் கண்களினால் அதைப் பார்ப்பாய். ஆனால் அதில் ஒன்றையாகிலும் சாப்பிடமாட்டாய்” என்று சொல்லியிருந்தான். உண்மையில் இறைவாக்கினன் சொன்னபடியே அவனுக்கும் நடந்தது. மக்கள் அவனை வாசலில் மிதித்தபடியினால் அவன் இறந்தான்.

2 இராஜாக்கள் 7:3-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தொழுநோயாளிகளான நான்குபேர் பட்டணத்தின் நுழைவாயிலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து ஏன் சாக வேண்டும்? பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, சீரியருடைய இராணுவத்திற்குப் போக இரவிலே எழுந்திருந்து, சீரியருடைய முகாமிற்கு அருகில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. ஆண்டவர் சீரியர்களின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நமக்கு எதிராகப் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் கூலிக்கு அமர்த்தினான் என்று சொல்லி, இரவிலே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், முகாமையும் அவைகள் இருந்த விதமாகவே விட்டுவிட்டு, தங்கள் உயிர் தப்ப ஓடிப்போனார்கள். அந்தத் தொழுநோயாளிகள், முகாமின் அருகில் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் நுழைந்து சாப்பிட்டுக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், ஆடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் நுழைந்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியும்வரை காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியர்களின் முகாமிற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனிதனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும், கழுதைகளும், கூடாரங்களும் இருந்த விதமாகவே இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரண்மனையில் உள்ளவர்களுக்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது இராஜா இரவில் எழுந்து, தன் வேலைக்காரர்களை நோக்கி: சீரியர்கள் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் என்றான். அவனுடைய வேலைக்காரர்களில் ஒருவன் மறுமொழியாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்திரவு கொடும்; இதோ, இங்கே இஸ்ரவேலின் சகல மிகுதியிலும், இறந்துபோன இஸ்ரவேலின் அனைத்து கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீதியாக இருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய்வாருங்கள் என்று சொல்லி, சீரியர்களின் இராணுவத்தைப் பின்தொடர்ந்து போகும்படி அனுப்பினான். அவர்கள் யோர்தான்வரை அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர்கள் அவசரமாக ஓடும்போது, அவர்கள் எறிந்துபோட்ட உடைகளும் பொருட்களும் வழி முழுவதும் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவிற்கு அதை அறிவித்தார்கள். அப்பொழுது மக்கள் புறப்பட்டு, சீரியர்களின் முகாமைக் கொள்ளையிட்டார்கள்; யெகோவாவுடைய வார்த்தையின்படியே, எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. ராஜா தனக்குக் கை கொடுத்து உதவி செய்கிற அதிகாரியை பட்டணத்தின் நுழைவாயிலில் கண்காணிக்கக் கட்டளையிட்டிருந்தான்; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததாலே, ராஜா தேவனுடைய மனிதனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே அவன் இறந்துபோனான். பதினாறுபடி அளவுள்ள இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், எட்டுப்படி அளவுள்ள ஒருமரக்கால் கோதுமைமாவு ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியா பட்டணத்தின் நுழைவாயிலில் விற்கும் என்று தேவனுடைய மனிதன் ராஜாவோடே சொன்னபடியே நடந்தது. அதற்கு அந்த அதிகாரி தேவனுடைய மனிதனுக்கு மறுமொழியாக: இதோ, யெகோவா வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே. அப்படியே அவனுக்கு நடந்தது; பட்டணத்தின் நுழைவாயிலிலே மக்கள் அவனை நெருக்கி மிதித்ததினாலே அவன் இறந்துபோனான்.

2 இராஜாக்கள் 7:3-20 பரிசுத்த பைபிள் (TAERV)

நகர வாசலருகில் நான்கு தொழு நோயாளிகள் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குள், “நாம் மரணத்தை எதிர்பார்த்து ஏன் இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறோம்? சமாரியாவில் உண்ண உணவில்லை. நகரத்திற்குள் போனால் நாம் மரித்துப்போவாம். இங்கிருந்தாலும் மரித்துப்போவோம். எனவே ஆராமிய படைக்குச் செல்வோம். அவர்கள் வாழவைத்தால் வாழ்வோம், கொல்ல நினைத்தால் மரித்துப்போவோம்” என்றனர். எனவே அன்று மாலையில் அவர்கள் ஆராமியர்களின் முகாமிற்கு அருகில் சென்றார்கள். முகாமின் விளிம்புவரைக்கும் சென்றார்கள். அங்கு யாருமே இல்லை எனக் கண்டார்கள்! ஆராமிய வீரர்களின் காதுகளில் வீரர்கள், குதிரைகள், இரதங்கள், ஆகியவற்றின் ஓசையைக் கேட்கும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் தமக்குள், “ஏத்திய மற்றும் எகிப்திய ராஜாக்களின் துணையுடன் இஸ்ரவேல் ராஜா நம்மோடு போர் செய்யவருகிறான்!” என்று பேசிக் கொண்டனர். அதனால் அவர்கள் (பயந்து) அன்று மாலையே ஓடிவிட்டனர். அப்போது கூடாரங்கள், குதிரைகள், கழுதைகள் முகாமில் உள்ள எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டுத் தம் உயிருக்காக ஓடிவிட்டனர். முகாம் தொடங்கும் இடத்திற்கு வந்தடைந்த தொழுநோயாளிகள், காலியாக இருந்த கூடாரத்திற்குள் நுழைந்தனர். அவர்கள் நன்றாக உண்டு குடித்தனர். பின் அவர்கள் தங்கம், வெள்ளி, துணி போன்றவற்றை அள்ளிக்கொண்டு வந்தனர். வெளியே கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் இன்னொரு கூடாரத்திற்குள் நுழைந்தனர். அங்குள்ள பொருட்களையும் எடுத்துப் போய் ஒளித்து வைத்தனர். பிறகு அவர்கள் தங்களுக்குள், “நாம் தவறு செய்கிறோம்! இன்று நம்மிடம் நல்ல செய்தி உள்ளது. ஆனால் அமைதியாக இருக்கிறோம். விடியும்வரை இவ்வாறு இருந்தால் தண்டிக்கப்படுவோம். எனவே இப்போது ராஜாவினுடைய வீட்டில் இருக்கிற ஜனங்களிடம் சொல்வோம்” என்று சொல்லிக்கொண்டனர். எனவே தொழுநோயாளிகள் வந்து வாயில் காவலரை அழைத்தனர். அவர்களிடம், “நாங்கள் ஆராமியர்களின் முகாமிற்குச் சென்றோம். அங்கே மனிதர்களும் யாரும் இல்லை. குதிரைகளும் கழுதைகளும் கட்டப்பட்டுள்ளன. கூடாரங்களும் அங்கு உள்ளன. ஆனால் மனிதர்கள் யாரும் இல்லை” என்றனர். பிறகு நகரவாயில் காப்போர்கள் சத்தமிட்டு அரண்மனையில் உள்ளவர்களிடம் சொன்னார்கள். அது இரவு நேரம், ஆனால் ராஜா படுக்கையிலிருந்து எழுந்து தன் அதிகாரிகளிடம், “ஆராமிய வீரர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்று கூறுகிறேன். நமது பட்டினியையும் வறுமையையும் பார்த்து, கூடாரத்தைவிட்டு வயலில் ஒளிந்துக்கொண்டனர். ‘இஸ்ரவேல் ஜனங்கள் நகரத்தைவிட்டு வெளியே வரும்போது உயிரோடு நாம் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்’ என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ‘அதன் பிறகு நகருக்குள் நுழையலாம்’ என்று இருக்கிறார்கள்” என்று சொன்னான். ஒரு அதிகாரியோ, “சிலர் 5 குதிரைகளைக் கொண்டுபோக அனுமதி வழங்குங்கள். அவை எப்படியாவது இங்கு மரித்துப் போகும். இவை ஜனங்களைப் போலவே பட்டினியாக உள்ளன. அவற்றை அனுப்பிப் பார்ப்போம்” என்றான். எனவே ஜனங்கள் இரண்டு இரதங்களைக் குதிரையோடு தயார் செய்தனர். ராஜா அவர்களை ஆராமியப் படையை நோக்கி அனுப்பினான். ராஜா அவர்களிடம், “என்ன நடக்கிறது என்று போய் பாருங்கள்” என்றான். அவர்கள் ஆராமியர்களைத் தொடர்ந்து யோர்தான் ஆறுவரைக்கும் சென்றார்கள். வழியெல்லாம் ஆடைகளும் ஆயுதங்களும் கிடந்தன. அவை வீரர்கள் ஓடும்போது எறிந்தவை. தூதர்கள் ராஜாவிடம் திரும்பி வந்து இவற்றைக் கூறினார்கள். பிறகு ஜனங்கள் கூடாரங்களுக்கு ஓடிப் போய் அங்குள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவந்தனர். எனவே இது கர்த்தர் சொன்னது போலானது. ஒருவனால் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்க முடிந்தது. ராஜாவின் அரச ஆணைப்படி காவலுக்கு நெருக்கமான அதிகாரி வாசலில் இருந்தான். ஜனங்கள் கூடாரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனைத் தள்ளி மிதித்துவிட்டு ஓடியதால் கொல்லப்பட்டான். ராஜா அவரது வீட்டிற்கு போனபோது, தேவமனிதர் (எலிசா) சொன்னது போலவே எல்லாம் நடந்தது. எலிசா, “சமாரியாவின் நகர வாசலுக்கருகில் உள்ள சந்தையில் ஒருவன் ஒரு மரக்கால் கோதுமை மாவை ஒரு சேக்கலுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமையை ஒரு சேக்கலுக்கும் வாங்கமுடியும்” என்று சொல்லியிருந்தான். ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, “பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!” என்று பதில் சொல்ல, எலிசா, “இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது” என்றான். அந்த அதிகாரிக்கும் அது அவ்வாறே நடந்தது. ஜனங்கள் நகரவாசலில் அவனைத் தள்ளி, அவன் மீதே நடந்து சென்றார்கள். அவனும் செத்துப்போனான்.