2 இராஜாக்கள் 6:18-23

2 இராஜாக்கள் 6:18-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.

2 இராஜாக்கள் 6:18-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பகைவர் எலிசாவை நோக்கி வந்தபோது, எலிசா யெகோவாவை நோக்கி, “இந்தப் படையினரைக் குருடராக்கும்” என்று மன்றாடினான். எலிசா வேண்டிக்கொண்டபடியே யெகோவா அவர்களைக் குருடராக்கினார். எலிசா அவர்களை நோக்கி, “இது பாதையுமல்ல, நகரமுமல்ல; என்னைப் பின்பற்றி வாருங்கள். நீங்கள் தேடித்திரியும் மனிதனிடம் உங்களை வழிநடத்துவேன்” என்று கூறி அவர்களைச் சமாரியாவுக்கு வழிநடத்திக்கொண்டு போனான். அவர்கள் பட்டணத்துக்குள் போனதும் எலிசா, “யெகோவாவே இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும்” என்றான். யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது தாங்கள் சமாரியாவுக்குள் இருப்பதை அவர்கள் கண்டார்கள். இஸ்ரயேல் அரசன் அவர்களைக் கண்டபோது எலிசாவிடம், “என் தகப்பனே, நான் அவர்களைக் கொன்றுவிடட்டுமா?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “அவர்களைக் கொல்லாதே. உனது வாளாலும், வில்லாலும் சிறைப்பிடித்த கைதிகளைக் கொல்லலாமா? அவர்களுக்குச் சாப்பிட அப்பமும், குடிக்கத் தண்ணீரும் கொடுத்து அவர்களுடைய எஜமானிடம் திருப்பி அனுப்பிவிடு” என்றான். அப்படியே அரசனும் அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தை ஆயத்தப்படுத்தினான். அவர்கள் சாப்பிட்டு, குடித்து முடித்தவுடன் அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் தங்கள் எஜமானிடம் திரும்பிப் போனார்கள். அதன்பின் சீரியப் படைப் பிரிவுகள் இஸ்ரயேலை திடீர் தாக்குதல் செய்வதை நிறுத்திவிட்டார்கள்.

2 இராஜாக்கள் 6:18-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார். அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பின்னே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனிதனிடத்திற்கு நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான். அவர்கள் சமாரியாவிற்கு வந்தபோது, எலிசா: யெகோவாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்களுடைய கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக் யெகோவா அவர்களுடைய கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறைபிடித்தவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் சாப்பிட்டுக் குடித்து, தங்கள் எஜமானிடத்திற்குப் போகும்படி, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கு முன்பாக வையும் என்றான். அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துசெய்து, அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்களுடைய ஆண்டவனிடத்திற்குப் போய்விட்டார்கள்; சீரியர்களின் படைகள் இஸ்ரவேல் தேசத்திலே அதற்குப் பிறகு வரவில்லை.

2 இராஜாக்கள் 6:18-23 பரிசுத்த பைபிள் (TAERV)

பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான். அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான். பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! இஸ்ரவேலின் ராஜா ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான். ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் ராஜா நிறைய உணவைத் தயாரித்தான். ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் ராஜா ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.