2 இராஜாக்கள் 2:1-5

2 இராஜாக்கள் 2:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா எலியாவை ஒரு சுழல் காற்று மூலம் பரலோகத்துக்குக் கொண்டுபோகும் நேரம் சமீபித்தபோது, எலியாவும், எலிசாவும், கில்காலிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எலியா எலிசாவைப் பார்த்து, “யெகோவா என்னைப் பெத்தேலுக்குப் போகும்படி அனுப்பியிருக்கிறார். ஆகவே நீ இங்கேயே இரு” என்றான். ஆனால் எலிசாவோ, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும் நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். பெத்தேலிலிருந்த இறைவாக்கினர் குழு எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான். அதன்பின் எலியா அவனிடம், “எலி சாவே நீ இங்கேயே தங்கியிரு, யெகோவா என்னை எரிகோவுக்கு அனுப்புகிறார்” என்றான். அதற்கு எலிசா, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும், நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவர்கள் இருவரும் எரிகோவுக்குப் போனார்கள். எரிகோவிலிருந்த இறைவாக்கு உரைப்போரின் கூட்டம் எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் இதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான்.

2 இராஜாக்கள் 2:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

2 இராஜாக்கள் 2:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். எலியா எலிசாவிடம், “நீ இங்கே இரு. கர்த்தர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள். சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான். அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர். எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், “இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்” என்றான்.

2 இராஜாக்கள் 2:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்