2 இராஜாக்கள் 2:1-12
2 இராஜாக்கள் 2:1-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா எலியாவை ஒரு சுழல் காற்று மூலம் பரலோகத்துக்குக் கொண்டுபோகும் நேரம் சமீபித்தபோது, எலியாவும், எலிசாவும், கில்காலிலிருந்து போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது எலியா எலிசாவைப் பார்த்து, “யெகோவா என்னைப் பெத்தேலுக்குப் போகும்படி அனுப்பியிருக்கிறார். ஆகவே நீ இங்கேயே இரு” என்றான். ஆனால் எலிசாவோ, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும் நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். பெத்தேலிலிருந்த இறைவாக்கினர் குழு எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான். அதன்பின் எலியா அவனிடம், “எலி சாவே நீ இங்கேயே தங்கியிரு, யெகோவா என்னை எரிகோவுக்கு அனுப்புகிறார்” என்றான். அதற்கு எலிசா, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும், நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். அவர்கள் இருவரும் எரிகோவுக்குப் போனார்கள். எரிகோவிலிருந்த இறைவாக்கு உரைப்போரின் கூட்டம் எலிசாவிடம் போய், “இன்றைக்கு யெகோவா உமது எஜமானை உம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு எலிசா, “ஆம் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் இதைப்பற்றிப் பேசாதிருங்கள்” என்றான். அதன்பின் எலியா எலிசாவிடம், “நீ இங்கே தங்கியிரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார்” என்றான். அதற்கு அவன், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீர் வாழ்வது நிச்சயம்போலவும் நான் உம்மைவிட்டு விலகமாட்டேன் என்பதும் நிச்சயம்” என்றான். எனவே இருவரும் தொடர்ந்து நடந்தார்கள். ஐம்பதுபேர் கொண்ட இறைவாக்கினர் கூட்டமொன்று, எலியாவும் எலிசாவும் யோர்தானின் அருகே நின்ற இடத்தை சிறிது தொலைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எலியா தன் மேலுடையை எடுத்து அதைச் சுருட்டி அதனால் யோர்தான் தண்ணீரை அடித்தான். தண்ணீர் வலப்பக்கமும், இடப்பக்கமுமாக இரண்டாகப் பிரிந்தது. அவர்கள் இருவரும் காய்ந்த நிலத்தில் நடந்து அக்கரைக்குப் போனார்கள். அவர்கள் அக்கரைக்குப் போனபோது எலியா எலிசாவைப் பார்த்து, “நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறாய்” என்று கேட்டான். அதற்கு எலிசா, “உம்முடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எனக்கு உரிமையாகத் தாரும்” என்றான். அப்பொழுது எலியா அவனைப் பார்த்து, “கஷ்டமான ஒரு காரியத்தைக் கேட்டிருக்கிறாய். ஆனாலும் உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ கண்டாயானால் நீ கேட்டபடி கிடைக்கும். இல்லாவிட்டால் கிடைக்காது” என்று கூறினான். அதன்பின் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நடந்துபோகையில் திடீரென நெருப்புத் தேரும், நெருப்புக் குதிரைகளும் தோன்றி அவர்கள் இருவரையும் பிரித்தது. எலியா ஒரு சுழல் காற்றில் பரலோகத்துக்குப் போனான். எலிசா அதைப் பார்த்து, “என் தகப்பனே! என் தகப்பனே! இஸ்ரயேலின் தேர்களே! குதிரைவீரரே!” என்று பலமாகச் சத்தமிட்டான். அதன்பின்பு எலிசா அவனைக் காணவில்லை. அப்பொழுது எலிசா தன் உடைகளைப் பிடித்து இரண்டாகக் கிழித்தான்.
2 இராஜாக்கள் 2:1-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள். தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள். அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான். அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
2 இராஜாக்கள் 2:1-12 பரிசுத்த பைபிள் (TAERV)
சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். எலியா எலிசாவிடம், “நீ இங்கே இரு. கர்த்தர் என்னைப் பெத்தேலுக்குப் போகச்சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களை விட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் உங்கள் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் பெத்தேலுக்குச் சென்றார்கள். சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம் வந்து, “இன்று உங்கள் எஜமானனான எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்போகும் செய்தி தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், எனக்குத் தெரியும். அது பற்றி பேசவேண்டாம்” என்று பதிலளித்தான். அங்கே எலியா எலிசாவிடம், “நீ இங்கேயே இரு. கர்த்தர் என்னிடம் எரிகோவிற்குப் போகச் சொன்னார்” என்றான். ஆனால் எலிசாவோ, “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டு கூறுகிறேன்” என்றான். எனவே அவர்கள் இருவருமாக எரிகோவிற்குச் சென்றனர். எரிகோவில் சில தீர்க்கதரிசிகள் எலிசாவிடம், “இன்று உனது எஜமான் எலியாவைக் கர்த்தர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறாராமே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “ஆமாம், அது தெரியும். அதைப் பற்றி பேசவேண்டாம்” என்றான். எலியா எலிசாவிடம், “நீ தயவுசெய்து இங்கேயே இரு. யோர்தான் ஆற்றுக்குப் போகுமாறு என்னிடம் கர்த்தர் சொன்னார்” என்றான். அதற்கு அவன், “நான் உங்களைவிட்டு விலகமாட்டேன் என்று கர்த்தர் மீதும் என் மீதும் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்றான். எனவே இருவரும் சென்றனர். அங்கே 50 பேர்கள் அடங்கிய தீர்க்கதரிசி குழு அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது. எலியாவும் எலிசாவும் யோர்தான் ஆற்றின் அருகில் நின்றார்கள். அவர்கள் நின்ற இடத்தை நோக்கியபடி மற்ற 50 பேர்களும் அவர்களிடம் இருந்து விலகி தூரத்தில் நின்றார்கள். எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள். பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான். எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான். எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான். இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.
2 இராஜாக்கள் 2:1-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள். தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள். அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான். அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.