2 இராஜாக்கள் 13:20-25
2 இராஜாக்கள் 13:20-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான். மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது. ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான். யோவாகாசின் ஆட்சிக் காலமெல்லாம் சீரிய அரசனாகிய ஆசகேல் இஸ்ரயேலரை ஒடுக்கினான். ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார். சீரிய அரசன் ஆசகேல் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் பெனாதாத் அரசனானான். யோவாகாசின் மகன் யோவாஸ் தன் தகப்பன் யோவாகாசிடமிருந்து, ஆசகேலின் மகனான பெனாதாத் கைப்பற்றிய நகரங்களை அவனிடமிருந்து திரும்பவும் பிடித்தான். யோவாஸ் அவனை மூன்றுமுறை தோற்கடித்து இஸ்ரயேல் பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 13:20-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான். ஆனாலும் யெகோவா அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார். சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் மரணமடைந்து, அவன் மகனாகிய பெனாதாத் அவனுடைய இடத்திலே ராஜாவான பின்பு, யோவாகாசின் மகனாகிய யோவாஸ், ஆசகேலோடே போர்செய்து, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவனுடைய மகனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்றுமுறை யோவாஸ் அவனை முறியடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.
2 இராஜாக்கள் 13:20-25 பரிசுத்த பைபிள் (TAERV)
எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்! யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான். ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை. ஆராமின் ராஜாவாகிய ஆசகேல் மரித்தான், அவனது குமாரனான பெனாதாத் புதிய ராஜா ஆனான். அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான். ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் குமாரனான பெனாதாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.
2 இராஜாக்கள் 13:20-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான். ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார். சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு, யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்று விசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.