2 இராஜாக்கள் 1:3-10
2 இராஜாக்கள் 1:3-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் யெகோவாவின் தூதன் திஸ்பிய ஊரைச்சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப்போகிறீர்கள்?’ என்று கேள். அதனால் யெகோவா சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய்’ என்றும் சொல் என்றான்.” அப்படியே எலியா போனான். தூதுவர்கள் அரசனிடம் திரும்பிவந்தபோது, அரசன் அவர்களிடம், “ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப்போய், யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகிறாய்? எனவே நீ படுக்கும் படுக்கையை விட்டு எழும்பமாட்டாய். நிச்சயமாகவே நீ சாவாய்’ என்று சொல்லுங்கள் என்கிறான்” என்றார்கள். அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன்?” என்று கேட்டான். அப்பொழுது அவர்கள், “அவன் கம்பளி உடையை அணிந்து, இடுப்பைச் சுற்றி தோல் பட்டியை கட்டியிருந்தான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் திஸ்பியனாகிய எலியாதான்” என்றான். அதன்பின் அவன் ஒரு இராணுவத் தளபதியையும், அவனுடைய ஐம்பது மனிதரைக்கொண்ட ஒரு குழுவையும் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகிறார்” என்றான். எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால் பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து தளபதியையும் அவன் மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது.
2 இராஜாக்கள் 1:3-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவுடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது.
2 இராஜாக்கள் 1:3-10 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை ராஜா அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்? ராஜா அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான். தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய ராஜாவிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க ராஜா தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர். அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான். அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர். பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான். அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு ராஜா சொல்கிறார்” என்றான். எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான். அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.
2 இராஜாக்கள் 1:3-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான். அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.