2 இராஜாக்கள் 1:1-18

2 இராஜாக்கள் 1:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள். அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான். அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது. மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான். எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது. திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூ இடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 இராஜாக்கள் 1:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகாப் அரசன் இறந்தபின்பு மோவாபியர் இஸ்ரயேலுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். அப்பொழுது அரசன் அகசியா, சமாரியாவிலுள்ள அவனுடைய மேல்மாடியின் ஜன்னலின் வழியாய் கீழே விழுந்து காயப்பட்டிருந்தான். எனவே அவன் தனது ஆட்களை அனுப்பி, “எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் போய், நான் இந்த காயத்திலிருந்து சுகமாவேனா?” என்று கேட்டுவரும்படி சொன்னான். ஆனால் யெகோவாவின் தூதன் திஸ்பிய ஊரைச்சேர்ந்த எலியாவை நோக்கி, “நீ சமாரியா அரசனின் தூதுவரைச் சந்தித்து அவர்களிடம், ‘இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் ஆலோசனை கேட்கப்போகிறீர்கள்?’ என்று கேள். அதனால் யெகோவா சொல்வதாவது: ‘நீ படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய்’ என்றும் சொல் என்றான்.” அப்படியே எலியா போனான். தூதுவர்கள் அரசனிடம் திரும்பிவந்தபோது, அரசன் அவர்களிடம், “ஏன் திரும்பி வந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “ஒரு மனிதன் எங்களைச் சந்திக்க வந்தான். அவன் எங்களைப் பார்த்து, ‘உங்களை அனுப்பிய அரசனிடம் நீங்கள் திரும்பிப்போய், யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா எக்ரோனின் தெய்வமான பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு மனிதரை அனுப்புகிறாய்? எனவே நீ படுக்கும் படுக்கையை விட்டு எழும்பமாட்டாய். நிச்சயமாகவே நீ சாவாய்’ என்று சொல்லுங்கள் என்கிறான்” என்றார்கள். அரசன் அவர்களிடம், “உங்களைச் சந்திக்க வந்து இதை உங்களிடம் கூறிய மனிதன் எப்படிப்பட்டவன்?” என்று கேட்டான். அப்பொழுது அவர்கள், “அவன் கம்பளி உடையை அணிந்து, இடுப்பைச் சுற்றி தோல் பட்டியை கட்டியிருந்தான்” என்றார்கள். அதற்கு அரசன், “அவன் திஸ்பியனாகிய எலியாதான்” என்றான். அதன்பின் அவன் ஒரு இராணுவத் தளபதியையும், அவனுடைய ஐம்பது மனிதரைக்கொண்ட ஒரு குழுவையும் எலியாவிடம் அனுப்பினான். தளபதி மலையின் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருந்த எலியாவிடம் போய், “இறைவனுடைய மனிதனே, ‘கீழே வா’ என்று அரசன் கூறுகிறார்” என்றான். எலியா அதற்குப் பதிலாக தளபதியிடம், “நான் இறைவனுடைய மனிதனாயிருந்தால் பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து தளபதியையும் அவன் மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. அப்பொழுது அரசன் மற்றொரு தளபதியை ஐம்பது மனிதருடன் எலியாவிடம் அனுப்பினான். தளபதி அவனிடம், “இறைவனுடைய மனிதனே, உடனே கீழே வா என்று அரசன் சொல்கிறார்” என்றான். எலியா அதற்குப் பதிலாக, “நான் ஒரு இறைவனுடைய மனிதனாயிருந்தால், பரலோகத்திலிருந்து நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது மனிதரையும் சுட்டெரிக்கட்டும்” என்றான். அப்படியே பரலோகத்திலிருந்து இறைவனுடைய நெருப்பு விழுந்து அவனையும் அவனுடைய ஐம்பது மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. அப்பொழுது அரசன் மூன்றாம் தளபதியையும் ஐம்பது மனிதருடன் சேர்த்து அனுப்பினான். இந்த மூன்றாம் தளபதி மேலே ஏறிப்போய் எலியாவின்முன் முழங்காற்படியிட்டு, “இறைவனுடைய மனிதனே, என்னுடைய உயிருக்கும் உமது பணியாட்களான இந்த ஐம்பது மனிதருடைய உயிர்களுக்கும் சற்று இரக்கம் காட்டும். இதோ பாரும், பரலோகத்திலிருந்து நெருப்பு விழுந்து முந்திய இரு தளபதிகளையும், அவர்களுடைய மனிதரையும் சுட்டெரித்துப்போட்டது. ஆனால் இப்போதோ என்னுடைய உயிருக்கு இரக்கம் காட்டும்” என்று கெஞ்சிக்கேட்டான். அப்பொழுது யெகோவாவின் தூதன் எலியாவிடம், “அவனோடே கீழே இறங்கிப்போ. அவனுக்குப் பயப்படாதே” என்றான். எலியா உடனே எழுந்து அவனோடுகூட கீழே இறங்கி அரசனிடம் போனான். அவன் அரசனிடம், “யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலில் இறைவன் இல்லையென்றா, எக்ரோனின் தெய்வமாகிய பாகால் சேபூபிடம் விசாரிப்பதற்கு தூதுவரை அனுப்பினாய்? நீ இதைச் செய்தபடியினால், படுத்திருக்கும் படுக்கையை விட்டு எழும்பவே மாட்டாய். நீ நிச்சயமாய் சாவாய் என்கிறார்” என்றான். எலியா கூறிய யெகோவாவின் வார்த்தையின்படியே அகசியா இறந்தான். அகசியாவுக்கு ஒரு மகனும் இல்லாதிருந்தபடியினால் அவன் சகோதரன் யோராம் அவனுக்குப்பின் அரசனானான். யூதா அரசன் யோசபாத்தின் மகனான யெகோராம் யூதாவை அரசாண்ட இரண்டாம் வருடத்திலே யோராம் இஸ்ரயேலின் அரசனானான். அகசியா அரசனின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், இஸ்ரயேல் அரசர்களின் வம்ச வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.

2 இராஜாக்கள் 1:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர்கள் இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம்செய்து பிரிந்துபோனார்கள். அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டின் ஜன்னலிலிருந்து விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி சுகமாகிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். யெகோவாவுடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களைச் சந்தித்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? இதனால் நீ ஏறிப்படுத்த கட்டிலிலிருந்து இறங்காமல், நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் ஏன் திரும்பிவந்தீர்கள் என்று அவன் அவர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள்: ஒரு மனிதன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவிடம் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதனால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்பதை அவனிடம் சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களைச் சந்தித்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனிதனின் தோற்றம் எப்படி இருந்தது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: அவன் கம்பளி உடையை அணிந்து, தோல் கச்சையைத் தன் இடுப்பிலே கட்டியிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பது பேரையும் சுட்டெரித்தது. மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனிதனே, ராஜா உன்னைச் சீக்கிரமாக வரச்சொல்லுகிறார் என்றான். எலியா அவர்களுக்கு மறுமொழியாக: நான் தேவனுடைய மனிதனானால், வானத்திலிருந்து அக்கினி இறங்கி, உன்னையும் உன்னுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரிக்கக்கடவது என்றான்; உடனே வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி இறங்கி, அவனையும் அவனுடைய ஐம்பதுபேரையும் சுட்டெரித்தது. மறுபடியும் மூன்றாவது முறை ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது வீரர்களையும் அனுப்பினான்; இந்த மூன்றாவது தலைவன் ஏறிவந்து, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனிதனே, என்னுடைய உயிரும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் உயிரும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. இதோ, வானத்திலிருந்து அக்கினி இறங்கி, முந்தின இரண்டு தலைவர்களையும், அவரவர்களுடைய ஐம்பது வீரர்களையும் சுட்டெரித்தது; இப்போதும் என்னுடைய உயிர் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான். அப்பொழுது யெகோவாவுடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூவிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நிச்சயமாக மரணமடைவாய் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான். எலியா சொன்ன யெகோவாவுடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்கு மகன் இல்லாததால், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய மகனான யோராமின் இரண்டாம் வருடத்தில் யோராம் அவனுடைய இடத்தில் ராஜாவானான். அகசியாவின் மற்ற செயல்பாடுகள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 1:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது. ஒரு நாள், அகசியா தன் வீட்டின் மேல்மாடியில் இருந்தான். அப்போது மரச் சட்டங்களாலான கிராதியின் வழியாகக் கீழே விழுந்துவிட்டான். அவனுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. அவன் தன் வேலையாட்களை அழைத்து அவர்களிடம், “எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய், அவர்கள் ஆசாரியர்களிடம், இந்த காயங்களில் இருந்து குணமடைவேனா” என்று விசாரித்து வரும்படி சொன்னான். ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை ராஜா அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்? ராஜா அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான். தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான். அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய ராஜாவிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க ராஜா தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர். அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான். அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர். பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான். அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு ராஜா சொல்கிறார்” என்றான். எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான். அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது. அகசியா இன்னொரு தளபதியையும் 50 பேரையும் அனுப்பிவைத்தான். அத்தளபதியும், “தேவமனிதனே! நீங்கள் விரைவாக கீழே இறங்கவேண்டும் என்று ராஜா சொல்கிறார்!” என்றான். அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான். பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது. அகசியா மூன்றாவதாக ஒரு தளபதியை 50 ஆட்களுடன் அனுப்பிவைத்தான். அவர்களும் எலியாவிடம் வந்தனர். பின் தளபதி, “தேவமனிதனே, என்னுடைய உயிரையும், உங்கள் ஊழியர்களாகிய இந்த 50 பேருடைய உயிர்களையும் காப்பாற்றுங்கள். பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தருடைய தூதன் எலியாவிடம், “தளபதியோடு செல், அவனைக்கண்டு பயப்படவேண்டாம்” என்றான். எனவே எலியா ராஜாவாகிய அகசியாவைப் பார்க்கத் தளபதியோடு போனான். எலியா அகசியாவிடம், “தேவன் இப்படிக் கூறுகிறார். அதாவது: இஸ்ரவேலில் தேவன் இருக்கிறார். அவரிடம் கேட்காமல் ஏன் எக்ரோனின் தேவனான பாகால் சேபூபிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறாய். நீ இவ்வாறு செய்ததால் நோய் குணமாகாமல் படுத்தப்படுக்கையிலேயே மரித்துவிடுவாய்!” என்றான். எலியாவின் மூலமாக, கர்த்தர் சொன்னது போல அகசியா மரித்தான். அவனுக்கு குமாரன் இல்லாததால் யோராம் புதிய ராஜாவானான். இது அவன் தந்தை யோசபாத்தின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடந்தது. அகசியா செய்த பிறச்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.