2 யோவான் 1:4-11

2 யோவான் 1:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிதா நமக்குக் கட்டளையிட்டபடி, உங்களது பிள்ளைகளில் சிலர் சத்திய வழியில் நடப்பதைக் குறித்து அறிந்தபோது, அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இப்பொழுதும் அன்பான அம்மையாரே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. நாம் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட அதே கட்டளையையே எழுதுகிறேன். நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும் என்றே நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே அன்பு. நீங்கள் ஆரம்பத்தில் கேள்விப்பட்டிருக்கிறபடி, நாம் அன்பிலே நடக்கவேண்டும் என்பதே அவருடைய கட்டளை. ஏனெனில் பல ஏமாற்றுக்காரர்கள் புறப்பட்டு உலகமெங்கும் பரவியிருக்கிறார்கள், அவர்கள் இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். இப்படிப்பட்ட எவரும் ஏமாற்றுக்காரரும் கிறிஸ்துவின் விரோதியுமாய் இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் உங்கள் கடும் உழைப்பின் பலனை இழந்துபோகாமல் கவனமாயிருங்கள். அந்த வெகுமதியை நீங்கள் முழுநிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருக்காமல், வரம்புமீறிச் செல்கின்ற எவரோடும் இறைவன் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவின் போதனைகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிறவன், பிதாவையும் அவருடைய மகனையும் உடையவனாயிருக்கிறான். உங்களிடம் வருகிற யாராகிலும் இந்த போதனையைக் கொண்டுவராவிட்டால், அவனை உங்களுடைய வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ளவோ, வரவேற்கவோ வேண்டாம். ஏனெனில், யாராவது அப்படிப்பட்ட ஒருவனை வரவேற்றால், இவர்களும் அவனுடைய கொடிய செயலுக்குப் பங்காளியாகிறார்கள்.

2 யோவான் 1:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிதாவினால் நாம் பெற்ற கட்டளையின்படி உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்பொழுதும் தாயாரே, நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று, உமக்குப் புதிய கட்டளையாக எழுதாமல், ஆரம்பம் முதல் நமக்கு உண்டாயிருக்கிற கட்டளையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கட்டளை இதுவே. சரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக ஏமாற்றுக்காரர்கள் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே ஏமாற்றுக்காரனும், அந்திக்கிறிஸ்துவுமாக இருக்கிறான். உங்களுடைய செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெற்றுக்கொள்வதற்கு எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திருக்காமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவன் இல்லை, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடம் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமல் இருந்தால், அவனை உங்களுடைய வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய கெட்டசெய்கைகளுக்கும் பங்குள்ளவன் ஆகிறான்.

2 யோவான் 1:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்கள் குழந்தைகளில் சிலரைக் குறித்து அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன். பிதா நமக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் உண்மையின் வழியைப் பின்பற்றுகிறார்கள் என்பதை அறிந்து நான் சந்தோஷப்படுகிறேன். இப்போதும், அன்பான பெண்மணியே, நான் உனக்குக் கூறுகிறேன், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். இது புதுக் கட்டளையல்ல, தொடக்கத்திலிருந்தே, நாம் பெற்ற அதே கட்டளையாகும். நாம் வாழும்படியாக அவர் கட்டளையிட்ட வழியில் வாழ்வதே அன்புகாட்டுவதாகும். தேவனின் கட்டளையும் இதுவே. நீங்கள் அன்பின் வாழ்க்கையை வாழுங்கள். தொடக்கத்தில் இருந்தே நீங்கள் கேள்விப்பட்ட கட்டளையும் இது தான். இப்போது உலகில் அநேக தவறான போதகர்கள் இருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து ஒரு மனிதனானார் என்பதை இந்தத் தவறான போதகர்கள் சொல்ல மறுக்கிறார்கள். இந்த உண்மையை சொல்ல மறுக்கிற மனிதன் தவறான போதகனும் போலிக் கிறிஸ்துவுமாயிருக்கிறான். எச்சரிக்கையாயிருங்கள்! உங்கள் செயல்களுக்குரிய நற்பலனை இழந்துவிடாதிருங்கள். உங்களுக்குரிய எல்லாப் பலன்களையும் பெறுவதில் எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்துவின் போதனைகளை மட்டுமே பின்பற்றுவதை ஒருவன் தொடரவேண்டும். கிறிஸ்துவின் போதனைகளை ஒருவன் மாற்றினால், அம்மனிதனிடம் தேவன் இல்லை. ஆனால் தேவனின் போதனைகளைத் தொடர்ந்து ஒரு மனிதன் பின்பற்றினால், அம்மனிதன் பிதா, குமாரன் ஆகிய இருவரையும் ஏற்றுக்கொள்கிறான். ஒருவன் இப்போதனையைக் கொண்டுவராமல் உங்களிடம் வந்தால் அவனை உங்கள் வீட்டில் ஏற்காதீர்கள். அவனை வரவேற்காதீர்கள். நீங்கள் அவனை ஏற்றுக்கொண்டால் அவனது தீயசெயல்களுக்கும் நீங்களும் உதவியவராவீர்கள்.

2 யோவான் 1:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.