2 கொரிந்தியர் 9:6-9
2 கொரிந்தியர் 9:6-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஒவ்வொருவனும், அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். கட்டாயத்தின் பேரிலோ, மனவருத்தத்துடனோ ஒருவரும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் மகிழ்ச்சியோடு கொடுக்கிறவனிலே, இறைவன் அன்பாயிருக்கிறார். எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க, இறைவன் ஆற்றலுடையவராய் இருக்கிறார். இதனால் நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும், தேவைகளையெல்லாம் பெற்றுக்கொண்டவர்களாய், எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.
2 கொரிந்தியர் 9:6-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும்.
2 கொரிந்தியர் 9:6-9 பரிசுத்த பைபிள் (TAERV)
“கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும். “அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான். அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.”
2 கொரிந்தியர் 9:6-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.