2 கொரிந்தியர் 9:1-11

2 கொரிந்தியர் 9:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு. அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன். மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும். ஆகையால், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.

2 கொரிந்தியர் 9:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து நான் தொடர்ந்து உங்களுக்கு எழுதவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உதவிசெய்ய ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களிடம், உங்களைக்குறித்துப் பெருமையாகவும் பேசியிருக்கின்றேன். நான் அவர்களிடம், அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த வருடத்தில் இருந்தே உதவிசெய்ய ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். உங்களுடைய அந்த ஆர்வம் அவர்களில் அநேகரை செயலாற்றுவதற்கு உற்சாகப்படுத்தியது. இப்பொழுது இந்த விஷயத்தில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாய்ப் பேசியது, வெறும் வார்த்தைகளாய்ப் போகாதபடி, நான் இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள் என்று நான் அவர்களுக்குச் சொன்னதுபோலவே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மக்கெதோனியாவிலுள்ளவர்களில் யாராவது என்னுடன் வரும்போது, நீங்கள் ஆயத்தமாய் இல்லையெனக் கண்டால், நாங்கள் உங்களில் வைத்த மனவுறுதியின் நிமித்தம் வெட்கப்பட நேரிடும் எனச் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் வெட்கப்பட்டுப் போவீர்களே. எனவே இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்பாகவே உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குப்பண்ணிய நன்கொடைகளைச் சேர்த்து ஆயத்தப்படுத்தும்படி, இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன். நான் உங்களிடம் வரும்போது, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதின் நிமித்தம் கொடுத்ததாக இருக்காமல், தாராள மனதுடன் கொடுக்கும் நன்கொடையாக அது இருக்கும். கொஞ்சமாய் விதைக்கிறவன், கொஞ்சமாகவே அறுவடை செய்வான். தாராளமாய் விதைக்கிறவன், தாராளமாய் அறுவடை செய்வான். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஒவ்வொருவனும், அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். கட்டாயத்தின் பேரிலோ, மனவருத்தத்துடனோ ஒருவரும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் மகிழ்ச்சியோடு கொடுக்கிறவனிலே, இறைவன் அன்பாயிருக்கிறார். எல்லா கிருபையையும் உங்களுக்கு முழுநிறைவாய்க் கொடுக்க, இறைவன் ஆற்றலுடையவராய் இருக்கிறார். இதனால் நீங்கள் எல்லாவற்றிலும், எப்பொழுதும், தேவைகளையெல்லாம் பெற்றுக்கொண்டவர்களாய், எல்லா நல்ல செயல்களிலும் பெருகுவீர்கள். இதைப்பற்றி வேதவசனத்தில், “இறைபக்தியுள்ளவன் ஏழைகளுக்குத் தனது அன்பளிப்புகளைத் தாராளமாய்க் கொடுத்தான்; அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே. இறைவனே விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுவதற்கு உணவையும் கொடுக்கிறார். அவரே உங்களுக்குத் தேவையான விதைகளையெல்லாம் கொடுத்து, அதைப் பெருகவும் செய்வார். உங்கள் நீதியின் அறுவடையையும், அவரே பெருகச்செய்வார். நீங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாராள மனதுடையவர்களாய் இருக்கும்படி, நீங்கள் எல்லா வழியிலும் செல்வந்தர்களாவீர்கள். இதனால் எங்கள் உள்ளத்தின் வழியாக, உங்கள் தாராள தன்மையின் பிரதிபலன் இறைவனுக்குச் செலுத்தும் நன்றியின் நிறைவாக அமையும்.

2 கொரிந்தியர் 9:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பரிசுத்தவான்களின் ஊழியத்திற்கு செய்யவேண்டிய உதவிகளைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. உங்களுடைய மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவில் உள்ளவர்கள் ஒருவருடமாக ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, நான் மக்கெதோனியரிடம் சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்களுடைய வாஞ்சை அநேகரை செயலில் ஈடுபடவைத்தது. அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன். மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும். ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது. பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், கொஞ்சம் விதைக்கிறவன் கொஞ்சம் அறுப்பான், அதிகமாக விதைக்கிறவன் அதிகமாக அறுப்பான். அவனவன் வருத்தத்தோடும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் மனதில் திட்டமிட்டபடியே கொடுக்கவேண்டும்; உற்சாகமாகக் கொடுக்கிறவனிடம் தேவன் பிரியமாக இருக்கிறார். மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாகவும், எல்லாவித நல்ல செயல்களிலும் பெருகுகிறவர்களாகவும் இருப்பதற்காக, தேவன் உங்களில் எல்லாவிதமான கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராக இருக்கிறார். வாரி இறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியே ஆகும். விதைக்கிறவனுக்கு விதையையும், சாப்பிடுகிறதற்கு ஆகாரத்தையும் கொடுக்கிறவர் உங்களுக்கு விதையைக் கொடுத்து, அதைப் பெருகப்பண்ணி, உங்களுடைய நீதியின் விளைச்சலைப் பெருகச்செய்வார். நீங்கள் எல்லா வகையிலும் செல்வந்தராகி தாராளகுணத்திலே சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். இதனால் தேவனுக்கு எங்கள் மூலமாக ஸ்தோத்திரமுண்டாகும்.

2 கொரிந்தியர் 9:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர். “கொஞ்சமாக விதைக்கிறவன் கொஞ்சமாகவே அறுவடை செய்வான். மிகுதியாக விதைக்கிறவனோ மிகுதியாகவே அறுவடை செய்வான்” என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொருவனும், தன் இதயத்தில் எதைக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அதைக் கொடுப்பானாக. கொடுப்பதுப்பற்றி எவருக்காவது வருத்தம் ஏற்படுமானால் அவன் கொடுக்காமலேயே இருக்கட்டும். கட்டாயத்தின் பேரில் எவரும் கொடுக்கவேண்டாம். மகிழ்ச்சியோடு கொடுப்பவனையே தேவன் அதிகமாக நேசிக்கிறார். அவர்களுக்குத் தேவைக்கு மிகுதியான ஆசீர்வாதத்தை தேவனால் கொடுக்க முடியும். பிறகு உங்களிடமும் ஏராளமான செல்வம் சேரும். ஒவ்வொரு நற்செயலுக்கும் கொடுக்கப் போதுமான செல்வம் உங்களிடம் இருக்கும். “அவன் தாராளமாக ஏழைகளுக்குக் கொடுக்கிறான். அவனுடைய கருணை என்றென்றும் தொடர்ந்து நிற்கும்.” என்று எழுதப்பட்டுள்ளது. தேவனே விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறார். உண்பதற்கு அவரே அப்பத்தையும் கொடுக்கிறார். அவர் ஆன்மாவிற்குரிய விதையைக் கொடுப்பார். அதனை வளர்க்கவும் செய்வார். உங்களது நீதியினிமித்தம் சிறந்த அறுவடையையும் பெருகச் செய்வார். தாராளமாய்க் கொடுக்கும் அளவுக்கு எல்லா வகையிலும் தேவன் உங்களைச் செல்வந்தர் ஆக்குவார். நீங்கள் எங்கள் மூலமாகக் கொடுத்தால் மக்கள் தேவனுக்கு நன்றி சொல்வர்.