2 கொரிந்தியர் 8:1-8

2 கொரிந்தியர் 8:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுதும் பிரியமானவர்களே, மக்கெதோனியாவிலிருக்கிற திருச்சபைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கிற கிருபையைக் குறித்து நீங்கள் அறியவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் தாங்கள் அனுபவித்த கடுமையான துன்பத்தின் மத்தியில், வறுமையில் வாடியிருந்தபோதும், அவர்களுடைய சந்தோஷம் பெருகி வழிந்ததினால் அவர்கள் தாராள மனதுடன் கொடுப்பவர்களானார்கள். அவர்கள் தங்களால் இயலுமான அளவு கொடுத்தார்கள். அதற்கு அதிகமாயும் கொடுத்தார்கள் என்பதைக்குறித்து நான் சாட்சி கூறுகிறேன். தங்கள் சுய விருப்பத்துடனேயே, பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யும், இந்தப் பணியில் பங்குகொள்ளும் சிலாக்கியம், தங்களுக்கும் கிடைக்கவேண்டும் என மிகவும் வருந்தி எங்களிடம் வேண்டிக்கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக, அவர்கள் தங்களை முதன்மையாக கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தார்கள். பின்பு இறைவனுடைய சித்தத்தின்படி, அவர்கள் தங்களை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்கள். எனவே உங்கள் அன்பின் செயலாகிய இந்த வேலையைத் தொடங்கிய தீத்துவை, உங்களிடம் திரும்பிவந்து அதை நிறைவேற்றும்படி, நாங்கள் அவனை ஊக்குவித்தோம். இப்பொழுதோ நீங்கள் விசுவாசத்திலும், பேசுகின்ற ஆற்றலிலும், அறிவிலும், எல்லாவற்றிலுமுள்ள ஆர்வத்திலும், எங்கள்மேல் கொண்டிருக்கிற அன்பிலும், மேம்பட்டவர்களாய் இருக்கிறீர்கள். அப்படியே, இந்த அன்பின் நன்கொடையைக் கொடுப்பதிலும் மேம்பட்டவர்களாயிருக்க பார்த்துக்கொள்ளுங்கள். நான் இதை ஒரு கட்டளையாக உங்களுக்குச் சொல்லவில்லை. உதவி செய்வதில் மற்றவர்கள் எவ்வளவு ஆவலாயிருக்கிறார்கள் என்பதை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் அன்பு எவ்வளவு உண்மையானது எனக் கண்டறியவே விரும்புகிறேன்.

2 கொரிந்தியர் 8:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்களுடைய தகுதிக்கும், தங்களுடைய தகுதிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதற்கு, நான் சாட்சியாக இருக்கிறேன். தங்களுடைய உதவிகளையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை அதிகமாக வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கொடுக்காமல், தேவனுடைய விருப்பத்தினாலே தங்களைத்தாமே, முதலில் கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். எனவே, தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடம் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டும் என்று அவனைக் கேட்டுக்கொண்டோம். அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பதிலும், அறிவிலும், எல்லாவிதமான எச்சரிக்கையிலும், எங்கள்மேல் உள்ள உங்களுடைய அன்பிலும், மற்ற எல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய வாஞ்சையைக் கொண்டு, உங்களுடைய அன்பின் உண்மையைச் சோதிப்பதற்காகவே சொல்லுகிறேன்.

2 கொரிந்தியர் 8:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அந்த விசுவாசிகள் பெருந்தொல்லைகளால் சோதிக்கப்பட்டனர். அவர்கள் மிகவும் ஏழை மக்கள். ஆனால் தமக்குண்டான மிகுந்த மகிழ்ச்சியால் அவர்கள் அதிகமாகக் கொடுத்தார்கள். தம்மால் முடிந்த அளவு அவர்கள் கொடுத்தார்கள் என்று என்னால் சொல்ல முடியும். அந்த விசுவாசிகள் தங்களால் முடிந்த அளவுக்கும் மீறி கொடுத்தார்கள். இதனை அவர்கள் சுதந்தரமாகச் செய்தனர். எவரும் அவர்களை அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. ஆனால் அவர்கள் மீண்டும், மீண்டும் எங்களைக் கேட்டார்கள். தேவனுடைய மக்களுக்கான சேவையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டுமென்று திரும்பத் திரும்ப வேண்டினர். நாம் எதிர்பார்த்திராத வகையில் அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் தம் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் கர்த்தருக்கும் எங்களுக்கும் தம்மையே கொடுத்தார்கள். இதைத்தான் தேவனும் விரும்புகிறார். எனவே தீத்து இந்த நல்ல காரியத்தைத் தொடங்கினபடியே முடிக்கவும் வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். நம்பிக்கையிலும், பேச்சிலும், அறிவிலும், உண்மை விருப்பத்தோடு உதவுவதிலும், எங்கள் மேலுள்ள அன்பிலும் நீங்கள் செல்வந்தராய் இருக்கிறீர்கள். இந்த கொடுக்கும் நற்காரியத்திலும் நீங்கள் செல்வந்தராய் இருக்க வேண்டும். கொடுக்க வேண்டுமென்று உங்களுக்குக் கட்டளையிடவில்லை, ஆனால் உங்கள் அன்பு உண்மையான அன்பென்று நாங்கள் பார்க்க விரும்புகிறோம். மற்றவர்களும் உண்மையில் உதவ விரும்புவதை உங்களுக்குக் காட்டவே இதைச் செய்கிறோம்.

2 கொரிந்தியர் 8:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின்பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம். அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன்.