2 கொரிந்தியர் 5:1-9

2 கொரிந்தியர் 5:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுது எங்கள் கண்களுக்குத் தெரிகின்றபடி, நாம் வாழும் பூமிக்குரிய கூடாரமாகிய நமது உடல் அழிந்துபோனாலும், நமக்கு இறைவனிடமிருந்து கிடைக்கும் ஒரு கட்டடம் உண்டு. அது மனித கைகளினால் கட்டப்படாத, பரலோகத்தில் உள்ள ஒரு நித்திய வீடு. அதுவரைக்கும் நாங்கள் எங்கள் பரலோகக் குடியிருப்பை, தவிப்புடன் உடையைப்போல் அணிந்துகொள்ள வாஞ்சையாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அவ்விதம் உடுத்தியிருக்கும்போது, நாங்கள் நிர்வாணிகளாய் காணப்படமாட்டோம். இந்த உடலாகிய கூடாரத்தில் இருக்கும்வரையில் நாங்கள் அவதியுற்றுத் தவிக்கிறோம். நாங்கள் செத்து உடையற்றவர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. நாங்கள் பரலோகக் குடியிருப்பை உடையைப்போல் அணிந்துகொள்ள வேண்டுமென்றே விரும்புகிறோம். அப்பொழுது சாகும் தன்மையுள்ள இந்த உடல் வாழ்வினால் ஆட்கொள்ளப்படும். இந்த முக்கிய நோக்கத்திற்காகவே, இறைவன் எங்களை உண்டாக்கியிருக்கிறார். அவரே வரவேண்டியவற்றிற்கு உத்தரவாதமாக, தனது ஆவியானவரை நிலையான வைப்பாக எங்களுக்குத் தந்திருக்கிறார். ஆகையால் நாங்கள் எப்பொழுதும் மனத்தைரியத்தோடு இருக்கிறோம். எங்கள் உடலாகிய வீட்டில் குடியிருக்கும் காலம்வரை, கர்த்தரிடமிருந்து புறம்பாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் நாம் காண்பதினால் அல்ல, விசுவாசிப்பதினாலேயே வாழ்கிறோம். நாங்கள் மனத்தைரியத்துடனே இருக்கிறோம். ஆனால் இந்த உடலைவிட்டு வெளியேறி, கர்த்தரோடு குடியிருக்கவே அதிகமாய் விரும்புகிறோம். எனவே நாங்கள் உடலில் குடியிருந்தாலும், அல்லது உடலைவிட்டு வெளியே போனாலும், அவருக்கு பிரியமாய் வாழ்வதையே எங்கள் குறிக்கோளாகும்.

2 கொரிந்தியர் 5:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே. நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம். இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம். நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம். அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.

2 கொரிந்தியர் 5:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பூமியில் வாழ்வதற்குக் கிடைத்த கூடாரம் போன்ற நம் சரீரம் அழியக் கூடியது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது நிகழும்போது தேவன் நாம் வாழ்வதற்கென்று ஓர் இடம் வைத்துள்ளார். அது மனிதர்களால் அமைக்கப்பட்ட இடமல்ல. அது பரலோகத்தில் உள்ள வீடு. அது என்றென்றும் நிலைத்திருப்பது. ஆனால் நாம் இப்பொழுது இந்த சரீரத்தால் சோர்வுற்றிருக்கிறோம். பரலோக வீட்டை தேவன் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அது நம்மை ஆடையுள்ளவர்களைப் போலாக்கும். நாம் நிர்வாணமானவர்களைப்போல இருக்கமாட்டோம். நம் கூடாரம் போன்ற இந்த சரீரத்தில் வாழும்வரை பாரமுள்ளவர்களாய்த் துன்பப்படுகிறோம். இந்த சரீரத்தை விட்டுவிட வேண்டுமென்று நான் கூறவில்லை. ஆனால் நாம் பரலோக வீட்டால் போர்த்தப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். பிறகு அழிவடையும் இந்த சரீரம் உயிருடன் நிறைந்திருக்கும். இதற்காகத்தான் தேவன் நம்மை ஆயத்தம் செய்திருக்கிறார். ஆவி என்னும் அச்சாரத்தைத் தந்து நமக்கு புதிய வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறார். எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதை நம்புகிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் எதைப் பார்க்கிறோமோ அதன்படி வாழவில்லை. எனவேதான் நமக்குத் தன்னம்பிக்கை வேண்டும் என்கிறேன். நாம் உண்மையாகவே இந்த சரீரத்தைவிட்டு விலகி பரலோகத்தில் கர்த்தரோடு இருக்கவே விரும்புகிறோம். தேவனைத் திருப்திப்படுத்துவதே வாழ்க்கையில் நமது ஒரே குறிக்கோள். இங்கே இந்த சரீரத்தில் வாழ்ந்தாலும் அங்கே கர்த்தரோடு இருந்தாலும் தேவனைத் திருப்திப்படுத்தவே விரும்புகிறோம்.

2 கொரிந்தியர் 5:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.