2 கொரிந்தியர் 4:4-6

2 கொரிந்தியர் 4:4-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார்.

2 கொரிந்தியர் 4:4-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.

2 கொரிந்தியர் 4:4-6 பரிசுத்த பைபிள் (TAERV)

இந்த உலகத்தை ஆள்பவனாகிய சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார்.

2 கொரிந்தியர் 4:4-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.