2 கொரிந்தியர் 3:3-18
2 கொரிந்தியர் 3:3-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 3:3-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு. நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது. அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார். கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது. அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்? மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்? முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது. அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது? ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான். ஆனால், அவர்களின் மனது மழுங்கிப் போயிற்று. ஏனெனில், இந்நாள்வரை அவர்கள் பழைய உடன்படிக்கையை வாசிக்கும்போது, அந்த முக்காடு நீக்கப்படாமலேயே இருக்கிறது. ஏனெனில் அது கிறிஸ்துவில் மட்டுமே நீக்கப்படுகிறது. இன்றுவரை மோசேயின் சட்டங்கள் வாசிக்கப்படும்போது, அவர்களுடைய இருதயங்களை ஒரு முக்காடு மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால், யாராவது கர்த்தரிடத்தில் திரும்பும்போது, அந்த முக்காடு நீக்கப்படுகிறது. இப்பொழுதும், ஆவியானவரே கர்த்தர். கர்த்தருடைய ஆவியானவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே அவர் விடுதலை கொடுக்கிறார். நாம் எல்லோரும் முக்காடு இடப்படாத முகங்களுடன், கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்விதமாக மகிமையான நிலையிலிருந்து, மகிமையின்மேல் மகிமையை அடைந்து, அவருடைய சாயலாக மாற்றமடைகிறோம். இது கர்த்தரிடமிருந்தே வருகிறது. அவரே ஆவியானவர்.
2 கொரிந்தியர் 3:3-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம். எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்? அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல. அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம். மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்தநாள் வரைக்கும் பழைய ஏற்பாடு படிக்கும்போது, அந்த முக்காடு நீங்காமல் இருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் படிக்கப்படும்போது, இந்தநாள் வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனம்திரும்பும்போது, அந்த முக்காடு எடுக்கப்படும். கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு. நாமெல்லோரும் திறந்த முகமாகக் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே பார்க்கிறதுபோலப் பார்த்து, ஆவியாக இருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகவே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமடைகிறோம்.
2 கொரிந்தியர் 3:3-18 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின் மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது. மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே. எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது. ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது. ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது. கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு. நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும், மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.