2 கொரிந்தியர் 12:2-10

2 கொரிந்தியர் 12:2-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்ட மாட்டேன். சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன். அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12:2-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

கிறிஸ்துவில் இருந்த ஒரு மனிதனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு வருடங்களுக்கு முன்பதாக மூன்றாம் பரலோகம் வரைக்கும், அதாவது பரலோகத்தின் உயர்ந்த இடங்கள்வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டான். அப்படி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவன் தன் உடலின்றி சென்றானோ, அல்லது உடலைவிட்டுச் சென்றானோ நான் அறியேன். இறைவனே அதை அறிவார். நான் மீண்டும் சொல்கிறேன், இந்த மனிதனை எனக்குத் தெரியும். ஆனால் அவன் தனது உடலின்றி போனானோ, உடலைவிட்டுப் போனானோ, நான் அறியேன். இறைவனே அதை அறிவார். இந்த மனிதன் சொர்க்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். அங்கே அவன் வார்த்தைகளால் விவரிக்க முடியாத காரியங்களைத் தன் காதுகளால் கேட்டான். அவை மனிதரால் சொல்லவும் உச்சரிக்கவும் அனுமதிக்கப்படாதவை. இப்படிப்பட்ட மனிதனைக் குறித்தே நான் பெருமை பேசுவேன். ஆனால் என்னைக்குறித்தோ, என் பெலவீனங்களைத்தவிர வேறு எதிலும் பெருமை பேசமாட்டேன். அப்படி நான் பெருமை பேச விரும்பினாலும், அது முட்டாள்தனமாய் இராது. ஏனெனில் நான் உண்மையையே பேசுவேன். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஏனெனில் ஒருவனும், நான் என் வாழ்வில் உண்மையாய் செய்தவற்றையும், சொல்லிப் போதித்தவற்றையும்விட மேலாக என்னைக்குறித்து எண்ணக்கூடாது. ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற மேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, பெருமைகொள்ளாதபடி எனது உடலில் ஒருமுள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைத் துன்புறுத்தும்படி சாத்தானால் அனுப்பப்பட்ட தூதுவனாயிருக்கிறது. அதை என்னைவிட்டு நீக்கும்படி மூன்றுமுறை நான் கர்த்தரிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். ஏனெனில் உன் பெலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே நான் எனது பெலவீனங்களைக் குறித்து இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் பெருமையாய்ப் பேசுவேன். இவ்விதமாக கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கட்டும். அந்தப்படியே கிறிஸ்துவின் நிமித்தம் நான் அனுபவித்த பெலவீனங்களைக் குறித்தும், அவமானங்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், துன்புறுத்தல்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பெலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பெலமுள்ளவனாய் இருக்கிறேன்.

2 கொரிந்தியர் 12:2-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன். அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார். இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன். சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன். அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 12:2-10 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவுக்கு உள்ளான ஒரு மனிதனை நான் அறிவேன். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னரே மூன்றாவது வானம் வரை தூக்கி எடுத்துச் செல்லப்பட்டான். அவன் சரீரத்தில் இருந்தானா, சரீரத்திற்கு வெளியே இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தேவனுக்குத் தெரியும். அவன் பரலோகத்துக்குத் தூக்கி எடுத்துச் செல்லப்பட்டதை நான் அறிவேன். அப்போது அவன் சரீரத்தோடு இருந்தானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விளக்க இயலாத சிலவற்றை அவன் கேட்டிருக்கிறான். மனிதனால் சொல்ல அனுமதிக்கப்படாதவற்றை கேட்டிருக்கிறான். நான் இவனைப் பாராட்டிப் பேசுவேன். ஆனால் என்னைப்பற்றிப் பாராட்டிப் பேசமாட்டேன். நான் எனது பலவீனத்தைப் பற்றி மட்டுமே பாராட்டிக்கொள்வேன். நான் என்னையே பாராட்டிப் பேசிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் நான் முட்டாளாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் உண்மையைச் சொல்லிவிடுவேன். அதோடு நான் சொல்வதையும் செய்வதையும் காணும் மக்கள் என்னைப் பற்றி மிகுதியாக நினைத்துக்கொள்வார்கள். அதனால் என்னைப் பற்றி நானே பெருமை பேசிக்கொள்ளமாட்டேன். எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.