2 கொரிந்தியர் 11:23-28

2 கொரிந்தியர் 11:23-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் ஒரு பைத்தியக்காரனைப்போல, பேசுகிறேன். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியரா? அப்படியானால், நான் அவர்களைவிட மிகச்சிறந்த ஊழியன். நான் இந்த ஊழியத்தில் கடுமையாக உழைத்தேன். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டேன். அதிகமாக அடிக்கப்பட்டேன். அநேகந்தரம் மரணத் தருவாயில் இருந்தேன். நாற்பது அடிகளுக்கு ஒன்று குறைவாக யூதரினால் ஐந்துமுறை சவுக்கால் அடிக்கப்பட்டேன். மூன்றுதரம் தடியால் அடிக்கப்பட்டேன். ஒருதரம் என்மேல் கல்லெறிந்தார்கள். மூன்றுமுறை நான் பயணம் செய்த கப்பல்கள் உடைந்து சிதைந்தன. ஒருமுறை இரவும் பகலுமாக நடுக்கடலில் கிடந்தேன். ஓயாது பிரயாணம் செய்தேன். அப்பொழுது ஆறுகளில் ஆபத்துக்குள்ளானேன். கொள்ளைக்காரராலும் ஆபத்து ஏற்பட்டது. எனது சொந்த நாட்டு மக்களாலும் ஆபத்து வந்தது; அந்நியராலும் ஆபத்து வந்தது. பட்டணத்திலும் ஆபத்து வந்தது; நாட்டுப்புறத்திலும் ஆபத்து வந்தது; கடலிலும் ஆபத்து வந்தது. கள்ளச் சகோதரராலும் எனக்கு ஆபத்து வந்தது. கடின உழைப்புக்கும், கஷ்டத்திற்கும் உள்ளானேன். பல இரவுகள் நித்திரையின்றியும் இருந்தேன். பசியும், தாகமும் உடையவனாக இருந்தேன். பலமுறை உணவு இல்லாமலும் இருந்தேன். குளிருக்குள் அகப்பட்டும், உடை இல்லாதவனாகவும் இருந்தேன். இவை எல்லாவற்றையும்விட, எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கிற அக்கறையினால் வரும் கவலை நாள்தோறும் என்னை நெருக்கியது.

2 கொரிந்தியர் 11:23-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது.

2 கொரிந்தியர் 11:23-28 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன். நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன். நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

2 கொரிந்தியர் 11:23-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.