2 கொரிந்தியர் 11:1-15

2 கொரிந்தியர் 11:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

என் மதியீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஆம்; நீங்கள் ஏற்கெனவே சகித்தும் இருக்கிறீர்கள். நான் உங்களைக் கிறிஸ்து என்ற ஒரே கணவருக்கே திருமணம் செய்து கொடுக்கவே வாக்குப்பண்ணியிருக்கிறேன். இப்படி உங்களை ஒரு தூய்மையான கன்னிகையாகக் கொடுக்கவே விரும்புகிறேன். இதனாலேயே இறைவனுக்குத் தன் மக்கள்மேல் இருக்கிற வைராக்கியம், எனக்கும் உங்கள்மேல் இருக்கிறது. பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன். ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத ஒரு வித்தியாசமான இயேசுவைப் பிரசங்கிக்கும் போதும், நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் தவிர, வேறொரு ஆவியை அறிமுகப்படுத்தும் போதும், நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியைக் கொண்டுவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன். நான் ஒரு பயிற்சி பெற்ற பேச்சாளனாய் இல்லாதிருந்தாலும், எனக்கு அறிவு உண்டு என்பதை எல்லாவிதத்திலும் உங்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தியே இருக்கிறோம். நான் இறைவனுடைய நற்செய்தியை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தபோது, நீங்கள் உயர்வடையும்படி நான் என்னைத் தாழ்த்தினேன். இப்படிச் செய்தது பாவமா? நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களுடன் இருக்கையில், எனக்குத் தேவையேற்பட்டபோது, அதற்காக நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றையெல்லாம், மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்களே கொடுத்து உதவினார்கள். நான் முன்பு செய்ததுபோலவே இனிமேலும், என்னுடைய தேவைகளுக்காக எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பது நிச்சயம்போலவே, அகாயா பகுதியிலுள்ள யாரும் என்னுடைய இந்தப் பெருமைபாராட்டுதலை நிறுத்தமுடியாது என்பதும் நிச்சயம். ஏன் இதை இப்படிச் சொல்கிறேன்? நான் உங்களில் அன்பாயிராததினாலா? நான் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்பதை இறைவன் அறிவார். நாங்கள் ஊழியம் செய்கிறதுபோலவே, தாங்களும் ஊழியம் செய்வதாக பெருமை பேசிக்கொள்கிறவர்கள், அப்படிச் சொல்ல இயலாதபடி நான் இவ்விதமே தொடர்ந்து செய்வேன். ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர் பொய்யான அப்போஸ்தலர்கள். கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரைப்போல் வேஷம் தரித்து, ஏமாற்றுகிற வேலைக்காரர்கள். அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும்.

2 கொரிந்தியர் 11:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே. மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன். நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ? உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன். அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார். மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும்.

2 கொரிந்தியர் 11:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள். மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார். நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக மாறுவேடம் அணிந்திருக்கிறான். எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.

2 கொரிந்தியர் 11:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன், நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ? உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்ற சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன். அகாயா நாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார். மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.