2 கொரிந்தியர் 1:8-11

2 கொரிந்தியர் 1:8-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம். உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

2 கொரிந்தியர் 1:8-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

2 கொரிந்தியர் 1:8-11 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.

2 கொரிந்தியர் 1:8-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.