2 கொரிந்தியர் 1:5-24

2 கொரிந்தியர் 1:5-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் வேதனைகள் பெருகிவருகிறதுபோல, கிறிஸ்துவின்மூலம் நமக்கு அனுதினம் ஆறுதலும் பெருகுகிறது. நாங்கள் துன்பப்படுத்தப்பட்டால், அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்குமே; நாங்கள் ஆறுதலடைந்தால், அதுவும் உங்கள் ஆறுதலுக்காகவே. அந்த ஆறுதல், நீங்களும் எங்களைப் போலத் துன்பங்களை அனுபவிக்கும்போது, அது உங்களிலும் பொறுமையான சகிப்புத் தன்மையை வளர்க்கிறது. மேலும் உங்களைப்பற்றிய எங்கள் எதிர்பார்ப்பு உறுதியாய் இருக்கிறது. ஏனெனில், எங்களுடைய துன்பங்களில் நீங்கள் பங்கெடுப்பதுபோலவே, எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிரியமானவர்களே, ஆசியாவில் நாங்கள் அனுபவித்த பாடுகளைப்பற்றி நீங்கள் அறியாதிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. எங்களால் தாங்கமுடியாத அளவுக்கு, அதிகமான சுமைகளால் நெருக்குண்டோம். இதனால் நாங்கள் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையையும் இழந்தோம். உண்மையிலேயே எங்களுக்கு மரணத்தின் தீர்ப்பு வந்துவிட்டது போன்று எங்கள் இருதயங்களில் உணர்ந்தோம். ஆனாலும் நாங்கள் எங்களிலே அல்ல, இறந்தோரை எழுப்புகிற இறைவனில் நம்பிக்கை கொள்ளும்படியே இது நிகழ்ந்தது. அத்தகைய மரண ஆபத்திலிருந்து அவர் எங்களை விடுவித்தார். அவரே இன்னும் எங்களை விடுவிப்பார். அப்படியே அவர் எங்களைத் தொடர்ந்தும் விடுவிப்பார் என்று, அவரிலேயே எங்கள் எதிர்பார்ப்பை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள். இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம். எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள். நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன். இப்படி நான் திட்டமிட்டபோது, ஒரு பொறுப்பற்ற முறையில் செய்தேனா? அல்லது, ஒரே மூச்சில் “ஆம்” என்றும், “இல்லை” என்றும் சொல்லும் விதத்தில், நான் உலகரீதியாக என் திட்டங்களை வகுக்கிறேனா? ஆனால் இறைவன் வாக்குமாறாதவராய் இருப்பது நிச்சயம்போலவே, உங்களுக்கு என் செய்தியும் “ஆம்” என்று சொல்லி, பின் “இல்லை” என்று சொல்கிற பேச்சு அல்ல என்பதும் நிச்சயம். நானும், சில்வானும், தீமோத்தேயுவும் உங்கள் மத்தியில் பிரசங்கித்த, இறைவனின் மகனான இயேசுகிறிஸ்து, “ஆம்” அப்படித்தான் என்று சொல்லி, பின் “இல்லை” அது அப்படியல்ல என்று சொல்லுகிறவர் அல்ல. மாறாக, “ஆம்” என்று அவர் சொன்னது, எப்பொழுதும் அவரில் “ஆம்” என்றே இருக்கிறது. இறைவன் எத்தனை வாக்குத்தத்தங்களைக் கொடுத்தாலும், அவை எல்லாம் கிறிஸ்துவில் “ஆம்” என்றே இருக்கின்றன. இதனாலேயே இறைவனுக்கு மகிமையுண்டாக, அவர்மூலம் நாங்கள் “ஆமென்” என்று சொல்கிறோம். இப்பொழுதும் எங்களையும், உங்களையும் இறைவனே கிறிஸ்துவில் உறுதியாய் நிற்கச்செய்கிறார். அவர் நம்மை அபிஷேகம் பண்ணியிருக்கிறார். அவர் தமது உரிமையின் அடையாளமான முத்திரையை நம்மீது பதித்திருக்கிறார். வரப்போகிறவற்றிற்கு உத்தரவாதமாக, அவர் தமது ஆவியானவரை நமது இருதயங்களில் ஒரு நிலையான வைப்பாக வைத்திருக்கிறார். நான் உங்களைக் கண்டித்து துன்பம் கொடுக்காமல் இருப்பதற்காகவே, கொரிந்துவுக்குத் திரும்பிவராமல் இருந்தேன் என்பதற்கு, இறைவனே எனக்குச் சாட்சி. நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.

2 கொரிந்தியர் 1:5-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எப்படியென்றால், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடம் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. எனவே, நாங்கள் உபத்திரவப்பட்டாலும், அது உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் ஆறுதல் அடைந்தாலும், அதுவும் உங்களுடைய ஆறுதலுக்கும் இரட்சிப்பிற்கும் ஏற்றதாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகித்துக்கொள்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன் தருகிறது. நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம். எனவே, சகோதரர்களே, ஆசியாவில் எங்களுக்கு ஏற்பட்ட உபத்திரவத்தை நீங்கள் தெரிந்துகொள்ளாமலிருக்க எங்களுக்கு மனமில்லை. என்னவென்றால், நாங்கள் பிழைப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல்போகும் அளவிற்கு, எங்களுடைய பலத்திற்கும் மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டானது. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம். அப்படிப்பட்ட மரணத்திலிருந்தும் அவர் எங்களைக் காப்பாற்றினார், இப்பொழுதும் காப்பாற்றுகிறார், இனிமேலும் காப்பாற்றுவார் என்று அவரையே நம்பியிருக்கிறோம். அநேகர் மூலமாக எங்களுக்கு உண்டான இரக்கத்திற்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படுவதற்கு, நீங்களும் ஜெபத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும், பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன். இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், இல்லை இல்லை என்கிறதும், என்னிடத்திலே இருப்பதற்காக, நான் யோசிக்கிறவைகளை சரீரத்தின்படி யோசிக்கிறேனோ? நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் என்றும் இல்லை என்றும் இல்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும், இல்லை என்றும் இல்லாமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமை உண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிற்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. உங்களோடு எங்களையும் கிறிஸ்துவிற்குள் உறுதிப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரை செய்து, நம்முடைய இருதயங்களில் ஆவியானவரை உத்திரவாதமாகக் கொடுத்திருக்கிறார். மேலும் நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் இதுவரைக்கும் கொரிந்து பட்டணத்திற்கு வராமல் இருக்கிறேன் என்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாக வைக்கிறேன். உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 1:5-24 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும். நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும். உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம். சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம். உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர். இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார். இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை. உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம். எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும். நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள். மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன். நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் “ஆமாம், ஆமாம்” என்றும் அதே நேரத்தில் “இல்லை, இல்லை” என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும். என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான். தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்” என்கிறோம். நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே. நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று. நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான். நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.

2 கொரிந்தியர் 1:5-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும், பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன். இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ? நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன். உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்