2 கொரிந்தியர் 1:12-16
2 கொரிந்தியர் 1:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்பொழுது, நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களுடனான உறவிலும், இறைவன் கொடுத்த பரிசுத்தத்துடனும், உண்மையுடனும் நடந்தோம் என்பதே எங்கள் பெருமை. இதற்கு எங்கள் மனசாட்சியும் சான்று கொடுக்கின்றது. நாங்கள் உலக ஞானத்தோடு அதைச் செய்யவில்லை. இறைவனுடைய கிருபையினாலேயே செய்தோம். எங்கள் கடிதங்களில், உங்களால் வாசிக்கவோ விளங்கிக்கொள்ளவோ முடியாத எதையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை என்று நம்புகிறேன். நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள். நான் இதைக்குறித்து உறுதியுடையவனாய் இருந்தபடியால், நீங்கள் இரண்டு மடங்கு நன்மை பெறும்படி, முதலாவது உங்களிடம் வரவும் திட்டமிட்டேன். நான் மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில் உங்களைச் சந்திக்கவும், பின்பு மக்கெதோனியாவிலிருந்து திரும்பி வரும்போதும் உங்களிடம் வரவும் பின்பு, உங்களால் யூதேயாவுக்கு வழியனுப்பி வைக்கப்படவும் விரும்பினேன்.
2 கொரிந்தியர் 1:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உலகத்திற்குரிய ஞானத்தோடு நடக்காமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலும், விசேஷமாக உங்களிடமும், கபடம் இல்லாமல் உண்மையோடு நடந்தோம் என்று, எங்களுடைய மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்களுடைய புகழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் படித்தும் புரிந்தும் இருக்கிற விஷயங்களைத்தவிர, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுவரைக்கும் அப்படியே புரிந்துகொள்வீர்கள் என்று நம்பியிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவனாக இருக்கிறதினால், உங்களுக்கு இரண்டாவதுமுறையும் பிரயோஜனம் உண்டாவதற்காக, முதலாவது உங்களிடம் வரவும், பின்பு உங்களுடைய ஊர்வழியாக மக்கெதோனியா நாட்டிற்குப் போகவும், மக்கெதோனியாவைவிட்டு மீண்டும் உங்களிடம் வரவும், உங்களால் யூதேயா நாட்டிற்கு நான் வழியனுப்பப்படவேண்டும் என்றும் யோசனையாக இருந்தேன்.
2 கொரிந்தியர் 1:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)
இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை. உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம். எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும். நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள். மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன்.
2 கொரிந்தியர் 1:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன். கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும், பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயா தேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன்.