2 நாளாகமம் 20:5-12

2 நாளாகமம் 20:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது யோசபாத் யெகோவாவின் ஆலயத்தில் புதிய முற்றத்திற்கு முன்னால் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்த மக்கள் சபையின் நடுவில் எழுந்து நின்றுகொண்டு அவன், “எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவே, பரலோகத்தில் இருக்கும் இறைவன் நீரல்லவோ? நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர். அதிகாரமும் வல்லமையும் உமது கரங்களிலேயே இருக்கின்றன. உம்மை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது. எங்கள் இறைவனே, உமது மக்களான இஸ்ரயேலுக்கு முன்பாக இந்த நாட்டின் மக்களைத் துரத்தி, உமது சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததிகளுக்கு அதை என்றென்றைக்குமாகக் கொடுத்தீரல்லவா? அவர்கள் இங்கேயே குடியிருந்து, உமது பெயருக்கென ஒரு பரிசுத்த இடத்தையும் கட்டினார்களே. ‘நியாயத்தீர்ப்பின் வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய பேராபத்துக்கள் எங்கள்மேல் வந்தால், நாங்கள் உமது பெயர் விளங்கும் இந்த ஆலயத்தின் முன்பாக உமது முன்னிலையில் நின்று, எங்கள் துன்பத்தின் நிமித்தம் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, எங்கள் சத்தத்தை நீர் கேட்டு எங்களை விடுவிப்பீர்’ என்று சொன்னீரே. “ஆனால் இப்பொழுது அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள். இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களுடைய பிரதேசத்தின் வழியாக படையெடுக்க நீர் இஸ்ரயேலரை அனுமதிக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் அவர்களைவிட்டுத் திரும்பிப் போனார்கள்; அவர்களை அழிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எப்படிப் பதில் செய்கிறார்கள் என்று பாரும், இப்பொழுது நீர் எங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த எங்கள் நாட்டிலிருந்து எங்களைத் துரத்தி விடுவதற்காக வந்திருக்கிறார்கள். எங்கள் இறைவனே, நீர் அவர்களை நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களைத் தாக்க வந்திருக்கும் இந்த மிகப்பெரிய இராணுவத்தை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை. என்ன செய்வதென்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கின்றன” என்று மன்றாடினான்.

2 நாளாகமம் 20:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது யோசபாத் யெகோவாவுடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா மற்றும் எருசலேம் மக்களும் கூடின சபையிலே நின்று: எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது. எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிமக்களைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு நிலையாக இருக்கக் கொடுக்கவில்லையா? ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள். எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் துன்பத்தில் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போதும், இதோ, இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோனியர்கள், மோவாபியர்கள், சேயீர் மலைத்தேசத்தாருடைய எல்லைகள் வழியாகப் போக நீர் உத்திரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களைவிட்டு விலகி, அவர்களை அழிக்காமல் இருந்தார்கள். இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் நீர் எங்களுக்குக் கொடுத்த உம்முடைய தேசத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்கு பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.

2 நாளாகமம் 20:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான். அவன் சொன்னதாவது: “எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது. நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர். ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’ “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள். ஆனால் பாரும், நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர். எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.

2 நாளாகமம் 20:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று: எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது. எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்த தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா? ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள். எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைதேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள். இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.