2 நாளாகமம் 20:15-22

2 நாளாகமம் 20:15-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான். அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைதேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 நாளாகமம் 20:15-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யகாசியேல் சொன்னதாவது: “அரசன் யோசபாத்தே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருப்பவர்களே, எல்லோரும் கேளுங்கள்; உங்களுக்கு யெகோவா சொல்வது இதுவே: இந்த மிகப்பெரிய படையின் நிமித்தம் நீங்கள் பயப்படவோ, அதைரியப்படவோ வேண்டாம். ஏனெனில் இந்த யுத்தம் உங்களுடையது அல்ல, இறைவனுடையது. நாளை அவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அணிவகுத்துச் செல்லுங்கள். அவர்கள் சீஸ் என்னும் மேட்டுவழியாக ஏறி வருகிறார்கள். நீங்கள் அவர்களை யெருயேல் பாலைவனத்திலுள்ள பள்ளத்தாக்கின் கடைசியில் காண்பீர்கள். இந்த யுத்தத்தில் நீங்கள் செய்ய வேண்டியிராது. யூதாவே, எருசலேமே, நீங்கள் உங்களுக்குரிய யுத்த நிலையில் உறுதியாய் நின்று யெகோவா உங்களுக்குத் தரப்போகிற விடுதலையைப் பாருங்கள். நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அதைரியப்படவும் வேண்டாம். நாளை அவர்களைச் சந்திக்க வெளியே போங்கள். யெகோவா உங்களோடுகூட இருப்பார்” என்றான். யோசபாத் முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினான். எருசலேம், யூதா மக்கள் எல்லோரும்கூட யெகோவாவுக்கு முன்பாக கீழே விழுந்து அவரை வழிபட்டார்கள். அப்பொழுது கோகாத்தியர்களையும், கோராகியர்களையும் சேர்ந்த சில லேவியர்கள் எழுந்து நின்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிக உரத்த சத்தத்துடன் துதித்தார்கள். அதிகாலையில் அவர்கள் தெக்கோவா பாலைவனத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அவர்கள் புறப்பட்டுப் போனபோது, யோசபாத் எழுந்து நின்று, “யூதா, எருசலேம் மக்களே! எனக்கு செவிகொடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வையுங்கள், நீங்கள் ஆதரிக்கப்படுவீர்கள்; அவரது இறைவாக்கினர்களை நம்புங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” என்று சொன்னான். மக்களுடன் ஆலோசனை பண்ணிய பின்பு யோசாபாத் யெகோவாவுக்கு பாடல்களைப் பாடவும், அவரது பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் பாடகரை நியமித்தான். படைக்கு முன்னால் சென்று: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பாடும்படி நியமித்தான். அவர்கள் பாடவும், துதிக்கவும் தொடங்கிய உடனே யூதாவுக்கு எதிராய் வந்திருந்த அம்மோன், மோவாப், சேயீர் மலைநாடு ஆகியவற்றைச் சேர்ந்த மனிதருக்கெதிராக யெகோவா தீடீர்த் தாக்குதல்களை ஏற்படுத்தினார். அவர்கள் முறியடிக்கப்பட்டார்கள்.

2 நாளாகமம் 20:15-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகல யூதா மக்களே, எருசலேமின் குடிமக்களே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்கு பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று யெகோவா உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்தப் போர் உங்களுடையதல்ல, தேவனுடையது. நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாகப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாக வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்திரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடைசியிலே கண்டு சந்திப்பீர்கள். இந்தப் போர் செய்கிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனிதர்களே, எருசலேம் மக்களே, நீங்கள் பொறுத்து நின்று யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள; யெகோவா உங்களோடு இருக்கிறார் என்றான். அப்பொழுது யோசபாத் தரைவரை முகங்குனிந்தான்; சகல யூதா மக்களும், எருசலேமின் குடிமக்களும் யெகோவாவைப் பணிந்துகொள்ளக் யெகோவாவுக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். கோகாத்தியர்கள் மற்றும் கோராகியரின் சந்ததியிலும் இருந்த லேவியர்கள் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை மகா சத்தத்தோடு கெம்பீரமாகத் துதித்தார்கள். அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கோவாவின் வனாந்திரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படும்போது யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய யெகோவாவை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது வெற்றிபெறுவீர்கள் என்றான். பின்பு அவன் மக்களோடு ஆலோசனைசெய்து, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்பாக நடந்துபோய், யெகோவாவை துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று யெகோவாவைப் பாடவும், பாடகர்களை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாக வந்து மறைந்திருந்த அம்மோனியர்களையும், மோவாபியர்களையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாக ஒருவரைக் யெகோவா எழும்பச்செய்ததால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

2 நாளாகமம் 20:15-22 பரிசுத்த பைபிள் (TAERV)

யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் ராஜாவே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர். நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள். இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான். யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றும் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர். அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான். பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள், “கர்த்தரைத் துதியுங்கள், ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள். தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள்.