2 நாளாகமம் 15:1-7

2 நாளாகமம் 15:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால், அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து, ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார். நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான்.

2 நாளாகமம் 15:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இப்பொழுது இறைவனின் ஆவியானவர் ஓதேதின் மகன் அசரியாவின்மேல் வந்தார். அவன் ஆசாவைச் சந்திக்க வெளியே போய் அவனிடம் சொன்னதாவது: “ஆசாவே, யூதா, பென்யமீன் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் யெகோவாவோடு இருக்கும்போது அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அவரை விட்டுவிடுவீர்களானால், அவரும் உங்களைக் விட்டுவிடுவார். இஸ்ரயேல் நீண்டகாலமாக உண்மையான இறைவன் இல்லாமலும், கற்பிப்பதற்கு ஆசாரியன் இல்லாமலும், சட்டம் இல்லாமலும் இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் துன்பத்தில் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, அவரைத் தேடினார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டுகொண்டார்கள். அந்நாட்களில் பிரயாணம் செய்வது பாதுகாப்பற்றதாயிருந்தது. ஏனெனில் நாட்டில் வசிப்பவர்கள் எல்லோரும் பெருங்கலக்கமடைந்திருந்தனர். நாடு நாட்டையும், பட்டணம் பட்டணத்தையும் ஒன்றையொன்று எதிர்த்து நசுக்கியது. ஏனெனில் இறைவன் அவர்களை எல்லா விதமான துன்பங்களினாலும் கஷ்டப்படுத்தினார். ஆனால் நீங்களோ தைரியமாயிருங்கள், தளர்ந்துபோகாதேயுங்கள். ஏனெனில் உங்கள் வேலைக்குரிய வெகுமதி உங்களுக்குக் கொடுக்கப்படும்.”

2 நாளாகமம் 15:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால், அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார். இஸ்ரவேலிலே அநேக நாட்களாக உண்மையான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிமக்கள் எல்லோருக்குள்ளும் பெரும் குழப்பம் உண்டாயிருந்து, தேசம் தேசத்தையும், பட்டணம் பட்டணத்தையும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித துன்பத்தினாலும் கலங்கச்செய்தார். நீங்களோ உங்கள் கைகளைத் தளரவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் செயல்களுக்குப் பலன் உண்டு என்றான்.

2 நாளாகமம் 15:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் குமாரன். அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார். நீண்ட காலத்திற்கு இஸ்ரவேலர்கள் உண்மையான தேவன் இல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் போதிக்கும் ஆசாரியர் இல்லாமலும், சட்டங்கள் இல்லாமலும் இருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் துன்பம் வந்தபோது அவர்கள் மீண்டும் கர்த்தருடைய பக்கம் திரும்பினார்கள். அவரே இஸ்ரவேலின் தேவன். அவர்கள் கர்த்தரைத் தேடினார்கள்; கண்டுகொண்டனர். அந்தக் கஷ்டகாலங்களில் எவராலும் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. எல்லா நாடுகளிலும் துன்பங்கள் ஏற்பட்டன. ஒரு நாடு இன்னொரு நாட்டை அழித்தது. ஒரு நகரம் இன்னொரு நகரத்தை அழித்தது. தேவன் அவர்களுக்கு எல்லாவிதமான துன்பங்களையும் கொடுக்கவேண்டும் என்று எண்ணியதால் இவ்வாறு நிகழ்ந்தது. ஆனால் ஆசா, நீயும் யூதா மற்றும் பென்யமீனின் ஜனங்களும் பலமுடையவர்களாக இருங்கள். பலவீனமாய் இருக்காதீர்கள். எதையும் கைவிட்டுவிடாதீர்கள். ஏனென்றால் உங்கள் பணிகளுக்குத்தக்க வெகுமதி கிடைக்கும்!” என்றான்.