2 நாளாகமம் 13:10-18

2 நாளாகமம் 13:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“எங்களுக்கோவெனில் யெகோவாவே எங்கள் இறைவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை. யெகோவாவுக்குப் பணிசெய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களாயிருக்கிறார்கள்; லேவியர்கள் அவர்களுக்கு உதவிசெய்கிறார்கள். ஒவ்வொரு காலையும் மாலையும் அவர்கள் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளையும், நறுமணத் தூபங்களையும் செலுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு மாலை வேளையிலும் தூய்மையான மேஜையில் அப்பங்களை அடுக்கிவைத்து, தங்கக் குத்துவிளக்குகளின் மேலுள்ள அகல் விளக்குகளையும் ஏற்றுவார்கள். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவா செய்யும்படி சொன்னவற்றை நிறைவேற்றினோம். ஆனால் நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். இறைவன் எங்களோடிருக்கிறார்; அவரே எங்கள் தலைவராயிருக்கிறார். எக்காளங்களுடன் நிற்கும் அவருடைய ஆசாரியர்கள் உங்களுக்கெதிராக போர் முழக்கமிடுவார்கள். இஸ்ரயேல் மக்களே, உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் போரிடாதீர்கள்; ஏனெனில் நீங்கள் வெற்றிபெறமாட்டீர்கள்” என்றான். யெரொபெயாமோ படைகளை யூதாவைச் சுற்றிப் பின்பக்கமாய்ப் போகும்படி அனுப்பினான். இவ்விதமாக அவன் யூதாவுக்கு முன்னால் நின்றான். மறைந்திருந்து தாக்குவோர் அவர்களுக்கு பின்னால் இருந்தனர். யூதா மக்கள் திரும்பிப் பார்த்துத் தாங்கள் முன்னும் பின்னும் தாக்கப்படுவதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை ஊதினார்கள். யூதாவின் மனிதர்கள் போர் முழக்கமிட்டார்கள். அவர்களுடைய போர் முழக்கத்தின்போது இறைவன் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக யெரொபெயாமையும் எல்லா இஸ்ரயேலரையும் முறியடித்தார். இஸ்ரயேலர் யூதாவுக்கு முன்பாகத் தப்பி ஓடினார்கள். இறைவன் அவர்களை யூதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அபியாவும் அவனுடைய மனிதர்களும் இஸ்ரயேலர்களில் பெருமளவில் வெட்டி வீழ்த்தினார்கள். எனவே அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,00,000 வலிமைமிக்க போர்வீரர்கள் இறந்தார்கள். இஸ்ரயேல் மனிதர் அந்த சந்தர்ப்பத்தில் யூதாவுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். யூதாவின் மனிதர் தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்ததினால் வெற்றியடைந்தார்கள்.

2 நாளாகமம் 13:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எங்களுக்கோ யெகோவாவே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்கு ஊழியம்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் மகன்களும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே. அவர்கள் தினந்தோறும் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்து அப்பங்களை அடுக்கிவைத்து, பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளை மாலைதோறும் ஏற்றுகிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவின் நியமங்களைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். இதோ, தேவன் எங்கள் சேனாபதியாக எங்களோடு இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாக முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக போர்செய்யாதீர்கள்; செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்றான். யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு இரகசியப் படையை சுற்றிப்போகச் செய்தான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்த இரகசியப் படை அவர்களுக்குப்பின் இருந்தது. யூதா மக்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் போர் நடக்கிறதைக் கண்டு, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். யூதா மனிதர்கள் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனிதர்கள் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாகத் தோற்கடித்தார். இஸ்ரவேல் மக்கள் யூதாவுக்கு முன்பாகத் தோற்று ஓடினார்கள்; தேவன் அவர்களை யூதாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். அபியாவும் அவனுடைய மக்களும் அவர்களில் பெரும்பகுதியை அழித்தார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள். அப்படியே இஸ்ரவேல் மக்கள் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா மனிதர்களோ தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைச் சார்ந்துகொண்டதால் மேற்கொண்டார்கள்.

2 நாளாகமம் 13:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள். அவர்கள் தகனபலி செலுத்துவார்கள். ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ஆலயத்தில் பரிசுத்தமான மேஜையின் மேல் சமூகத்தப்பங்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் விளக்கை அதற்குரிய தங்கத் தண்டின் மேல் ஏற்றி வைக்கிறார்கள். எனவே அது ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. எங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். ஆனால் யெரொபெயாமாகிய நீயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள். தேவன் தாமே எங்களோடு இருக்கிறார். அவரே எங்களை ஆள்பவர். அவரது ஆசாரியர்களே எங்களோடு இருக்கின்றனர். தேவனுடைய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி உங்களுக்கு எதிராகப் போரிட அழைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களால் வெற்றிபெற இயலாது” என்றான். ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது. அபியாவின் படைவீரர்கள் தம்மைச் சுற்றிப் பார்த்தபோது யெரொபெயாமின் படை வீரர்கள் சுற்றி நின்று முன்னும் பின்னும் தாக்குவதைக் கண்டனர். உடனே யூத ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள். பின்னர் அபியாவின் படையிலுள்ள ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். யூத ஜனங்கள் ஆர்ப்பரித்தபோது தேவன் யெரொபெயாமைத் தோற்கடித்தார். யெரொபெயாமின் இஸ்ரவேல் படைவீரர்களை, அபியாவின் யூதப்படை தோற்கடித்தது. இஸ்ரவேல் ஆண்கள், யூதாவின் ஆண்களைவிட்டு ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படைகளைத் தோற்கடிக்க தேவன் யூதப்படைகளை அனுமதித்தார். அபியாவும் அவனுடைய படைவீரர்களும் இஸ்ரவேல் படை வீரர்களைத் தோற்கடித்து 5,00,000 வீரர்களைக் கொன்றுவிட்டனர். இவ்வகையில் இஸ்ரவேல் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டனர். யூத ஜனங்கள் வென்றனர். யூதப்படை வென்றதற்கான காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருந்ததுதான்.

2 நாளாகமம் 13:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே. அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும், மாலையிலும், பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான். யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப் பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது. யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது. தேவன் யெரொபேயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார். இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலில் வெட்டுண்டு விழுந்தார்கள். அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள்.