2 நாளாகமம் 1:6-12

2 நாளாகமம் 1:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான். அன்று இராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர். இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான், அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என்ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

2 நாளாகமம் 1:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சபைக் கூடாரத்தில் யெகோவாவுக்குமுன் அமைந்திருந்த வெண்கல பலிபீடத்திற்கு சாலொமோன் சென்றான். அங்கே ஆயிரம் தகன காணிக்கைகளைச் செலுத்தினான். அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் காணப்பட்டு, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார். சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தகப்பன் தாவீதிற்கு உமது மிகுந்த தயவைக் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர். இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே, எனது தகப்பன் தாவீதிற்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தம் உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் தூளைப்போல் எண்ணிக்கையுடைய மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கிறீர். எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தாரும். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சிசெய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான். இறைவன் சாலொமோனிடம், “நீ செல்வத்தையோ, செழிப்பையோ, கனத்தையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக என் மக்களை ஆளும்படி நான் உன்னை அரசனாக்கினேன். நீ அவர்களை ஆளுவதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய். இதுவே உனது இருதயத்தின் ஆசையாயிருந்தபடியால், உனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுக்கிறேன். அத்துடன் உனக்கு முன்னிருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், கனத்தையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.

2 நாளாகமம் 1:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான். அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர். இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர். இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான். அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.

2 நாளாகமம் 1:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோன் மேலே ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பிருந்த வெண்கல பலிபீடத்தின் அருகிலே சென்றான். அப்பலிபீடத்தில் சாலொமோன் 1,000 தகனபலிகளைக் கொடுத்தான். அன்று இரவு தேவன் சாலொமோனிடம், “நான் உனக்கு என்ன தரவேண்டும் என விரும்புகிறாய் என்பதை கேள்” என்றார். சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். இப்போது தேவனாகிய கர்த்தாவே! என் தந்தை தாவீதிற்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும். இப்பெரிய நாட்டிற்கு என்னை ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர். பூமியில் உள்ள புழுதியைப் போன்று ஏராளமான அளவில் ஜனங்கள் வசிக்கின்றனர். இப்போது எனக்கு அறிவையும் ஞானத்தையும் நீர் தரவேண்டும். அதனால் இந்த ஜனங்களை சரியான வழியில் நடத்திச் செல்வேன். உம்முடைய உதவி இல்லாமல் எவராலும் இந்த ஜனங்களை ஆள இயலாது!” என்றான். தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும். ஆகையால் நான் உனக்கு அறிவும் ஞானமும் தருகிறேன். ஆனால் அதோடு உனக்குச் செல்வத்தையும் பொருட்களையும் பெருமையையும் தருவேன். இதற்கு முன்னால் இருந்த எந்த ராஜாவுக்கும் கிடைக்காத அளவிற்கு உனக்குச் செல்வமும் சிறப்பும் தருவேன். எதிர்காலத்திலும் இதுபோல் எந்த ராஜாவும் செல்வமும் சிறப்பும் பெறப்போவதில்லை” என்றார்.