1 தீமோத்தேயு 6:9-11

1 தீமோத்தேயு 6:9-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள். ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு.

1 தீமோத்தேயு 6:9-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள்.

1 தீமோத்தேயு 6:9-11 பரிசுத்த பைபிள் (TAERV)

மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும், மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள். நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள்.