1 தீமோத்தேயு 6:6-12

1 தீமோத்தேயு 6:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம். ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம். செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள். ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய்.

1 தீமோத்தேயு 6:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததும் இல்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்பதற்கும் உடுத்துவதற்கும் நமக்கு இருந்தால் அது போதும் என்று இருக்கவேண்டும். செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள். பணஆசை எல்லாத் தீமைகளுக்கும் வேராக இருக்கிறது; சிலர் அதை விரும்பி, விசுவாசத்தைவிட்டு விலகி, அநேக வேதனைகளாலே தங்களைத்தாங்களே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனிதனே, இவைகளைவிட்டு விலகி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் நாடிப் பெற்றுக்கொள். விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாக இருக்கிறாய்.

1 தீமோத்தேயு 6:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)

தன்னிடம் இருப்பதே போதும் என்று ஒருவன் திருப்தி அடைகிறானெனில் அத்துடன் அவனுக்குள்ள தேவபக்தியானது மிகுந்த இலாபமாயிருக்கும், என்பது உண்மை. நாம் இந்த உலகத்துக்கு வரும்போது எதையும் நம்மோடு கொண்டு வரவில்லை. நாம் இறக்கும்போதும் எதையும் கொண்டு போகப் போவதில்லை. எனவே, நம்மிடம் உள்ள உணவு, ஆடை ஆகியவற்றோடு திருப்தி அடையவேண்டும். மேலும் செல்வந்தராக விரும்புகிறவர்கள் சோதனைக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் கண்ணிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். முட்டாள்தனமானதும் ஆபத்தானதுமான ஆசைகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அவை அவர்களைப் பாதித்து, அழிக்கும். பண ஆசையானது எல்லாவிதமான பாவங்களுக்கும் வழி வகுக்கும். சிலர் மேலும், மேலும் பணத்தை விரும்பி உண்மையான போதனையை விட்டுவிட்டார்கள். அதனால் தம் துன்பத்துக்குத் தாமே காரணமாகிறார்கள். நீயோ தேவனுடைய மனிதன். எனவே நீ இவற்றில் இருந்து விலகி இருக்கவேண்டும். சரியான வழியில் வாழ முயற்சி செய். தேவனுக்கு சேவை செய். விசுவாசம், அன்பு, பொறுமை, சாந்தம் ஆகியவற்றை வைத்துக்கொள். விசுவாசம் வைத்தல் பந்தயத்தில் ஓடுவது போன்றது. அதில் வெற்றி பெறக் கடுமையாகப் பாடுபடு. நித்தியஜீவனைப் பற்றிக்கொள். அத்தகைய வாழ்க்கைக்காகவே நீ அழைக்கப்பட்டாய், அநேக மக்களுக்கு முன்னிலையில் கிறிஸ்துவின் பேருண்மையை நீ அறிக்கை பண்ணியுமிருக்கிறாய்.

1 தீமோத்தேயு 6:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம். ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைபண்ணினவனுமாயிருக்கிறாய்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்