1 தீமோத்தேயு 1:12-16
1 தீமோத்தேயு 1:12-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனது கர்த்தர் கிறிஸ்து இயேசுவுக்கு, நான் நன்றி செலுத்துகிறேன். ஏனெனில் அவரே எனக்குப் பெலன் கொடுத்து, என்னை உண்மையுள்ளவனென்று கருதியபடியால், தம் பணியில் என்னை நியமித்தார். நான் முன்னொரு காலத்தில் இறைவனை நிந்தனை செய்கிறவனாகவும், சபையைத் துன்புறுத்துகிறவனாகவும், வன்முறை செய்கிற மனிதனாகவும் இருந்தேன். ஆனால் நான் அறியாமையினாலும், அவிசுவாசத்தினாலும் அப்படிச் செய்தபடியினால், எனக்கு இரக்கம் காட்டப்பட்டது. நமது கர்த்தரின் கிருபை என்மேல் நிறைவாக ஊற்றப்பட்டது. அத்துடன் கிறிஸ்து இயேசுவிலுள்ள விசுவாசமும், அன்பும்கூட கொடுக்கப்பட்டது. இதோ, இது ஒரு நம்பத்தகுந்த வார்த்தை, எல்லோரும் இதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாகும்: பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். அவர்களில் மிக மோசமானவன் நானே. பாவிகளில் மிக மோசமானவனான எனக்கு இந்தக் காரணத்தினாலேயே இரக்கம் காட்டப்பட்டது. ஏனெனில் இனிமேல், கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதனால் நித்திய வாழ்வைப் பெறுகிறவர்களுக்கு, அவர் அளவற்ற பொறுமையைக் காண்பிப்பார் என்பதன் எடுத்துக்காட்டாய் நான் இருக்கவேண்டும் என்றே என்மேல் முடிவில்லாத பொறுமை காட்டப்பட்டது.
1 தீமோத்தேயு 1:12-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான். அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன்.
1 தீமோத்தேயு 1:12-16 பரிசுத்த பைபிள் (TAERV)
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நான் நன்றி கூறுகிறேன், ஏனெனில் என்னை விசுவாசமுள்ளவனாகக் கண்டுணர்ந்து சேவை செய்யும் பொருட்டு அவர் எனக்கு இப்பணியைக் கொடுத்திருக்கிறார். அவர் எனக்கு பலத்தைக் கொடுத்திருக்கிறார். முன்பு நான் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசி துன்பப்படுத்தி, கொடுமையான காரியங்களைச் செய்தேன். ஆனால் தேவன் என்னிடம் கருணையோடு இருந்தார். ஏனென்றால், செய்வதை இன்னதென்று அறியாமல் நான் செய்தேன். அவரை நம்பாதபோது தான் அவற்றைச் செய்தேன். ஆனால் கர்த்தராகிய அவர் தம் முழுமையான கிருபையை எனக்குத் தந்தார். அதோடு கிறிஸ்து இயேசுவில் விசுவாசமும் அன்பும் வந்தது. நான் என்ன சொல்கிறேனோ, அவை உண்மையானவை. நீங்கள் அவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். பாவிகளை மீட்பதற்காகவே கிறிஸ்துவாகிய இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். அவர்களுள் நான் மிக மோசமானவன். ஆனால் எனக்குக் கருணை அளிக்கப்பட்டது. அதனால் என் மூலம் இயேசு கிறிஸ்து எல்லையற்ற பொறுமை உடையவர் என்று புலப்படுத்திவிட்டார். கிறிஸ்து தனது பொறுமையை எல்லா பாவிகளிலும் மோசமான என்னிடம் காட்டினார். அவரை விசுவாசிக்கிறவர்கள் நித்திய வாழ்வைப் பெறுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக நான் இருக்கும்படியாகக் கிறிஸ்து விரும்பினார்.
1 தீமோத்தேயு 1:12-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.