1 தெசலோனிக்கேயர் 5:9-15
1 தெசலோனிக்கேயர் 5:9-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில் இறைவன் நம்மை தமது கோபத்தின் தண்டனையைப் பெறுவதற்காக நியமிக்கவில்லை. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக இரட்சிப்பைப் பெறவே நியமித்திருக்கிறார். நாம் உயிருடன் இருந்தாலும், மரண நித்திரை அடைந்தாலும் கிறிஸ்துவுடன் ஒன்றாய் வாழும்படியாக, அவர் நமக்காக இறந்தார். ஆகையால் நீங்கள் இப்பொழுது செய்கிறதுபோலவே, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி, ஒருவருக்கொருவர் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவுங்கள். பிரியமானவர்களே, இப்பொழுதும் நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது, உங்களிடையே கஷ்டப்பட்டு வேலை செய்கிறவர்களாக, கர்த்தரில் உங்கள் மேற்பார்வையாளராய் இருந்து, உங்களுக்குப் புத்திமதி சொல்கிறவர்களை மதித்து நடவுங்கள். அவர்களுடைய வேலையின் நிமித்தம் அவர்களில் அன்பு செலுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பைக் கொடுங்கள். ஒருவரோடொருவர் சமாதானமாய் வாழுங்கள். பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது, சோம்பலாய் இருக்கிறவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவிசெய்யுங்கள். எல்லோருடனும் பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள். ஒருவரும் தீமையான செயலுக்குப் பதிலாக இன்னொரு தீமையான செயலை செய்யாதபடி கவனமாயிருங்கள். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொருவருக்கும் மற்ற எல்லோருக்கும் நன்மை செய்யவே முயற்சி செய்யுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:9-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவன் நம்மைத் தண்டிப்பதற்காக நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் உயிரோடிருக்கிறவர்களானாலும், மரித்தவர்களானாலும், அவரோடு நாம் ஒன்றாகப் பிழைத்திருப்பதற்காக அவர் நமக்காக மரித்தாரே. ஆகவே, நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவளர்ச்சி உண்டாகும்படிச் செய்யுங்கள். அன்றியும், சகோதரர்களே, உங்களுக்குள்ளே கடுமையாக உழைத்து, கர்த்தருக்குள் உங்களை விசாரணை செய்கிறவர்களாக இருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய செயல்களின் அடிப்படையில் அவர்களை மிகவும் அன்பாக நினைத்துக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாக இருங்கள். மேலும், சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லோரிடத்திலும் நீடியசாந்தமாக இருங்கள். ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:9-15 பரிசுத்த பைபிள் (TAERV)
தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார். அவரோடு நாம் அனைவரும் இணைந்து வாழும்பொருட்டு, நமக்காக அவர் இறந்தார். எனவே, இயேசு வரும்போது, நாம் உயிருடன் இருக்கிறோமோ அல்லது இறந்துபோவோமா என்பது முக்கியமில்லை. எனவே ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருங்கள். மேலும் நீங்கள் செய்துகொண்டிருப்பது போல ஒருவரையொருவர் பலப்படுத்துங்கள். சகோதர சகோதரிகளே! உங்களோடு கடுமையாய் உழைப்பவர்களுக்கு மதிப்பளியுங்கள். கர்த்தருக்குள் அவர்களே உங்கள் தலைவர்கள். ஆத்தும அளவில் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்கள் செய்துகொண்டிருக்கிற செயலுக்காக அவர்களை அன்போடு மதியுங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் வாழுங்கள். சகோதர சகோதரிகளே! உழைக்காத மக்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அஞ்சுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள். பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். எல்லாரிடமும் பொறுமையாய் இருங்கள். ஒருவரும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் நன்மை செய்துகொள்ளவும் எல்லாருக்கும் நன்மை செய்யவும் முயலுங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:9-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே. ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்யநாடுங்கள்.