1 தெசலோனிக்கேயர் 4:9-12

1 தெசலோனிக்கேயர் 4:9-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சகோதர அன்பைக்குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படி, இறைவனே உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறாரே. உண்மையிலேயே மக்கெதோனியா எங்கும் இருக்கிற எல்லா சகோதரர்மேலும், நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இன்னும் அதிகமாய் அப்படிச் செய்யவேண்டும் என்றே உங்களை வேண்டிக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு சொல்லியது போலவே, ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்வதும், உங்கள் சொந்த அலுவல்களையே பார்த்துக்கொள்வதும், உங்கள் கைகளினால் வேலைசெய்வதே உங்கள் முக்கியக் குறிக்கோளாய் இருக்கட்டும். அப்பொழுது உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் புறம்பே இருக்கிறவர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் மற்றவர்களை சார்ந்து வாழவேண்டியதில்லை.

1 தெசலோனிக்கேயர் 4:9-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருப்பதற்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்களே. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்கிலும் உள்ள சகோதரர்களெல்லோருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரர்களே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாகப் பெருகவும்; அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாக இருக்கவிரும்பவும், உங்களுடைய சொந்த வேலைகளைப் பார்க்கவும், உங்களுடைய சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

1 தெசலோனிக்கேயர் 4:9-12 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவுக்குள், உங்கள் சகோதர சகோதரிகளுடன் அன்பாய் இருங்கள் என்று உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஒருவரை ஒருவர் நேசிக்க தேவன் ஏற்கெனவே உங்களுக்குப் போதித்திருக்கிறார். மக்கதோனியாவில் உள்ள எல்லா சகோதரர்களிடமும், சகோதரிகளிடமும் அன்பு செலுத்துகிறீர்கள். மேலும், மேலும் அன்பு செய்யுமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறோம். சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். இவற்றை எல்லாம் நீங்கள் செய்யும்போது விசுவாசமற்ற மக்கள் உங்கள் வாழ்வு முறையை மதிப்பார்கள். உங்கள் தேவைக்கு வேறு எவரையும் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லாதிருக்கும்.

1 தெசலோனிக்கேயர் 4:9-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப்பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.