1 தெசலோனிக்கேயர் 4:13-18

1 தெசலோனிக்கேயர் 4:13-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, மரண நித்திரை அடைகிறவர்களைக்குறித்து, நீங்கள் அறியாமல் இருப்பதை, நாங்கள் விரும்பவில்லை. எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத மற்றவர்களைப்போல், நீங்கள் துக்கமடைவதையும் நாங்கள் விரும்பவில்லை. இயேசு இறந்து உயிருடன் எழுந்தார் என்று நாம் விசுவாசிக்கிறோமே. அப்படியே, இறைவனும் கிறிஸ்துவில் மரண நித்திரையடைந்தோரை இயேசுவுடனேகூட உயிருடன் கொண்டுவருவார் என்றும் விசுவாசிக்கிறோம். கர்த்தருடைய சொந்த வார்த்தையின்படியே நாங்கள் உங்களுக்குச் சொல்கிறதாவது, கர்த்தருடைய வருகைவரைக்கும் இன்னும் உயிருடனிருக்கும் நாமும், நிச்சயமாகவே மரண நித்திரை அடைந்தவர்களுக்கு முந்தி எடுத்துக்கொள்ளப்படமாட்டோம். ஏனெனில் கர்த்தர்தாமே பரலோகத்திலிருந்து இறங்கி வருவார். அவர் பிரதான தூதனுடைய குரல் ஒலிக்க, சத்தமான கட்டளை முழங்க, இறைவனுடைய எக்காள அழைப்புடன் வருவார். அப்பொழுது கிறிஸ்துவில் இறந்தவர்கள் முதலாவதாக எழுந்திருப்பார்கள். அதற்குப் பின்பு, இன்னும் உயிருடனிருக்கும் நாமும், ஆகாயத்திலே கர்த்தரைச் சந்திக்கும்படி, அவர்களுடனேகூட மேகங்களுக்குள் எடுத்துக்கொள்ளப்படுவோம். இவ்விதமாக, நாம் என்றென்றைக்கும் கர்த்தருடனேயே இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:13-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்றியும், சகோதரர்களே, மரித்துப்போனவர்களுக்காக நீங்கள் நம்பிக்கை இல்லாதவர்களான மற்றவர்களைப்போல துக்கப்பட்டு, அறிவில்லாமலிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து, பின்பு உயிரோடு எழுந்திருந்தாரென்று நம்புகிறோமே; அப்படியே இயேசுவிற்குள் மரித்தவர்களையும் தேவன் அவரோடு கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைவரைக்கும் உயிரோடிருக்கும் நாம் மரித்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள்மேல் அவர்களோடு ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாக எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். ஆகவே, இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:13-18 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே! இறந்து போனவர்களைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனைய நம்பிக்கையற்ற மக்களைப் போன்று நீங்கள் வருத்தம் கொள்வதை நாங்கள் விரும்புவதில்லை. இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார். கர்த்தரின் செய்தியையே நாங்கள் இப்போது உங்களுக்குக் கூறுகிறோம். இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிற நாம் கர்த்தர் வரும்போதும் ஒருவேளை வாழ்ந்துகொண்டிருப்போம். ஏற்கெனவே மரித்தவர்கள் கர்த்தரோடு இருப்பார்கள். உயிரோடிருக்கிற நாமும் அவரோடிருப்போம். ஆனால் நாம் அவர்களுக்கு (ஏற்கெனவே இறந்தவர்களுக்கு) முந்திக்கொள்வதில்லை. கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள். அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம். ஆகவே இவ்வார்த்தைகளால் ஒருவரையொருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 4:13-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.