1 சாமுவேல் 9:1-27

1 சாமுவேல் 9:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில் கீஷ் என்னும் பெயருடைய மதிப்புள்ள பென்யமீனியன் ஒருவன் இருந்தான். அவன் அபியேலின் மகன்; அபியேல் சேகோரின் மகன்; சேகோர் பெகோராத்தின் மகன்; பெகோராத் பென்யமீனியனான அபியாவின் மகன். கீஸ் என்பவனுக்கு சவுல் என்னும் பெயருள்ள ஒரு மகன் இருந்தான். அவன் கவர்ச்சியான தோற்றமும், இஸ்ரயேல் மக்களுக்குள் தன்னிகரற்ற இளைஞனாகவும் இருந்தான். மற்ற எல்லோரும் அவனுடைய தோளுக்குக் கீழாகவே இருந்தனர். ஒரு நாள் சவுலின் தகப்பனான கீஷின் கழுதைகள் காணாமல் போய்விட்டன. எனவே கீஷ் தன் மகன் சவுலிடம், “நீ வேலைக்காரரில் ஒருவனை உன்னோடு கூட்டிக்கொண்டுபோய்க் கழுதைகளைத் தேடிப்பார்” என்றான். அப்படியே அவர்கள் எப்பிராயீம் மலைநாட்டின் வழியாகச் சென்று சலீஷாவைச் சுற்றியுள்ள பகுதி வழியாகப்போனார்கள். ஆனால் அங்கே கழுதைகளைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து சாலீம் மாவட்டத்திற்கு போனபோது அங்கேயும் கழுதைகளில்லை. அதன்பின் பென்யமீன் பிரதேசத்தைக் கடந்து வந்தபோது அங்கேயும் அவைகளைக் காணவில்லை. அவர்கள் சூப் மாவட்டத்திற்கு வந்தபோது சவுல் தன் வேலைக்காரரிடம், “என் தகப்பன் கழுதைகளுக்காகக் கவலைப்படுவதைவிட்டு எங்களுக்காகக் கவலைப்படத் தொடங்கிவிடுவார். அதனால் வீட்டுக்குத் திரும்பிப்போவோம் வா” என்றான். அதற்கு அந்த வேலையாள், “இப்பட்டணத்தில் இறைவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார். அவர் மிகவும் மதிப்புக்குரியவர்; அவர் சொல்வது அனைத்தும் உண்மையாய் நடக்கிறது. நாம் இப்பொழுது அவரிடம் போவோம். நாம் போகவேண்டிய பாதையை ஒருவேளை அவர் நமக்கு வெளிப்படுத்துவார்” என்றான். அப்பொழுது சவுல் அவனிடம், “நாம் அங்கே போவோமானால் அந்த மனிதனுக்கு எதைக் கொண்டுபோகலாம்? நம்முடைய பைகளில் இருந்த உணவு முடிந்து விட்டதே. இறைவனுடைய மனிதனுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது?” என்றான். அதற்கு அந்த வேலையாள் சவுலிடம், “இதோ என்னிடம் இன்னும் கால் சேக்கல் வெள்ளி இருக்கிறது. நம் வழியை நமக்குக் காட்டும்படி இந்தப் பணத்தை இறைவனுடைய மனிதனுக்கு நான் கொடுப்பேன்” என்றான். முற்காலத்தில் இஸ்ரயேலில் இறைவனிடம் ஆலோசனை கேட்க ஒருவன் போகும்போது அவன், “வாருங்கள், தரிசனக்காரனிடம் போவோம்” என்பான். ஏனெனில் இக்காலத்து இறைவாக்கினர், அக்காலத்தில் தரிசனக்காரர் என அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது சவுல் தன் வேலையாளிடம், “சரி வா போவோம்” என்றான். அப்படியே அவர்கள் இறைவனின் மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்கு புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் குன்றின்மேல் ஏறிப் பட்டணத்திற்குப் போகும் வழியில் தண்ணீர் எடுக்க வந்த பெண்களைக் கண்டு அவர்களிடம், “இங்கு தரிசனக்காரன் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், “ஆம், இங்கே சிறிது தூரத்தில் இருக்கிறார். இன்று மக்கள் மேடையில் பலியிடப்போவதால் அவர் எங்கள் பட்டணத்திற்கு வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் விரைவாக அங்கே செல்லுங்கள். நீங்கள் பட்டணத்திற்குள் சென்றவுடன் அவர் மேடைக்குச் சாப்பிடப் போகுமுன் அவரைச் சந்திக்கலாம். அவர் அங்குபோய் பலிசெலுத்தியவற்றை ஆசீர்வதிக்க வரும்வரைக்கும் மக்கள் சாப்பிடத் தொடங்கமாட்டார்கள். அதன்பின் அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். ஆகையால் இப்பொழுது மேலே போனால் அவரை இந்த நேரத்தில் அங்கே சந்திக்கலாம்” என்றார்கள். அவர்கள் மேலே ஏறிப் பட்டணத்திற்கு வந்தபோது, சாமுயேல் மேடைக்கு வரும் வழியில் அவர்களுக்கு எதிரே வந்தான். சவுல் அவ்விடம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே யெகோவா சாமுயேலுக்கு அவன் வருகையைத் தெரியப்படுத்தினார். “நாளைக்கு இந்நேரத்தில் பென்யமீன் நாட்டிலிருந்து ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக அவனை அபிஷேகம்பண்ணு. அவன் என் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிப்பான். என் மக்களின் அழுகுரல் என்னிடம் எட்டியதால் நான் அவர்களை நோக்கிப் பார்த்தேன்” என்றார். சாமுயேல் சவுலைக் கண்டதும் யெகோவா அவனிடம், “நான் உனக்குக் குறிப்பிட்டுச் சொன்ன மனிதன் இவனே. இவன் என் மக்களை ஆளுகை செய்வான்” என்று சொன்னார். அப்பொழுது சவுல் நுழைவுவாசலில் சாமுயேலை அணுகி அவனிடம், “தரிசனக்காரனின் வீடு எங்கே? என தயவுசெய்து எனக்குச் சொல்வீரோ” என்று கேட்டான். அதற்கு சாமுயேல், “நானே அந்த தரிசனக்காரன். நீ எனக்கு முன்னே மேடைக்குப்போ. நீ இன்று என்னுடன் சாப்பிடவேண்டும். நாளை காலையில் நான் உன்னைப் போகவிடுவேன். உன் இருதயத்தில் உள்ளவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன். மூன்று நாட்களுக்குமுன் காணாமற்போன உங்கள் கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை கண்டுபிடிக்கப்பட்டது. உன்னையும், உன் தகப்பன் குடும்பத்தினர் எல்லோரையும்விட வேறு யாரை இஸ்ரயேலர் விரும்பியிருக்கிறார்கள்” என்றான். அதற்கு சவுல், “நான் இஸ்ரயேலின் மிகச்சிறிய கோத்திரமான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? என் வம்சம் பென்யமீன் கோத்திர வம்சங்கள் எல்லாவற்றிலும் சிறியது அல்லவா? அப்படியிருக்க இப்படியான காரியத்தை என்னிடம் நீர் ஏன் சொல்கிறீர்?” என்று கேட்டான். அப்பொழுது சாமுயேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் மண்டபத்தினுள் அழைத்துச்சென்று அழைக்கப்பட்ட முப்பது பேர்களுக்குள்ளே முதன்மையான இடத்தில் அவர்களை நிறுத்தினான். மேலும் சாமுயேல் சமையற்காரனிடம், “வேறாக எடுத்து வைக்கும்படி சொல்லி நான் உன்னிடம் கொடுத்த அந்த இறைச்சித் துண்டைக் கொண்டுவா” என்றான். அப்படியே சமையற்காரன் ஒரு தொடையையும், அதைச் சேர்ந்த பகுதியையும் எடுத்து சவுலுக்குமுன் வைத்தான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இது உனக்காகவே வைக்கப்பட்டது. இதைச் சாப்பிடு. ஏனெனில் நான் விருந்தாளிகளை அழைத்திருக்கிறேன் என்று சொன்ன நேரம் தொடக்கமுதல் இத்தருணத்திற்காக அது புறம்பாக வைக்கப்பட்டிருக்கிறது” என்றான். அன்று சவுல் சாமுயேலுடன் விருந்து சாப்பிட்டான். அதன்பின் அவர்கள் மேடையில் இருந்து நகருக்குள் வந்தபோது, சாமுயேல் தன் வீட்டின் மேல்மாடியில் சவுலோடு பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அதிகாலையில் எழுந்தார்கள். சாமுயேல் மேல்மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, அவனிடம், “நான் உன்னை வழியனுப்பி வைக்கவேண்டும். ஆயத்தப்படு” என்றான். சவுல் ஆயத்தமானபின் சாமுயேலும், சவுலும் சேர்ந்து வெளியே சென்றார்கள். அவர்கள் இருவரும் பட்டணத்தின் எல்லையை அடைந்ததும், சாமுயேல் சவுலிடம், “உன் வேலையாளை உனக்கு முன்னே நடந்து போகச் சொல். ஆனால் இறைவனின் வார்த்தையை நான் உனக்குத் தெரியப்படுத்தும்வரை நீ சிறிது தாமதித்துச் செல்” என்றான். எனவே வேலையாள் அவனுக்கு முன்னே போனான்.

1 சாமுவேல் 9:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன். அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான். சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை. அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான். அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள். அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான். சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே யெகோவா சாமுவேலின் காது கேட்கும்படி: நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார். சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான். அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான். சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 30 பேராக இருந்தார்கள். பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான். அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான்.

1 சாமுவேல் 9:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)

பென்யமீன் கோத்திரத்தில் கீஸ் முக்கியமானவனாக இருந்தான். இவன் அபியேலின் குமாரன். அபியேல் சேரோரின் குமாரன், சேரோர் பெகோராத்தின் குமாரன், பெகோரோத் பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த அப்பியாவின் குமாரன். கீஸுக்கு சவுல் என்ற குமாரன் இருந்தான். இவன் அழகான இளைஞன். இவனைப்போல் அழகுள்ளவன் யாரும் இல்லை. இஸ்ரவேலில் எல்லோரும் இவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரம் இருந்தான். ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் குமாரன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான். சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, சவுலும் வேலைக்காரனும் சூப் நாட்டிற்கு வந்தனர். சவுல் தன் வேலைக்காரனிடம், “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப்பற்றி கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றான். ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான். சவுல் தன் வேலைக்காரனிடம், “உறுதியாக, நாம் நகருக்குள் போவோம், ஆனால் அவருக்கு எதைக் கொடுப்பது? தேவமனிதனுக்கு கொடுக்க அன்பளிப்புகள் எதுவுமில்லை. நம்மிடம் உணவு கூட இல்லையே?” என்றான். மீண்டும் அந்த வேலைக்காரன், “பாருங்கள், என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. இதனைத் தேவமனிதனுக்கு கொடுப்போம். பிறகு நாம் அடுத்துப் போக வேண்டிய இடத்தைப்பற்றி அவர் சொல்வார்” என்றான். சவுல் தனது வேலைக்காரனிடம், “நல்ல யோசனை! நாம் போவோம்!” என்றான். எனவே, தேவமனிதன் தங்கி இருந்த நகருக்கு அவர்கள் சென்றார்கள். சவுலும், வேலைக்காரனும் நகரை நோக்கி மலை மீது ஏறிக்கொண்டிருந்தனர். சாலையில் அவர்கள் சில இளம் பெண்களை சந்தித்தார்கள். அந்த இளம் பெண்கள் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருத்தார்கள். சவுலும், வேலைக்காரனும் அந்த இளம் பெண்களிடம், “சீயர் இங்குதான் இருக்கிறாரா?” என்ற கேட்டார்கள், (முற்காலத்தில், இஸ்ரவேலில் இருந்த ஜனங்கள் தீர்க்கதரிசியை, “சீயர்” என்று அழைத்தார்கள். எனவே, அவர்கள் தேவனிடம் ஏதேனும் கேட்க வேண்டியிருந்தால், “நாம் சீயரிடம் போகலாமா?” என்பார்கள்.) அந்த இளம் பெண்கள், “ஆம், சீயர் இங்குதான் இருக்கிறார். அவர் சாலையில் சற்று தூரத்தில் தங்கி இருக்கிறார். அவர் இன்றுதான் ஊருக்கு வந்தார். சமாதான பலிகளைச் செலுத்துவதற்காக இன்று சிலர் அவரை ஆராதனை இடத்தில் சந்திக்கிறார்கள். ஊருக்குள் நீங்கள் விரைவாகச் சென்றால், ஆராதனை செய்யுமிடத்தில் அவர் உண்ணப்போகும் முன் அவரைச் சந்தித்துவிடலாம். அத்தீர்க்கதரிசி பலியை ஆசீர்வதிப்பார். எனவே அவர் அங்கு சேரும் முன்பு ஜனங்கள் உண்ணத் தொடங்கமாட்டார்கள். எனவே, நீங்கள் கொஞ்சம் விரைவாகச் சென்றால் அத்தீர்க்கதரிசியை சந்திக்க முடியும்” என்றார்கள். சவுலும் அவனது வேலைக்காரனும் நகரை நோக்கி மலையில் ஏறத்தொடங்கினார்கள். நகருக்குள் நுழையும் சமயத்தில், சாமுவேல் அவர்களை நோக்கி வந்தான். அப்பொழுதுதான் சாமுவேல் ஆராதனை இடத்திற்கு போக நகரை விட்டு வெளியே வந்துக்கொண்டிருந்தான். சவுல் வருவதற்கு ஒருநாள் முன்பு, கர்த்தர் சாமுவேலிடம், “நாளை இந்நேரத்தில் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தில் உள்ளவன். அவனை இஸ்ரவேல் ஜனங்களின் புதிய தலைவனாக நீ அபிஷேகம் செய். அவன் பெலிஸ்தர்களிடமிருந்து என் ஜனங்களைக் காப்பாற்றுவான். நான் என்னுடைய ஜனங்களின் துன்பத்தைப் பார்த்திருக்கிறேன். அழுகையைக் கேட்டிருக்கிறேன்.” என்றார். சாமுவேல் சவுலைப் பார்த்தான். அப்போது கர்த்தர், “நான் சொன்னது இவனைப் பற்றித்தான். இவனே எனது ஜனங்களை ஆள்வான்” என்றார். சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிறதென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான். அதற்கு சாமுவேல், “நானே சீயர், நீ எனக்கு முன்பாக ஆராதனை இடத்திற்கு மேடையின்மேல் ஏறிப்போ! இன்று என்னோடு சேர்ந்து நீயும் உனது வேலைக்காரனும் சாப்பிடுங்கள். நான் உங்களை நாளைக் காலையில்தான் போகவிடுவேன். உனது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வேன். மூன்று நாட்களுக்கு முன்னால் இழந்த கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அவைக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அனைத்து இஸ்ரவேலரும் உன்னை விரும்புகின்றனர்! அவர்கள் உன்னையும் உன் குடும்பத்திலுள்ள அனைவரையும் விரும்புகின்றனர்” என்றான். அதற்கு சவுல், “ஆனால் நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இதுதான் இஸ்ரவேலில் மிகவும் சிறிய கோத்திரம், இதில் எனது குடும்பந்தான் பென்யமீன் கோத்திரத்திரலே மிகவும் சிறியது. இவ்வாறிருக்க இஸ்ரவேல் என்னை விரும்புவதாக எப்படி சொல்கிறீர்?” என்று கேட்டான். பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான். சாமுவேல் சமையற்காரனிடம், “நான் எடுத்து வைக்கச் சொன்ன இறைச்சியின் ஒரு பகுதியைப் பரிமாறு” என்றான். சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான். அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான். சவுல் அதில் உறங்கினான். மறுநாள், அதிகாலையில் சவுலை மேல் வீட்டிற்கு அழைத்தான். “எழு, நான் உன்னை உன் வழியிலே அனுப்புவேன்” என்றான். அவனும் தயார் ஆகி சாமுவேலோடு வீட்டைவிட்டு வெளியேறினான். சவுலும் வேலைக்காரனும் சாமுவேலோடு ஊரின் எல்லைக்கு சென்றனர். சாமுவேல் சவுலிடம் “உனது வேலைக்காரனை நமக்கு முன்னே போகச் சொல். நான் உனக்காக தேவனிடமிருந்து ஒரு செய்தியை வைத்திருக்கிறேன்” என்றான். வேலைக்காரனும் முன் நடந்தான்.

1 சாமுவேல் 9:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன். அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை. அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான். அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான். அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம் பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள். அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான். சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காது கேட்க: நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான். அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராயிருந்தார்கள். பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான். அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கி வந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்து நில் என்றான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்